

கா
ஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் பஞ்சாயத்தின் கீழ் உள்ளது கீழார்கொள்ளை கிராமம். இங்குள்ள மக்களில் பலருக்கு உழவே தொழில். அதனாலோ என்னவோ, பல குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளன.
இவர்களுக்கு உழவிலிருந்து வரும் வருமானத்தைத் தவிர்த்து, கூடுதல் வருமானத்துக்கு வழிசெய்யும் விதமாக, சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம், கொடுவா மீன் நாற்றாங்கால் வளர்க்க உதவி செய்துவருகிறது.
செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ‘கொடுவா மீன் நாற்றாங்கால் வளர்ப்புத் திட்ட’த்தின் முதல் அறுவடை, இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. நிறுவனம் வழங்கிய சுமார் 5 ஆயிரம் கொடுவா மீன் குஞ்சுகளில் சுமார் 2 ஆயிரம் மீன் குஞ்சுகள், விரலிகளாக வளர்க்கப்பட்டு, மீன் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்தத் திட்டத்தை ஆர்வமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட அந்த முதல் ‘மீனவர்களுக்கு’ (இவர்கள் தொழில்முறை மீனவர்கள் கிடையாது) கடந்த 21-ம் தேதி, ‘உலக மீன்வள நாள’ன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வி.செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மீன் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.