

கடந்த சில வாரங்களாகத் தக்காளி விலை கிட்டத்தட்டக் கிலோ ரூ.200யை நெருங்கியது. சற்றே தணிந்திருந்த விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பொதுவாகத் தக்காளி விவசாயிகள் மிதமிஞ்சிய விளைச்சலால் பல முறை சரியான விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் இப்போது ஏற்பட்டுள்ள தக்காளித் தேவையை தக்காளி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு உடுமலைப்பேட்டை பகுதியில் அதிகமானோர் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2,000 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது 70 நாள்களில் அறுவடைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வறட்சி அதிகரிக்கலாம்! - நாட்டின் பல பகுதிகளில் இயல்பைவிட அதிக அளவுக்கு மழை பெய்தாலும், குறைந்தபட்சம் 25.1 சதவீதம் பகுதி வறட்சி சூழலை எதிர்கொள்ளக்கூடும் என வறட்சியை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பான டி.இ.டபுள்யூ.எஸ். தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் வறட்சி கண்காணிப்பு தளமான காந்திநகர் ஐஐடியின் இந்த அமைப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏப்ரல் 27இல் பதிவுசெய்யப்பட்ட வறட்சி 22.4 சதவீதம். அதுவே ஜூன் 26 இல் 23.8 சதவீதமாகவும் ஜூலை 19இல் 24.4 சதவீதமாகவும் ஜூலை 26இல் 25.1 ஆக அது அதிகரித்துள்ளது கவனம் கொள்ளத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வறட்சிப் பரப்பு 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை 26, 2022 இல் இது 18.1 சதவீதமாக இருந்தது
முட்டை விலை அதிகரிப்பு: நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை விலை 10 காசு உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.
ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ரூ.4.80 இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோவின் விலை ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.50 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு: நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்பட்டுவரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடப்பு ஆண்டில் 2.50 லட்சம் டன் கரும்பை அரவை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
இந்தப் பருவத்திற்கு இதுவரை 4,270 ஏக்கர் பரப்பளவில் கரும்புப் பயிரிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கரும்புப் பயிரிட்டு இதுநாள் வரை ஆலையின் அரவைக்குப் பதிவுசெய்யாத விவசாயிகள், அந்தந்தப் பகுதி கோட்டக் கரும்பு அலுவலகத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.