

மக்களவையில் ஜூலை 23 அன்று ‘வெப்ப அலைகளால் ஏற்பட்ட இறப்புகள்’ குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, இந்த ஆண்டு வெப்ப அலைகளால் 14 மாநிலங்களில் குறைந்தது 264 பேர் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது, இதில் 120 இறப்புகள் கேரளத்தில் பதிவாகியுள்ளன.
குஜராத்தில், இந்த ஆண்டு வெப்ப அலையால் 35 பேர் இறந்துள்ளனர். நாட்டில் இந்த ஆண்டு வெப்ப அலைகளால் ஏற்பட்ட மரணங்களில் 59 சதவீதம் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் பதிவாகி உள்ளது. வெப்ப அலைகளால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 2015க்குப் பிறகு இந்த ஆண்டே அதிகம்.
ஐபிசிசியின் புதிய தலைவர்: காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் (ஐபிசிசி) புதிய தலைவராக ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் ஸ்கீ (James Skea) ஜூலை 26, 2023 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வளங்குன்றா ஆற்றல் துறையின் பேராசிரியராக ஸ்கீ பணியாற்றிவருகிறார்.
காலநிலை அறிவியலில் 40 ஆண்டுகால அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டவர் அவர். ஐபிசிசியின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கைக்கான பணிக் குழு 3இன் இணைத் தலைவராக ஸ்கீ இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.