கான்கிரீட் காட்டில் 09: ஓடு கழன்ற நத்தை

கான்கிரீட் காட்டில் 09: ஓடு கழன்ற நத்தை
Updated on
1 min read

ழைக்காலம் வந்துவிட்டால் போதும், கறுப்பான ஒரு வகை நத்தை எங்கள் வீட்டுக்கு வெளிப்பகுதியில் ஈரப்பதமான இடங்களில் ஊர ஆரம்பித்துவிடும். சில நேரம், கதவு இடுக்குகள் வழியாக வீட்டுக்குள்ளும் இவை ஊர்ந்து வந்துவிடும்.

இது ஒரு வகை ஓடற்ற நத்தை. ஆங்கிலத்தில் Tropical Leatherleaf, Black Garden Slug என்று அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு தோல் இலையைப் போன்றிருப்பதால் ஆங்கிலத்தில் அப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

தென்னிந்தியா முழுக்க பரவலாகத் தென்படக்கூடியது. சுமார் 4-5 செ.மீ. நீளம் கொண்ட இந்த ஓடற்ற நத்தை நீட்டிக்கொள்ளவும் குறுக்கிக்கொள்ளவும் கூடிய நெகிழ்வான உடலைப் பெற்றது. ஏதாவது ஆபத்து வந்தால் உடலை குறுக்கிக்கொள்ளவோ சுருட்டிக்கொள்ளவோ செய்யும். தாவரஉண்ணியான இதைத் தோட்டங்கள், வயல்கள், காலி மனைகளில் பார்க்கலாம். இரவில், அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் மிகுந்த இடங்களில் சட்டென்று கண்களில் படும்.

ஒரு பகுதியிலோ வீட்டிலோ இது தென்படுகிறது என்றால், சுற்றுச்சூழல் மோசமாகச் சீரழியாமலும், அந்த நத்தைக்கு அதிக தொந்தரவு இல்லாமலும் அப்பகுதி இருக்கிறது என்று அர்த்தம். பலரும் இந்த நத்தையை முன்னதாகப் பார்த்திராததால் ஏதோ விநோத உயிரினம் என்றோ, பொதுவாகப் பூச்சிகளின் மீதுள்ள விரோதம் காரணமாகவோ வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஓடுள்ள நத்தைகளைப் போலவே, இதுவும் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத சாது. இருட்டில் தெரியாமல் மிதித்துவிடுவதால் இவை இறந்து போவதும் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in