குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! -  கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி
Updated on
2 min read

மிழகத்தில் நிழலுக்காகவும், பசுமைப் பரப்பளவை அதிரிப்பதற்காகவும் நட்ட மரக்கன்றுகளை, நீரின்றி பாதுகாப்பது கடினமான விஷயம். இந்நிலையில், குறைந்த அளவு நீரில் செடிகளை விரைவாக வளரச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ளார் அரசு அதிகாரி கே.சத்யகோபால்.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள சத்யகோபால், வறட்சி நிவாரணம் - பேரிடர் மேலாண்மைத் துறையைக் கவனிப்பதுடன், அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ள சத்யகோபால், மரம் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

“நான் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவன். சில ஆண்டுகள் வேளாண் துறையில் பணியாற்றியுள்ளேன். எனக்குத் தாவரங்கள் தொடர்பாகவும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரி்ப்பதிலும் இருந்த ஆர்வத்தாலும் இந்தத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது” என்கிறார்.

தற்போது அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலும், வேறு பல்வேறு திட்டங்களின் கீழும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சதவீத கன்றுகளே உயிர் பிழைகின்றன. பெரும்பாலானவை பிழைக்க முடியாமல் போவதற்கு தண்ணீர்ப் பற்றாக்குறையும் முக்கியக் காரணம்.

இந்தச் சூழலில் இவரது தொழில்நுட்பம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு முதலே ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “வழக்கமாக மரக்கன்று நட்டு தண்ணீர் விடும்போது, அந்த நீர் குறிப்பிட்ட ஆழத்துக்கே இறங்கும். சொட்டுநீர் பாசனத்திலும் இதே நிலைதான். இதனால் மரக்கன்று வளரத் தாமதமாகும்.

என்னுடைய முறையில் மரக்கன்றுகளை நடும்போது சலிக்கப்படாத ஆற்று மணல், மண்புழு உரம் ஆகியவற்றை செடிக்காகத் தோண்டப்படும் குழியில் அதிக அளவில் இட வேண்டும். அத்துடன் குழியின் நான்கு மூலைகளிலும், 2 அல்லது 3 அடி ஆழமும், 3 அல்லது 4 அங்குல விட்டமும் உள்ள பிளாஸ்டிக் குழாயை வைத்து, மண்ணை மூட வேண்டும்.

அந்தக் குழாயிலும், சலிக்கப்பட்ட ஆற்று மணல், இயற்கை உரத்தைக் கலந்து நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு குழாயை எடுத்துவிட வேண்டும். அதன்பின் நீரை ஊற்ற வேண்டும். இதனால், மரத்தின் நான்கு புறமும் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டு வேர்வரை செல்லும்.

வேர்ப் பகுதிக்கு நீர் செல்லும்போது உரமும் சேர்வதால் மரக்கன்றோ செடியோ விரைவாக வளர ஆரம்பிக்கும். இம்முறையில், மரக்கன்று வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது” என்கிறார். இந்த உத்தியின் மூலம், வறட்சிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் துவண்டிருக்கும் மரங்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் சத்யகோபால்.

இவர் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறையை அடுத்து, வேளாண் துறையும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

“நான் அறிமுகப்படுத்திய இந்த முறையில், நீருக்கான செலவு குறைவு. சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீரை ‘பம்ப்’ செய்வதற்கான மின்சாரப் பயன்பாடும் குறைகிறது. எனவே, இதனால் ஏற்படும் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பரீட்சார்த்த முறையில் இதை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் முயற்சியை வேளாண் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சத்யகோபால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in