

உ
யிர்களின் வளர்ச்சி நிலைகளில் பருவகாலங்களும் தட்ப வெப்பமும் முக்கியப் பங்காற்றுகின்றன. புவியின் பருவநிலைகளும் தட்பவெப்பமும் கதிரவனைப் புவி சுற்றுவதால் ஏற்படுகின்றன. இதுவும் கதிரவனிடமிருந்து வரும் வெயிலின் வெப்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
நம் புவிப் பந்து, செப்பமான கோளமாக இல்லாமல் ஒரு நீள்வட்ட வடிவான கோளமாக உள்ளது. இதன் நடுப் பகுதியை நாம் ஒரு கற்பனைக் கோட்டால் இரண்டாகப் பிரிக்கிறோம். அதன் பெயர் நிலநடுக்கோடு அல்லது நண்ணிலக்கோடு. வடமொழியில் சொல்வதானால் பூமத்தியரேகை.
இந்தக் கோட்டின் தென்பக்கமும் வடபக்கமுமாகப் புவி பிரித்தறியப்படுகிறது. தென் அரைக் கோளம், வட அரைக்கோளம் என்பது இவற்றின் பெயர். நடுக்கோட்டின் வடபக்கம் அமைந்துள்ள கடகக்கோடும் (கடகரேகை) தென்பக்கம் அமைந்துள்ள சுறவக்கோடும் (மகரரேகை) அமைந்த பகுதி வெப்பமண்டலப் பகுதி.
கதிரவன் மகரத்தில் தொடங்கி, கடகத்தில் முடிவதும் பின் திரும்ப கடகத்தில் தொடங்கி மகரத்தில் முடிவதும் தொடர் நிகழ்வு. இதனால் பருவ காலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன.
அடிப்படையில் புவிப் பந்தின் இயற்கை அமைப்பைச் செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வருமாறு வகுக்கலாம்.
முதலில் அடர்ந்த காடுகளைக் கொண்ட நிலநடுக்கோட்டுப் பகுதி. உலகத்தின் முக்கியமான காடுகள், புவியின் நுரையீரல்கள் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கக் கண்டத்தின் அமேசான் காடுகள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் காங்கோ காடுகள், தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ காடுகள், ஆசியாவின் மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகள் என்று அடிப்படையான காடுகள் அமைந்த பகுதி.
அதற்கடுத்தாற்போல் அதாவது காடுகளைவிட்டு நகர்ந்து சென்றால் புல்வெளிகள் அமைந்துள்ளன. புல்வெளிகளுக்கு அப்பால் ஊசியிலைக்காடுகள் அமைந்துள்ளன. அதற்கடுத்தாற்போல் துந்திரப் பகுதிகள் காணப்படுகின்றன. அதற்கு அடுத்த பகுதி புவியின் இரு முனைகளான ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகள்.
இந்தப் புவி அமைப்பில் வெப்ப மண்டலப் பகுதியின் சிறப்பு என்னவென்றால், ஒரு நாள் (24 மணி நேரம்) என்பது கிட்டத்தட்ட 12 மணி நேரப் பகல், 12 மணி நேர இரவு என்று காணப்படுகிறது. அதே நேரம் வடக்குலக நாடுகளில் இந்த இரவு பகல் காலங்கள் மாறிக் கிடக்கின்றன. நள்ளிரவில் கதிரொளி தரும் நாடாக நார்வே அமைந்துள்ளது.
எனவே, வெப்ப மண்டலப் பகுதியில் நல்ல மழையும் நல்ல வெயிலும் கிடைக்கின்றன. அதனால் மரங்கள், செடிகள் நிறைந்து செழித்துக் காணப்படுகின்றன. இதனால் கால்நடைச் செல்வம் அதிகம் உள்ளது. உண்மையில் இயற்கை வளங்கள் நிறைந்த செல்வச் செழிப்பான பகுதியாக வெப்ப மண்டல நாடுகளே அமைந்துள்ளன. ஆனால், இப்போது பணக்கார நாடுகளின் பட்டியலில் வெப்ப மண்டல நாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. வறுமை நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் பல வந்துள்ளன.
ஐரோப்பியர்கள் வெப்ப மண்டல நாடுகளின் செல்வ வளங்களைக் கண்டு மயங்கி, அவற்றின் மீது படையெடுத்தனர். அதன் விளைவாக அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள் வறுமையடைந்தன. தொழில்நுட்பம் என்ற பெயரில் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் அணுகுண்டுகளையும் பயன்படுத்தி அறத்துக்குப் புறம்பான முறைகளில் ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளைக் கைப்பற்றின. இப்படி வறுமைப்பட்ட நாடுகளின் வரலாறும் மரபும் சிறப்பு மிக்கவை. உலகின் பழமையான நாகரிகங்களைக் கொண்டவை.
(அடுத்த வாரம்:
தமிழர்களின் பருவநிலை அறிவு)
கட்டுரையாளர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு:
pamayanmadal@gmail.com