

சி
ப்பிப்பாறை நாய்கள், மதுரை, ராம்நாட், திண்டுக்கல் போன்ற இடங்களிலும் பரவி உள்ளன. அவற்றுள் பல அந்த இடங்களில் உள்ள வேறு நாட்டு நாய்களுடன் கலந்து போயின. சில இடங்களில் கலப்பு ஆகாமல் அதன் உருவ அமைப்பைத் தக்கவைத்து கொண்டன.
சிப்பிப்பாறையும் ராமநாதபுரம் சாம்பல் நாயும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றபோதும் இவை அங்கு அந்த நிலத்தில் வேறு பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் அந்தப் பகுதி சாம்பல் நாய்கள் ‘ராமநாதபுரம் மண்டை நாய்’ என்றும் ‘மந்தை நாய்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அந்தப் பகுதி மக்கள் வழங்கிய பெயர்கள் அல்ல.
அங்கு பெரும்பாலும் இந்த வகை நாய்களுக்கு, நிறத்தின் அடிப்படையில்தான் பெயர் சூட்டப்படுகின்றன. சாம்பத் தழுகினி, மயிலத் தழுகினி, செவத்த தழுகினி என்றும், சாம்பல் நிறம் அதிகமாக இருப்பதால் சாம்ப நாய் என்றும் ஒரு நிறம் ஒரு பக்கம் மட்டும் படிந்தாற்போல வந்தால் அவற்றை அப்பிவேக்கு என்றும் அழைப்பர்.
1969-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி வெளிவந்த ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ இதழில், நாய்கள் குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரைக்கு வந்த வாசகர் கடிதம் ஒன்று, அடுத்த இதழில் வெளியானது.
‘சிப்பிப்பாறை’ என்ற தலைப்பின் கீழ், அந்த நாயின் படத்தையும் கொடுத்து, அதை விவரித்தும் இருந்தார் டி.டி.இவான் என்ற வாசகர். இவர் ராஜபாளையத்துக்காரர் என்பது கூடுதல் தகவல். அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:
‘சிப்பிப்பாறை நாய்கள் நல்ல உடலமைப்பைக் கொண்டவை. மடிந்த காதுகளுடனும், சாம்பல் நிறத்துடனும் இருக்கும் இவை சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டி தாலுக்காவில் பரவி இருந்தன’. நான் அறிந்த வரையில், அசலான சிப்பிப்பாறை நாய்களைப் பற்றிய கடைசி பதிவு அதுதான்!
அதன் பின்னர் ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ போன்றவை, சிப்பிப்பாறை என்ற பெயரின் கீழ் கன்னி இன நாய்களைச் சேர்த்தனர். அதனால் கூர்நாசி கன்னி நாய்களும் சிப்பிப்பாறை நாய்களும் ஒன்றுதான் என்ற எண்ணம் உருவானது. 1980-களுக்குப் பின்னர் கறுப்பு நிறத்துடன் வந்தால் கன்னி என்றும், வேறு நிறத்தில் வந்தால் சிப்பிப்பாறை நாய் என்றும் அழைக்கப்பட்டன.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தால் அசல் சிப்பிப்பாறை சாம்பல் நாய்களின் வேட்டைப் பயன்பாடு குறைந்ததால், அவை இன்று அரிதாகிவிட்டன. அதற்கு முன்னர் பன்றி வேட்டைக்கு இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இந்த நாய் இனம் அரிதானதே ஒழிய, அழிந்து போகவில்லை. ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம்’ மூலம் ராஜபாளையம் நாய்கள் உருவாகக் காரணமாக அமைந்த இந்தச் சாம்பல் நாய்கள், தமிழகத்தில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஓர் இனம். ஆனால் உரிய கவனம் கொடுக்கப்படவில்லை.
(அடுத்த வாரம்:புலியை மிரட்டிய கோம்பை)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com