

ம
லைகளும் அடர்ந்த மரங்களும் கொண்டது குறிஞ்சி நிலம். இங்கு மழையின் அளவும் அதிகம். தமிழகத்தைப் பொருத்த அளவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், சில உள்மாவட்டப் பகுதிகளிலும் உயர்ந்த மலைப் பகுதிகளைக் குறிஞ்சி நிலப் பகுதிகள் என்று கூறலாம்.
சில மாவட்டங்களில் நான்கு நிலப்பரப்பும் உண்டு. குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் மலை, விளைகாடு, வயல், கடல் என்று நான்கு பகுதிகளும் உள்ளன. ஆகவே இந்தப் பகுப்பு, தமிழகம் முழுமைக்கும் பொருந்தும். அதேநேரம் கோட்பாடாக இதை விரித்துப் பார்த்தோமானால் இது இந்தியா மட்டுமல்லாது, உலகத்துக்கே பொருந்தும்.
உலகளாவிய பருவநிலைப் பகுதிகளை எட்டாகப் பிரிக்கலாம். அது குளிர்ந்த தூந்திரப் பகுதியில் இருந்து வெப்பமான பாலைப் பகுதிகள்வரை கணக்கிடப்பட்டுள்ளன. கிடைக்கும் மழை அளவு, வெப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரையறை செய்யப்படுகிறது.
அதேபோல தமிழகத்தில் ஏழு வகையான வேளாண் பருவநிலைப் பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதிக மழை பெறும் நீலகிரி, குமரி மாவட்டங்கள் முதல் குறைவான மழை பெறும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள்வரை இவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுப்பு அங்கு கிடைக்கும் மழை, மண் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது.
குறிஞ்சி நிலமானது வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள ஈரம் நிறைந்த பகுதி. இங்கு அதிகமான வளம் காணப்படும். பழங்கள், காய்கறிகள் அதிகபட்ச விளைச்சலை எட்டும். எனவே, ஒரு பண்ணையாளர் தனது நிலம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி நிலத்தில் உழாமலேயே சாகுபடி செய்துள்ளனர்.
மலைபடுகடாம் என்கிற பத்துப்பாட்டு நூல் ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்று குறிப்பிடுகிறது. தொய்யாது என்றால் உழாது என்று பொருள். வித்திய என்றால் விதைத்தல். துளர்படுதல் என்றால் கொத்தி விதைத்தல் என்று பொருள். துடவை என்றால் சாகுபடி நிலம் என்பது பொருள். எனவே, உழாது வேளாண்மை செய்யும் முறை குறிஞ்சி நிலத்தில் இருந்ததைக் காண முடிகிறது. உலகப் புகழ்பெற்ற இயற்கை வேளாண் அறிஞர் மசானபு புகோகா உழாத வேளாண்மை முறையை நிகழ்த்திக் காட்டினார். அப்படியான ஒரு முறையை நமது முன்னோர்கள் செய்துவந்துள்ளனர். அதற்கான காரணம் அங்கு அமைந்திருந்த அணி நிழற்காடுகளே.
(அடுத்த வாரம்: தொடர் வருமானம் தரும் குறிஞ்சி!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com