

கோ
ம்பை நாய்களை தமிழகத்தில் மிகப் பழமையான இனம் என்று சொல்லலாம். தமிழகத்தில் உள்ள மற்ற எந்த நாய் இனத்துக்கும் இல்லாத பல அதீதமான கட்டுக்கதைகளைக் கொண்டதும் இதுவே. அந்தப் புனைவுகளிலிருந்து வெளியே வராமல் கோம்பை நாய்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல.
தாமஸ் பிரவுன் என்பவர் 1829-ம் ஆண்டு ‘பயோகிராஃபிகல் ஸ்கெட்ச் அண்ட் ஆதெண்டிக் அனெக்டோட்ஸ் ஆஃப் டாக்ஸ்’ என்கிற புத்தகத்தை எழுதினார். அதில், இந்திய நாட்டு நாய்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், வங்க தேசத்திலுள்ள பிரபுக்களில் ஒருவர் தன் வளர்ப்புப் புலிக்கு உணவாகத் தினமும் ஒரு உயிருள்ள நாயை வழங்குவது வழக்கம். அப்படி உணவுக்காகக் கொண்டு வரப்பட்ட நாய் ஒன்று புலியினுடைய கூண்டில் இடப்பட்டு, புலியை மிரட்டி அதனுடைய உணவை உண்டு உயிருடன் இருந்ததாம். அதை அறிந்த அந்தப் பிரபு அந்த நாயின் வீரத்தைக் கண்டு வியந்து, அதைப் பிரியமாக வளர்த்தார் என்று ஒரு கதை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் உண்மைத் தன்மை குறித்து சந்தேகப்படாமல் இருக்க முடியாது. ஆச்சரியம் என்னவென்றால், இதேபோல ஒரு கதைதான் கடந்த இருபது ஆண்டுகளாக கோம்பைக்கும் எடுத்தாளப்படுகிறது. அதுபோல பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோம்பை இன நாய்களை மருது பாண்டியர்கள் பிரித்தானியர்களுக்கு எதிராகப் போரில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுவதுண்டு.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்தவிதமான வரலாற்றுச் சான்றும் இல்லவே இல்லை. அதுபோல, கோம்பை நாய்களும் ராமநாதபுர சாம்பல் நாய்களும் ஒன்று என்கிற எண்ணமும் முற்றிலும் தவறானது.
அதற்கான காரணம், இந்திய நாய்களைப் பற்றி எழுதிய முன்னோடி எழுத்தாளரான மேஜர் டபிள்யூ.வி.சோமன், கோம்பை நாய்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவை ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்டுவிட்டார். இதனால் ராமநாதபுரத்தில் உள்ள நாய்களும் கோம்பை நாய்களும் ஒன்றுதான் என்கிற தவறான கருத்து நிலவுகிறது.
அன்றைய முகவை மாவட்டம், தமிழகத்தின் பெரிய மாவட்டமாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் சில பகுதிகள், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் இணைந்து பெரியதாக இருந்தது. அப்படிப் பார்த்தால் இன்றைய ராஜபாளையம் நாய்கள்கூட அன்றைய ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவைதான். ஆக, குறிப்புகளை ஆராய்ந்துவிட்டு காலத்தைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவதால்தான் கோம்பையும் ராமநாதபுரம் சாம்பல் நாய்களும் ஒன்றுதானோ என்கிற குழப்பம் நேர்கிறது.
(அடுத்த வாரம்: எளிய மக்களுடன் பயணிக்கும் நாய்)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com