

பறவைகளும் உயிரினங்களும் தங்களைச் சுற்றி உள்ள இடத்தையும் நிகழ்வுகளையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளைத் தங்கள் தேவைகளுக்கு முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், தங்கள் ஆற்றலைக் குறைவாகச் செலவழித்து நிறைவான பயனைப் பெறுகின்றன.
நாமும் இயற்கையை ஆழமாகப் புரிந்துகொள்ளும்பொழுது தக்க சூழ்நிலையில் பிரச்சினைகளைக்கூடப் பயன் தருமாறு மாற்றிக்கொள்ளலாம். ஓர் ஏரிக்கரையில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது இது எனக்குப் புரிந்தது.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, கைபேசி போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து விடுபட்டு இயற்கையின் அரவணைப்பை நாடி ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன். வெகுதூரத்தில் ஓர் ஏரி இருந்தது, அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தேன். ஈரப்பதமான காற்று, காற்றினால் உண்டான சிறிய அலைகள், அவை ஏற்படுத்தும் ஓசை, கரைகளில் ஓங்கி வளர்ந்த மரங்கள், மரத்தின் நிழல், மரங்களில் உள்ள பறவைகள், அணில்கள், பல நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், சிலந்திகள், ஓணான், பல வகையான பூச்சிகள், அவை எழுப்பும் சத்தம், பூக்களின் வாசனை, மண்வாசனை இவை எல்லாம் சேர்ந்து என் மனதின் எண்ண ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து அமைதிபடுத்தின.
எந்தவித எதிர்பார்ப்பும், பரபரப்பும் இன்றி அங்கே நிகழ்வனவற்றில் கவனத்தைச் செலுத்தினேன், எப்பொழுதும் நடக்கும் சாதாரண சிறு நிகழ்வும்கூட அழகாக மாறியது. அது ஒரு சிறிய ஏரி, மழைக்காலம் முடிந்து, வெயில் காலம் ஆரம்பித்து இருந்ததால், நீர் வற்றி ஏரியின் நடுவே பாறைகள் ஆங்காங்கே தெரிந்தன.
ஏரியின் எதிர்க் கரையில் நான்கு ஐந்து குளத்துக் கொக்குகளும் நடுவாந்தரக் கொக்குகளும் தோதான இடத்தில் மீன் பிடிப்பதில் கவனமாக இருந்தன. கரையைத் தாண்டி ஓர் ஆள்காட்டி தரையில் அமர்ந்துகொண்டும், மற்றொன்று அங்கும் இங்குமாக அலைந்துகொண்டும் இருந்தன.
தரையில் அவை முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருக்கலாம். அங்கே சில எருமை மாடுகளும் புல் மேய்ந்துகொண்டிருந்தன, எதிர்பார்த்தபடி எருமைகளின் பின்னே சில உண்ணிக்கொக்குகளும் இருந்தன. ஏரியின் மேற்பரப்பில் ஏழெட்டு நீர்க்காகங்களும் உருவில் பெரிதாக இருந்த ஒரே ஒரு கூழைக்கடாவும் இருந்தன.
நீர்க்காகங்களும் கொக்குகளும்: நீர்க்காகங்கள் கருநிறமாக, நீண்ட வளைந்த அலகுடனும், நீண்டு வளைந்த கழுத்துடனும் இருக்கும். நீந்துவதில் வல்லவை,பார்த்துக் கொண்டிருந்தபோதே திடீரென்று நீருக்குள் மூழ்கிவிடும், மூழ்கிய பறவை எங்கு வெளிவரும் என்று தேடிக்கொண்டிருக்கும்போதே வாயில் சிறிய மீனுடன் வெளியில் எட்டிப்பார்க்கும்.
அதை நன்றாகக் கவனிக்கும் முன்பே அந்த மீனை விழுங்கியும் விடும். இப்படியே சில நிமிடங்கள் கடந்தன. எங்கிருந்தோ வந்த ஒரு மீன்கொத்தி திடீரெனத் தண்ணீருக்குள் பாய்ந்தது. மீனுடன் வெளிவரும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன், ஆனால், அதன் அலகில் மீன் ஏதும் இல்லை. பறந்து சென்று மின்கம்பியில் அமர்ந்துவிட்டது.
சூரியன் மேற்கில் மறைய தொடங்கியது, வானில் இருபது கொக்குகள் ஆங்கில ‘V’ வடிவில் அழகாகவும் சீராகவும் பறந்து கொண்டிருந்தன. கரையில் இருந்த கொக்குகளும், தன் இருப்பிடம் நோக்கிப் பறக்கத் தொடங்கின. நீர்க்காகம் ஒன்று மெதுவாக ஏரி நடுவே இருக்கும் பாறையை நோக்கிச் சென்று தன் சிறகுகளை விரித்துக் காயவைத்தபடி நின்றது.
அதன் பின் ஒவ்வொன்றாக இன்னும் சில நீர்க்காகங்கள் அதே பாறையில் வந்து சிறகுகளை விரித்து வெயிலில் காயத் தொடங்கின. இப்போதுதான் எனக்குப் புரிந்தது ஏன் அந்தப் பாறை வெள்ளை நிறமாக இருக்கின்றது என்று. அங்கே வெயிலில் காயும் பறவைகளின் எச்சத்தினால் அது வெள்ளையாக மாறியுள்ளது.
அதிசயக் கூழைக்கடா: நான் கவனித்த இவ்வளவு நேரமும், அந்தப் பெரிய அலகுடைய கூழைக்கடா, நீரின் மேல் எந்தப் பரபரப்பும் இன்றி மெதுவாகச் சிரமமின்றி நீந்திக்கொண்டிருந்தது. ஆனால், அந்தப் பறவை நீரில் மிதந்தபடி நீந்திக்கொண்டிருந்தது, அது என்ன சாப்பிட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. நேரம் செல்லச் செல்ல எல்லாப் பறவைகளும் அவைகளின் இருப்பிடம் தேடிப் பறக்கத் தயாராகிக்கொண்டிருந்தபொழுதுகூட, இந்தக் கூழைக்கடா மட்டும் பறந்து செல்வதற்கான எந்த அறிகுறியையும் காட்டாமல் இருந்தது.
சிறகுகள் காய்ந்த பின் சில நீர்க்காகங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டே பறக்க ஆரம்பிக்க, ஒன்றன் பின் ஒன்றாக எல்லா நீர்க்காகங்களும் சென்றுவிட்டன. இந்த ஒற்றைக் கூழைக்கடாவும் சென்றவுடன் நாமும் வீடு திரும்பலாம் என்று நினைத்திருந்தேன். அவ்வளவு பெரிய பறவை எப்படி நீரின் மேலே எழுந்து பறக்கப் போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
சில நிமிடங்கள் கழித்து அந்த அதிசயம் நிகழ்ந்தது, ஒரு பலத்த காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அடிக்க ஆரம்பித்தது. நீந்திக் கொண்டிருந்த கூழைக்கடா தன் நீண்ட சிறகுகளை விரித்து, அந்த பலமான காற்றின் உதவியால் தன் பெரிய சிறகுகளைச் சிரமமின்றி ஒன்று இரண்டு முறை அடித்துவிட்டு, பின் விரித்து நீட்டி, சுலபமாக அந்தக் காற்றில், ஏதோ வாகனத்தில் செல்வதுபோல் இலகுவாகப் பறந்து சென்றது. அந்த மிகப் பெரிய பறவை அப்படிப் பறந்ததைப் பார்த்தபொழுது பல வகையான எண்ணங்களும் கேள்விகளும் என் மனதில் ஓடின.
இப்படியொரு பெரிய காற்று வீசுவதற்காகத்தான் இவ்வளவு நேரமும் காத்துக் கிடந்ததா அந்தக் கூழைக்கடா? இயற்கையை ஆழமாகப் புரிந்துகொண்டு தனக்குச் சாதகமான நேரம் வரும் வரை காத்திருந்து முடிந்த அளவு ஆற்றலைச் செலவு செய்யாமல் தனது வேலையை அந்தப் பறவை முடித்துக்கொண்டதா? காற்று வீசும் என உறுதியாக அந்தப் பறவைக்கு எப்படித் தெரியும்? ஒரு வேளை வீசாமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? இது ஒரு தற்செயல் நிகழ்வா?
உறுதியான முடிவுக்கு வரமுடியாவிட்டாலும், இது போன்று பறவைகளைப் பார்க்கும்போதும், அவை இயல்பாகச் செய்யும் விஷயங்களிலிருந்தும்கூட நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பது புரிந்தது.
தமிழில் இயற்கையைப் பற்றி எழுத விருப்பம் உள்ளவர்கள் இப்படிவத்தைப் பூர்த்தி செய்யவும் - bit.ly/naturewriters
- vijay.mech88@gmail.com