

2022ஆம் ஆண்டில் உயிர்ப் பன்மை குறித்த ‘உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை’யை ஐ.நாவின் ‘பல்லுயிர் - சுற்றுச்சூழல் சேவை அமைப்பு’ வெளியிட்டது. அதன்படி, 25 சதவீத உயிரினங்கள் அழியும் தறுவாயில் உள்ளன; 90 சதவீத உயிரினங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.
முக்கியமாக, ஐயுசிஎன் அமைப்பால் பாதுகாப்பானதாகக் கருதப்படும் 33 சதவீத இனங்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், 49 சதவீத உயிரினங்களின் எண்ணிக்கை நிலையானதாக உள்ளது. 3 சதவீத உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஞெகிழி ஒழிப்பிலிருந்து பின்வாங்குகிறதா இந்தியா? - 2019இல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஞெகிழிப் பொருள்களுக்கு உலகளாவிய தடையை முன்மொழிந்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த யோசனை பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 2024க்குள் ஞெகிழித் தடை தொடர்பான உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்கு வதற்கு ஜூன் 2022இல் உலக நாடுகள் ஒப்புக்கொண்டன.
இருப்பினும், கடந்த மே 29 முதல் ஜூன் 2 வரை பாரீஸில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிப்பதை இந்தியா தவிர்த்தது. எழுத்துப்பூர்வ உறுதிமொழியே, உலகளாவிய ஞெகிழி ஒழிப்புக்கான இறுதி ஒப்பந்தத்தை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும். ஆனால், மொத்தம் உள்ள 193 நாடுகளில் 67 நாடுகள் மட்டுமே எழுத்துப்பூர்வ சம்மதத்தைத் தெரிவித்துள்ளன. - ஹுசைன்