

அத்தியாவசியப் பொருட்களான வெங்காயம், தக்காளியின் விலை சாதாரண மக்களைத் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெங் காயத்தில் 45 சதவீதம் எங்கே போகிறதென்ற விவரம்கூட அரசுக்குத் தெரியாது என்ற அதிர்ச்சிகரமான தகவலுடன் பேச ஆரம்பிக்கிறார் திருச்செல்வம்.
உலகம் இன்று ஒரு கிராமமாகச் சுருங்கியிருப் பதற்குத் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு கணிசமானது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தாத தொழில் துறைகள், கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம்.
அமெரிக்காவில் இருந்து கொண்டுதான் விரும்பிய கோவிலில் ஒருவர் நேர்த்திக்கடனைச் செலுத்தி விட முடியும். இரவு 12 மணிக்கு நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது காதலியின் பிறந்த நாளுக்கு மலர்க்கொத்தைக் கொண்டு சேர்க்க முடியும்.
கிடைப்பதும் கிடைக்காததும்
ஏன், திடீர் இரவு விருந்துக்கு வீட்டிலிருந்தே பீட்சா ஆர்டர் செய்வது முதல் தொலைதூரப் பயணங்களுக்குப் பயணச்சீட்டு வாங்குவது வரை எல்லாத் தேவைகளையும் சின்னஞ்சிறு கைபேசியின் மூலம் இன்றைக்கு நிறைவேற்றிவிட முடியும்.
ஆனால், இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப் படும் விவசாயி ஒருவருக்குப் பத்து மூட்டை உரம் அவசரத் தேவையென்றால், அவரேதான் உரக் கடைக்கு ஓட வேண்டும். அது எத்தனை தூரத்தில் இருந்தாலும், அவருக்கு எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அவரேதான் சென்றாக வேண்டும்.
‘உழவன் சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்’ என்று விவசாயத்தைத் தெய்வீகமான பணியாகப் பார்த்தது நம்முடைய சமூகம் என்று பெருமையாகச் சொல் கிறோம். ஆனால், இங்கேதான் அந்த அவல நிலை உள்ளது.
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட 60 கோடி மக்களின் வாழ்க் கையையும் உற்பத்தித் தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த நம்மிடம் என்ன இருக்கிறது? விவசாயியை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்ற கேள்விதான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த திருச்செல்வத்தை யோசிக்க வைத்தது.
"சுதந்திரத்துக்குப் பிறகு வந்த ஒவ்வொரு அரசும் வேளாண் துறைக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கு எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. ஆனால், நடைமுறையில் எந்த நடவடிக் கையையும் எந்த அரசும் எடுக்கவேயில்லை" என்கிறார்.
பெருங் கனவு
நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகிராமமான ஆலம்பட்டைச் சேர்ந்த ஆர்.எம். திருச்செல்வம் மிகப் பெரிய கனவைச் சுமந்து கொண்டிருக்கிறார்.
பல்வேறு நிபுணர்களை அமர்த்தி ஓர் அரசு செய்ய வேண்டிய பணியை, ஒத்த சிந்தனை கொண்ட சில நண்பர்களின் உதவியுடன் பல்வேறு போராட்டங்களுக்கிடையே அவர் செய்து முடித்துள்ளார்.
இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் சமூக, பொருளாதார, நிர்வாகரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்குத் தகவல் தொழில்நுட்பத் தீர்வையும் கண்டறிந்துள்ளார். அவரது போராட்டத்துக்கு வயது 15 ஆண்டுகள். ஆனால், இவரது கனவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசு, பெரிய அமைப்புகளின் ஆதரவு அவசியம்.
திருச்செல்வமும் அவரது நண்பர்களும் சேர்ந்து it-rural.com என்னும் இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். கிராமப்புற விவசாயிகளின் வருவாயை அதிகரிப் பதற்கான இணைய வலைப்பின்னலாக இது செயல்படும். அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் ‘தகவல் மற்றும் செயல் நிர்வாக மையம்' ஒன்றை அமைக்கும் மாதிரித் திட்டமும் இவரிடம் உள்ளது.
தகவல் மையம்
"ஒரு பைசா செலவில்லாமல் அந்தந்தக் கிராமத்துக்கேற்ற விவசாய ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்குவது தான் அடிப்படை நோக்கம். இதற்கு அரசும் தனியார் நிறுவனமும் சேர்ந்து ஒரு சிறிய அலுவலகத்தைக் கணினி வசதியுடன் நிர்வகித்தால் போதும்.
தரமான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வது, நல்ல விலை கிடைக்கச் செய்வது, சரியான தகவல்களின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஒரே விளைபொருளை அதிக உற்பத்தி செய்து நஷ்டமடைவதைத் தவிர்ப்பது மற்றும் கடன் வழங்கும் முறையைப் பலப்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்தத் தகவல் நிலையம் உதவியாக இருக்கும்" என்கிறார் திருச்செல்வம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு கிராம விவசாயிக்குத் தான் பயிரிடப் போகும் விளைபொருளுக்கு விளைச்சல் முடிந்த பிறகு, எவ்வளவு தேவை இருக்கும் என்பதைக் கணிப்பதற்கு முறையான தகவல்களைத் தரும் அமைப்பு எதுவும் இல்லை.
அத்துடன் சாகுபடி நடைமுறைகள், நோய்த்தடுப்பு, சந்தைப்படுத்தல் என எதைக் குறித்தும் சரியான ஆலோ சனைகளைத் தருவதற்கு அடிமட்ட அளவில் நம்பகமான விவரங்களைத் தரும் ஒரு முறையை அரசு உருவாக்கவேயில்லை என்கிறார் திருச்செல்வம்.
அதனால்தான் தேவைக்கு அதிகமான விளைபொருளை ஒரு பகுதியைச் சேர்ந்த எல்லா விவசாயிகளும் உற்பத்தி செய்துவிட்டு, அவை கெட்டுப்போவதற்குள் நஷ்டத்துக்கு விற்கும் அவலநிலை ஏற்படுகிறது.
முதல் வெற்றி
திருச்செல்வம் அவரது அணியின் தகவல் தொழில்நுட்ப மாதிரியை ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு வரவேற்று, 30 கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு பரிசோதித்ததில், திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
ஆனால், துரதிருஷ்டவசமாக ரெட்டியின் அகால மரணத்தால் இந்த மாதிரி, அதற்குப் பிந்தைய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்கிறார் திருச்செல்வம். ஒரு கட்டத்தில் நிதிப் பற்றாக்குறையால் அங்கு செய்துகொண்டிருந்த பணியை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆனால், தனது தகவல் தொழில்நுட்ப மாதிரியின் மீது பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார் அவர். அரசும், தனியாரும் கைகோக்கும் இந்த மாதிரித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாரானால், சிறுவிவசாயிகளின் வாழ்க் கையில் மாற்றம் ஏற்படுவது உறுதி என்கிறார் திருச்செல்வம்.
விடை தேடும் கேள்வி
ஆனால், இந்த விவசாய மாதிரித் திட்டத்தின் மீது தனியார் துறையினர் ஈடுபாடு காட்டு கிறார்களா என்ற கேள்விக்கு ஏமாற்றமான பதிலையே அளிக்கிறார்.
"இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பாலான வேளாண் செயல்பாடுகளை அரசுதான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயி களை நாங்கள் அணுகுவதற்கே அரசின் உதவி தேவை. மாநில அளவில் எடுத்துக்கொண்டால் பல்கலைக்கழகங்கள், மாநில வேளாண் துறையின் ஒத்துழைப்பு அவசியம்" என்கிறார் திருச்செல்வம்.
அரசுகளும், நம்மை ஆள்பவர் களும் விவசாயத் துறை சார்ந்து எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்லி உரையாடலை முடிக்கிறார். எல்லா கிராமத்திலும் அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சியை இலவசமாகக் கொடுக்க முடிந்த அரசு, விளைபொருட்களை நிறுத்துப் பார்க்கத் தரமான ஒரு எடைத் தராசை கிராம அளவில்கூட ஏன் கொடுக்க முன்வரவில்லை என்று கேட்டார். யாரிடம் பதில் இருக்கிறது?
விவசாயத் தகவல், செயல் நிர்வாக மையத்தில்
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
1. வேளாண்மை சார்ந்த துல்லியமான, சமீபத்திய தகவல்கள்
2. அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள்
3. குறிப்பிட்ட வகை நிலத்தில், மண்ணில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான தகவல்கள்
4. விவசாய இடுபொருட்கள், விதை எங்கே கிடைக்கும் என்பதை அறிதல். விரும்பும் இடுபொருட்களை விவசாயம் செய்யும் இடத்துக்கே கொண்டுவருவதற்கான பதிவு முறை
5. விவசாய வேலைக்கு ஆட்கள், கருவிகள், எந்திரங்களை ஒப்பந்தம் செய்துகொள்ள உதவுதல்
6. தட்பவெப்பநிலைக்கு ஏற்பச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்
7. நோய் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரியான முறையில், சரியான நேரத்தில் தெரிவித்தல்
8. அறுவடைக்கு முன்பே சந்தை நிலவரம், சரியான சந்தையைத் தேர்வு செய்வதற்கு வழிகாட்டுதல்
- திருச்செல்வம் தொடர்புக்கு: 9840374266, thirurm@gmail.com