

செ
ல்லப் பிராணிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நாய்கள்தான். அந்த நாய் இனங்களில் பெரும்பாலும் முதன்மை பெறுவது ஐரோப்பிய இனங்களாகவே இருக்கின்றன. நம்மவர்கள் கொண்டாடும் இந்த நாய் இனங்கள் பல பிரிட்டனில் ‘விக்டோரிய யுகம்' என்றழைக்கப்படும் காலத்தில், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இனங்களே. இந்த வெளிநாட்டுக் கலப்பின நாய்கள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால், நம் மரபின் பெருமைமிகு அடையாளங்களாகத் திகழும் நாட்டு நாய் இனங்களோ அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலை ஓரளவு மாறிவருகிறது. ஒவ்வொரு முறை நாட்டு நாய் இனங்களைப் பற்றி ஊடகங்களில் பேசப்படும்போது, அந்த அலையில் நாட்டு நாய் இனங்களை வளர்க்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். நாட்டு நாய்களைப் பற்றி இன்றைக்கு குறைந்தபட்சமாகவாவது ஒரு பிம்பம் உருவாகியுள்ளது.
ஆனால் அதில் பிரச்சினை என்னவென்றால், நாட்டு நாய் இனங்களை பலரும் அறிமுகப்படுத்துகிறார்களே அன்றி, அவற்றைப் பற்றி முழுமையாக அறிய முயற்சிப்பதில்லை. நாட்டு நாய் இனங்களைப் பற்றி பரவலாக உருவாக்கப்பட்ட பிம்பம் ஒருபுறம் இருக்கட்டும். நாட்டு நாய்களின் உண்மைப் பின்னணியைத் தெரிந்துகொள்வதுதான், அவற்றைப் பாதுகாப்பதற்கு ஆதாரமாக அமையும்.
முதல் விஷயம் நமது மரபில் நாய்கள் என்றைக்குமே செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டது இல்லை. அது மேற்கத்தியப் பழக்கம். நம் மண்ணில் அது பயன்பாட்டு விலங்காகவே இருந்துவந்துள்ளது. வேட்டைப் பங்களிப்பும் காவல் பங்களிப்பும்தான் நாய்களை மனிதனுடன் நெருக்கமாக்கின. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் வெளிநாட்டு நாய்கள் மெல்ல மெல்ல செல்லப் பிராணியாக நமக்கு அறிமுகமாகத் தொடங்கின.
அதையும் மீறி இன்றைக்கு எஞ்சியுள்ள நம் நாட்டு நாய் இனங்கள்: ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்றவை. இந்த நாய் இனம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வரலாறு உண்டு. இருந்தபோதும், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை பெரிதும் சார்ந்தே இருக்கின்றன. கன்னி நாய்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.
(அடுத்த வாரம்:கன்னி என்றொரு இனம்)
தொடர்புக்கு:sivarichheart@gmail.com