

சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு முறை காரை நிறுத்தினோம். அங்கிருந்த கருவேல மரத்தில் ‘கீச் கீச் கீச்’ என்று கலவையான சத்தம் கேட்டது. சிட்டுக்குருவி அளவில் நிறைய பறவைகள். அந்தப் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிட்டுக்குருவி அளவில் அதே நேரம் தலை மட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்த ஒரு பறவை, ஓரடி நீளம் கொண்ட ஒரு பச்சையான நாரை அலகில் ஏந்திக்கொண்டு பனைமரம் நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.
சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தில் நீண்ட கீற்றுகளால் வேயப்பட்ட சுமார் நாற்பது கூடுகள், பனையோலைகளில் தொங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தோம். அந்தக் கூடுகளைப் பார்த்த பிறகுதான் அவை தூக்கணாங்குருவிகள் (Baya Weaver Bird) என்று தெரிந்தது.
நாங்கள் குடியிருந்த வீடுகளில் ஏதாவது குறை இருந்தால் உடனே ‘உன்னை மாதிரி, அப்பா மாதிரி ஒரு இஞ்சினியர் கட்டினதுதான் இதுவும்’ என்று சிரித்தபடியே கிண்டல் செய்வார் அம்மா. அவரே ஒரு முறை ‘தூக்கணாங்குருவி மாதிரி யாரும் கூடு கட்ட முடியாது’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
நேர்த்தியான கூடு
அதுவரை இலைகளைச் சேர்த்து, மரக்கிளைகளில், முள் புதர்களில் என்று பல்வேறு வகைப் பறவைக் கூடுகளைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு நேர்த்தியானதொரு தொங்கும் கூட்டை அன்றைக்குத்தான் முதல் முறையாகப் பார்த்தேன்.
மற்ற பறவைகள் இணையைத் தேர்ந்தெடுத்த பிறகு கூடு கட்டும். ஆனால், தூக்கணாங்குருவிகள் நீளமான கரும்புத்தோகை, நாணல் கீற்றுகளைச் சிறு கீற்றாகக் கிழித்து, லாகவமாகப் பின்னிக் கூட்டைக் கட்டுவதே ஓர் இணையைத் தேர்ந்தெடுப்பதற்காகத்தான்.
தூக்கணாங்குருவி சுமார் 15 செ.மீ. அளவு கொண்டது. வயல்வெளிகளில் தானியங்களைப் பொறுக்கி உண்ணவும், கதிர்களிலிருந்து கொய்து உண்ணவும் வசதியாக அதன் அலகு சிறியதாகவும் சற்றுத் தடித்தும் கூம்பு வடிவத்தில் இருக்கும். இந்தியா முழுவதும் காணப்படுவதோடு, தெற்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
சாதாரணமாக ஆண், பெண் தூக்கணாங்குருவிகள் வெளிர் அடிப்பாகத்துடனும், முதுகுப்பகுதியில் அடர் பழுப்பு நிறக் கோடுகளுடனும் காணப்படும். பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். அப்போது ஆண் பறவையின் தலை, கழுத்தின் பின்புறம், மார்பு ஆகிய பகுதிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். கூட்டமாக வாழும் தன்மை கொண்டதால் ஒரே மரத்தில் பல பறவைகள் கூடு கட்டும்.
தொடர் கவனிப்பு
நாங்கள் பார்த்த பனைமரத்தில் ஒவ்வொரு கூடும் வெவ்வேறு நிலைகளில் இருந்தன. பச்சையாக இருந்த சில கூடுகள் புதிய நார்களால் கட்டப்பட்டவை. சில கூடுகள் பாதி காய்ந்த நார்களும், பாதிப் பச்சை நார்களுமாக இருந்தன. அந்தப் பறவைகளின் செயல்கள் சுவாரசியமாக இருக்கவே தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்று கவனிக்க ஆரம்பித்தோம்.
அடுத்த முறை சென்றபோது மஞ்சள் தலை கொண்ட பல ஆண் பறவைகள் கூட்டின் மேல் அமர்ந்து இறக்கைகளை அடித்துக் கத்திக்கொண்டிருந்தன. இனப்பெருக்கக் கால ஆண் பறவை ஏன் அப்படி நடந்துகொள்கிறது என்கிற கேள்வி பிறந்தது. இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடத்தை இது என்று பின்னர் அறிந்தேன். ‘உனக்காக ஒரு வீடு கட்டியிருக்கிறேன், வந்து நல்லா இருக்கா, உனக்கு, பிடிச்சிருக்கான்னு பார்’ என்று பெண் பறவையைப் பார்த்துச் சொல்லும் நடத்தை.
ஒரு பறவை பறந்து வந்தபோது, அதன் அலகில் இருக்கும் பச்சைக் கீற்றுக் கொடிபோல அசைந்து, அதைப் பின்தொடர்ந்து வருவதுபோல இருந்தது. எங்கோ பறந்து சென்று ஒவ்வொரு கீற்றாகக் கொண்டு வந்து, பின்னிப் பின்னி கூட்டை உருவாக்க ஆரம்பித்தது. கால்களை அதிகமாக அகற்றி வைத்துப் பின்னுவதைப் பார்த்தால் கால்களால் அளவு எடுத்துக் கூடு கட்டுவதைப் போல் இருந்தது.
ஒரு நீள் கோள வடிவில் பாதிக் கட்டப்பட்டிருந்த கூட்டின் நடுவில் ஒரு பின்னல் பிரிவு இருந்ததால் இரண்டு வட்டங்களாகத் தெரிந்தன. ஒரு பகுதியைக் கீழே மூடிவிட்டு முட்டை இட்டு அடைகாக்கவும், அடுத்தபகுதியைக் குழாய் போல் உருவாக்கி கூட்டிற்கான நுழைவாயிலாகப் பயன்படுத்தும் என்றும் தெரிந்து கொண்டேன்.
அங்கீகாரம் தேடி
ஒரு கூட்டைக் கட்டுவதற்குத் தேவையான கீற்றுகளைச் சேகரிக்க ஆண் தூக்கணாங்குருவி சுமார் 500 முறையாவது கூட்டிற்கும் சேகரிக்கும் இடங்களுக்குமாகப் பறந்து செல்கிறது. ஒரு முறை பனைமரத்திற்குப் பக்கத்தில் இருந்த மின் கம்பியில் ஒரு பெண் தூக்கணாங்குருவி அமர்ந்திருந்தது. ஓர் ஆண் பறவை பறந்து வந்து, அதன் அருகில் அமர்ந்தது. பெண் தத்தி சற்றுத் தள்ளி அமர்ந்தது. ஆண் பறவையும் தத்தி மீண்டும் அருகில் சென்றது. தொடர்ந்து நடந்த இதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. ஒரு வழியாக மனமிறங்கிய பெண் தூக்கணாங்குருவி பனைமரத்திற்குப் பறந்து சென்று கூட்டைப் பார்வையிட்டது!
பெண் தூக்கணாங்குருவி அங்கீகாரம்கொடுத்துவிட்டால் ஆண் கூட்டைக் கட்டி முடிக்கிறது. பெரும் பாலும் இந்த வேளையில் பெண்ணும் சேர்ந்து வேலை செய்கிறது. கூடு கட்டுவதிலும், முட்டை இடும் பகுதியில் பஞ்சு போன்ற பொருள்களை வைத்து மிருதுப்படுத்தவும் பெண் குருவி உதவுகிறது.
கூட்டைக் கட்டி முடித்து பெண் பறவை ‘வீட்டில்’ குடியேறியவுடன் ஆண் தூக்கணாங்குருவி வேறு ஒரு பெண்ணைக் கவர அடுத்த கூட்டைக் கட்ட ஆரம்பிக்கிறது. ஓர் இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆண் தூக்கணாங்குருவி நான்கு கூடுகள் வரை கட்டுகிறது.
மண் உருண்டை எதற்கு?
பொதுவாகப் பெண் குருவி இரண்டிலிருந்து ஐந்து வரை ‘பளிச்’ வெள்ளை நிறத்தில் முட்டைகளை இடும். சில பெண் குருவிகள் தன் வீட்டில் முட்டையிடுவதோடு அடுத்தவர் வீட்டிலும் முட்டை இடும்! குயில்கள் பிற இனப்பறவைகளின் கூடுகளில் முட்டையிடுவதுபோல, தன் இனப்பறவை களின் கூடுகளில் முட்டையிடும் தூக்கணாங்குருவியின் சுவாரசியமான நடத்தை இது. முட்டை 14-15 நாள்களில் பொரிக்கும். 13 முதல் 23 நாள்களில் குஞ்சு கூட்டை விட்டுப் பறந்து செல்லும்.
காக்கை போன்ற பெரிய பறவைகளும், பாம்பு, எலி போன்ற விலங்குகளும் முட்டைகளையும் குஞ்சுகளையும் குறி வைப்பதுண்டு. மர எலிகள் முட்டைகளையும் குஞ்சுகளையும் கைப்பற்றி அந்தக் கூட்டையே தன் வீடாக்கிக்கொண்டு இனப்பெருக்கம் செய்வதும் உண்டு. சில கிராமங்களில் கிணறுகளுக்கு மேல் வளர்ந்திருக்கும் மரக்கிளைகளில் தூக்கணாங்குருவி கூடு கட்டியிருக்கும். இதுபோன்ற இரைக்கொல்லிகளிடமிருந்து முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கத்தான் இப்படிச் செய்கின்றன.
பாதிக் கட்டப்பட்டுக் காய்ந்த நிலையில் சில கூடுகள் இருந்தன. இவை பெண் தூக்கணாங்குருவிகள் நிராகரித்த கூடுகள். கீழே விழுந்து கிடந்த நிராகரிக்கப்பட்ட கூடுகளிலும், பாதிக் கட்டப்பட்டிருந்த கூடுகளின் ஒளிப்படங்களிலும் கறுப்பான சிறிய மண் உருண்டைகள் கூட்டின் உள்புறச் சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது. ஒளி வேண்டும் என்பதற்காகத் தூக்கணாங்குருவிகள் இந்த மண் உருண்டைகளில் மின்மினிப் பூச்சிகளை ஒட்டிவைக்கும் என்று சில பகுதிகளில் நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இது உண்மையல்ல. பலமாகக் காற்று வீசும்போது பாதிக்கப்படாமல் இருப்பதற்காகக் கூட்டை வலுப்படுத்தும் முறை இது.
சாலை விரிவாக்கம், வீட்டு மனை விற்பனை என்று பனைமரங்கள் வெட்டப்படாமலும் நீர்நிலைகள் நிரவப் படாமலும் இருந்தால்தான் இந்தத் தூக்கணாங்குருவிகளின் நேர்த்தியான வீடுகளை இனிவரும் காலத்திலும் கண்டு ரசிக்கமுடியும்.
- ஜென்ஸி டேவிட், கட்டுரையாளர் - கட்டிடப் பொறியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் | jencysamuel@yahoo.co.in