முதல் நண்பன் 04: ராஜபாளையத்தின் ராஜா

முதல் நண்பன் 04: ராஜபாளையத்தின் ராஜா
Updated on
2 min read

மிழகத்து நாய் இனங்களில் புகழ்வாய்ந்த இனம் என்றால் அது ராஜபாளையம் நாய்கள்தான். கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாரிடமும் அவர்களுக்குத் தெரிந்த நாட்டு நாய் இனங்களைப் பற்றிக் கேட்டால், நம் காதில் விழும் முதல் பெயர் ‘ராஜபாளைய’மாகத்தான் இருக்கும்.

2005-ம் ஆண்டு இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்று பெருமைப்படுத்தப்பட்ட ஒரே தமிழக நாய் இனம் இதுதான். இதைச் சாத்தியப்படுத்தியதில் மூத்த சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரனின் பங்கு முக்கியமானது.

வேறு எந்த நாய் இனத்தைவிடவும், ராஜபாளையம் நாய் பற்றி தமிழகம் முழுவதும் பரவலாகத் தெரிந்திருக்கிறது. அதற்கான முதன்மைக் காரணமாக இரண்டு விஷயங்கள்:

ஒன்று, அதனுடைய அழகும் கம்பீரமும். இரண்டாவது, தமிழகத்தில் முதல்முறையாகச் சந்தைப்படுத்தப்பட்ட நாய் இனம் அதுதான்.

வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும், கிட்டத்தட்ட வெளிநாட்டு கிரேடனை ஒத்த தோற்றத்துடன், அதைவிடச் சற்றே குறைந்த உயரத்துடன் இருக்கும் இந்த நாய்கள் ஆக்ரோஷத்தன்மைக்கும் காவல்காக்கும் பண்புக்கும் பெயர் பெற்றவை.

விஜயநகரப் பேரரசின் வருகையின்போது தமிழகம் வந்த பாளையக்காரர்கள், பிரித்தானியக் குதிரைப் படைகளைத் தாக்க இந்த நாய் இனத்தைப் பயன்படுத்தினர். பாளையக்காரர்கள் (Poligar) பயன்படுத்தியதால் இதுவும் ஆரம்பத்தில் ‘பொலிகார் ஹவுண்ட்’ எனப்பட்டது.

பாளையக்காரர்கள் மூலமாக தமிழகம் வந்த நாய்களும், அவர்களுடைய வேட்டைக்கும் காவலுக்கும் பயன்படுத்தப்பட்ட நாய்களும், பொதுவாக ‘பொலிகார் ஹவுண்ட்’ என்ற பெயராலேயே பிரித்தானியர்களால் குறிப்பிடப்பட்டன. என்றாலும், எப்படி இன்றுவரை ராஜபாளையம் நாய் மட்டும் அந்தப் பெயரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது?

ஆந்திரம், கர்நாடகப் பகுதிகளில் இருந்து வந்த இந்த வகை நாய்கள், இன்றைக்கு அங்கு ஒன்றுகூட இல்லாமல் இருப்பது ஏன்? தென்னிந்திய நாய் இனங்களில் எவற்றுக்கும் இல்லாத ஒற்றை நிறத்தன்மை (வெள்ளை நிறம் மட்டும்) உடைய இந்த நாய்கள் எவ்வாறு ராஜபாளையத்தில் மட்டும் வாழ்கின்றன?

இந்தக் கேள்விகளைப் பின்தொடர்ந்து சிறிது ஆராய்ந்தால், அதனுடைய வரலாறு நமக்குத் தெரிய வரும்!

சரி, முதலில் எப்படி ராஜபாளையம் நாய்கள் மட்டும் ‘பொலிகார் ஹவுண்ட்’ என்ற பெயரைத் தக்கவைத்துக்கொண்டன என்று பார்ப்போம். இந்தப் பெயர், இன்றைய ராஜபாளையம் நாய்களுடைய மூதாதையர்களுக்கு பிரித்தானியரால் வழங்கப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் யாரும் அந்தப் பெயரை அறிந்திருக்கவில்லை. சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் அதிகமும் அச்சு ஊடகம் வழியாக ராஜபாளையம் நாய்கள், பொலிகார் ஹவுண்ட் என்கிற பெயரில் மக்களுக்கு அறிமுகமாயின.

பிரித்தானிய இயற்கையியலாளர்களும் வேட்டைக்காரர்களும் பதிவு செய்த பொலிகார் ஹவுண்ட்களில், பன்றி வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட நாய்களும் அடக்கம். அவைதான் இன்றைய ராஜபாளையத்தின் மூதாதையர்கள். அடிப்படையில் அவை ஆந்திராவைச் சேர்ந்த பட்டி நாய் இனங்களே!

அந்த வகை பொலிகார் ஹவுண்ட்கள்தான் ராஜபாளையம் நாய்கள் என்பதை இயற்கையியலாளரும் முன்னோடிக் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞருமான மா. கிருஷ்ணன், தனது ‘தி இந்தியன் கண்ட்ரி டாக்’ என்ற கட்டுரை மூலம் 1983-ல் பதிவு செய்தார். இது மிகப் பெரிய அவதானிப்பு! தன்னுடைய இளமையில் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் பணியாற்றியபோதே நாய்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கிருஷ்ணன், அவற்றின் வாழ்க்கை முறையைக் கவனிக்கவும் செய்தார்.

(அடுத்த வாரம்: வெள்ளை நிறத்திலொரு நாய் )
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in