

முன்பெல்லாம் இருநோக்கியுடன் (பைனாகுலர்) சுற்றிக்கொண்டிருந்த பலரும் இன்றைக்கு நீளமான லென்ஸுகளுடன் ஒளிப்படக் கலைஞர்களாக வலம்வருகிறார்கள். காட்டுயிர்களின் தனித்துவமான ஒளிப்படங்களை எடுப்பதற்காக இவர்களில் சிலர், இயற்கை நெறிமுறைகளை மீறுகிறார்கள். இது காட்டுயிர்களுக்குப் பெரும் ஆபத்து. இயற்கையையோ காட்டுயிர்களையோ தொந்தரவு செய்யாமல் ஒளிப்படம் எடுப்பது எப்படி?:
கூட்டம்: பொதுவாக காட்டுயிர் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் காட்டுயிர்களைச் சுற்றிப் பெருந்திரளான மக்கள் கூடி வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. சில வேளை வேண்டுமென்றே அவற்றுக்கு மிக அருகில் செல்வதும்கூட நடக்கிறது.
உங்கள் வீட்டினுள் ஒரு பெருங்கூட்டம் எப்போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பது உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? காட்டுயிர்களும் அத்தகைய மன அழுத்தத்தையே எதிர்கொள்கின்றன. வேட்டையாடுதல், சாப்பிடுதல், இணைசேர்தல் போன்ற அவற்றின் இயல்பான நடத்தைகளும் சீர்குலைகின்றன. புலிகள், யானைகள் போன்ற காட்டுயிர்கள் இத்தகைய நெருக்கடிக்கு உள்ளானால், அவை ஆபத்தானவையாக மாற சாத்தியம் உண்டு.
என்ன செய்ய வேண்டும்? - ஒரு காட்டுயிரைக் கண்டால், அந்த உயிரினத்துக்கும் வாகனத்துக்கும் இடையே ‘பாதுகாப்பான தொலைவை’ எப்போதும் பராமரிக்க வேண்டும். வேறு வாகனங்கள் வருவதைக் கண்டால், சில ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டு உடனே புறப்பட்டுவிட வேண்டும். யாரேனும் தவறாக நடந்துகொள்வதைக் கண்டால், வனத்துறை அதிகாரியிடம் உடனே புகார் அளிக்க வேண்டும்.
வசிப்பிடத்தை ஒளிப்படம் எடுத்தல்: கூடுகளில், கூடுகளுக்கு அருகில் சென்று பறவைகளை ஒளிப்படம் எடுப்பதையும், காட்டுயிர்களை அவை வசிக்கும் குகைகளில் ஒளிப்படம் எடுப்பதையும் சாகச நிகழ்வாகப் பலர் கருதுகின்றனர். அவ்வாறு செய்வது அந்தப் பறவைகளுக்கும் காட்டுயிர்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தையும் தொந்தரவையும் ஏற்படுத்தும். கூடு அல்லது குகையை அவை கைவிட்டுவிடவும் வழிவகுக்கும்.
என்ன செய்ய வேண்டும்? - ஒளிப்படம் எடுப்பது நமக்குப் பொழுதுபோக்கு. அது அந்த உயிரினங்களின் வாழ்க்கையைச் சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது. கூடு அல்லது குகையை ஒளிப்படம் எடுப்பதை முற்றிலும் தவிர்ப்பதே சரியான அணுகுமுறை.
இரவாடி உயிரினங்கள்: இரவாடி உயிரினங்கள் குறிப்பாக பறவையான பக்கி, தேவாங்கு, ஆந்தை போன்ற உயிரினங்களின் கண்கள் மிகுந்த ஒளி உணரும்திறன் கொண்டவை. ஆற்றல் வாய்ந்த ஃபிளாஷ் வெளிச்சத்தை அவை பார்க்க நேர்ந்தால், அவற்றுக்குப் பார்வை பறிபோகும் சாத்தியமும் உண்டு.
என்ன செய்ய வேண்டும்? - இரவாடி உயிரினங்களைத் தொந்தரவு செய்யாமல், அவற்றை நிம்மதியாக வாழ விடுங்கள். ஆராய்ச்சி போன்ற அவசியக் காரணங்களுக்காக அவற்றை ஒளிப்படம் எடுக்கவேண்டிய தேவை இருந்தால், நைட் விஷன் கேமராவைப் பயன்படுத்துவது நல்லது.
(ஜூன் 15: இயற்கை ஒளிப்படக் கலை நாள்)