

காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12இல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படவுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் வழி சுமார் 5.22 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது.
காவிரி மாவட்ட உழவர்கள் குறுவை சாகுபடிக்காகத் தயாராகிவருகிறார்கள். இந்நிலையில் திறந்துவிடப்படும் தண்ணீர் தடங்கல் இன்றிக் கடைமடைப் பகுதிகளுக்கும் கிடைக்கக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்கிற கோரிக்கையையும் உழவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்குத் தேவையான விதைநெல்லை மானியத்தில் வழங்கவும் அரசிடம் அந்தப் பகுதி உழவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் முட்டைத் தட்டுப்பாடு: இலங்கையில் பொருளாதார மந்தநிலையை அடுத்து அத்தி யாவசியப் பொருள்களுக்கு அங்கே தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் போக்க இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கை வர்த்தகக் கழகத் தலைவர் அசிரி வலிசுந்தரா கடந்த வாரம் மட்டும் 2 கோடி முட்டைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்று 35 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாடு இதனால் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000: மத்திய அரசின் ‘கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டுவருகிறது மூன்று தவணைகளாக இது வழங்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர அரசு தன் பங்குக்கு ரூ.6,000 அளிக்க முன்வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பருவ மழை அளவு குறையும்: புவி வெப்பமாதலின் காரணமாகக் கிழக்கு, மத்திய பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு மழைப் பொழிவின் அளவு குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட தமிழ்நாடு, தென் கர்நாடகம், ராஜஸ்தான், லடாக் ஆகிய பகுதிகள் தவிர்த்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்தையும் பாதிக்கலாம்.
தொகுப்பு: ஜெய்