

உலகச் சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 இல் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நீர்நிலைகளுக்கு ராம்சர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பல புதிய பறவை சரணாலயங்களும் காப்பிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சேலமும் சேர வேண்டும் என்பது சேலம் இயற்கை ஆர்வலர்களின் ஒருமித்த விருப்பம். அதற்கான தகுதி சேலத்துக்கு நிச்சயமாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் முதலான நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள பறவைகளைப் பற்றிய சில ஆராய்ச்சிகளை நானும் சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்களும் மேற்கொண்டு வருகிறோம். நான்கு ஆண்டுகளில் கள ஆய்வுசெய்த நீர்நிலைகளின் எண்ணிக்கை 343. சுருக்கமாகச் சொன்னால் சேலத்தில் இருக்கும் எல்லா நீர்நிலைகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சென்று வந்திருப்போம்.
இதில் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறந்த ஏரிகளைத் தேர்வுசெய்யச் சில குறியீடுகளை வரையறை செய்யலாம்: 1) அழிவின் பாதையில் உள்ள ஒரு பறவை (குறிப்பாக நீர்ப்பறவை) இனப்பெருக்கம் செய்ய வேண்டும், 2) அத்துடன் இதர நீர்ப்பறவைகள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும், 3) அதிக எண்ணிக்கையில் வலசை பறவைகள் வந்து செல்ல வேண்டும், 4) பல்வேறு நுண் வாழிடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது ஏரியில் வெறுமனே தண்ணீர் நிறைந்திருக்காமல் ஆழம் குறைவான கரையோரப் பகுதிகள், மரங்கள் அடர்ந்த பகுதிகள், மரங்களற்ற மண் திட்டுகள், மேய்ச்சல் நிலம் போன்ற சமவெளி, கோரைப்புற்கள் முதலியன. எத்தனை வகையான பறவைகள் பதிவுசெய்யப்படுகின்றன என்பது அந்த ஏரிக்குத் தொடர்ச்சியாகச் செல்வதைப் பொறுத்து அமையும் என்பதால், அது கடைசிக் குறியீடாக இருக்க வேண்டும். இருப்பினும் குறைந்தபட்சம் 100 பறவையினங்கள் ஓர் ஏரியில் பதிவு செய்யப்படுவதும் சிறந்த குறியீடுதான். அந்த வகையில் குறிப்பிடத்தக்கச் சில ஏரிகள்:
மணிவிழுந்தான் பழைய ஏரி: சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசலுக்கு 5 கி.மீ. முன் அமைந்துள்ளது மணிவிழுந்தான் ஏரி. அக்சென் ஃபவுண் டேஷன், மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கத்தினால் பல கட்டங்களாக அறிவியல்பூர்வமாக இது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உள்நாட்டு, வலசைப் பறவைகள் உள்பட 145 பறவையினங்கள், 122 தாவரங்கள், 74 வண்ணத்துப்பூச்சிகள், 20 தட்டான்கள், 11 பாம்புகள், உடும்பு, 10 தவளைகள், 10 பாலூட்டிகள், 7 எறும்புகள், பல பூச்சிகள் என 400க்கும் மேற்பட்ட உயிரினங்களை ஆவணப்படுத்தியுள்ளோம்.
ஏரியில் அமைக்கப்பட்டுள்ள மண்திட்டு ஒன்றில் உலக அளவில் அழிவின் பாதையில் உள்ள ஆற்று ஆலா இனப்பெருக்கம் செய்திருப்பது கூடுதல் சிறப்பு. அண்மையில் மணிவிழுந்தான் ஏரியில் 40 ஆற்று ஆலாக்கள் மாலையில் வந்தடைந்து, இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் சென்றன.
இது மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டதிலேயே அதிகபட்ச ஆற்று ஆலாக்களின் எண்ணிக்கை ஆகும். இதைத் தவிர சாம்பல் கொக்கு, செந்நீலக் கொக்கு, சின்ன பச்சைக் கொக்கு உள்பட 15 வகையான நீர்ப்பறவைகளும் 27 வகையான நிலவாழ் பறவைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன.
சின்ன புனல்வாசல் ஏரி: தலைவாசல் வட்டத்திற்கு உள்பட்ட சின்ன புனல்வாசல் ஏரியில் பாம்புத் தாரா, சிறிய அரிவாள்மூக்கன், சிறிய நீர்க்காகம், இந்திய நீர்க்காகம், சின்னக் கொக்கு, ராக்கொக்கு முதலான நீர்ப்பறவைகள் தண்ணீரில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களில் நூற்றுக்கணக்கில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது போன்ற எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள் இனப்பெருக்கம் செய்வதை சேலத்தில் வேறு எங்கும் பார்த்ததில்லை.
மாலை வேளையில் உண்ணிக் கொக்குகள் ஆயிரக்கணக்கில் வந்து அடைகின்றன. வலசை வாத்துகளும் கணிசமான எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. மணிவிழுந்தான் ஏரியில் ஆற்று ஆலா இனப்பெருக்கம் செய்வதற்கு முன்பு வரை, இந்த ஏரி முதலிடத்தில் இருந்ததாகக் கருதலாம்.
நல்லூர் ஏரி: கங்கவல்லி வட்டத்தில், சேலம்-பெரம்பலூர் சாலையின் வலதுபுறம் அமைந்துள்ள நல்லூர் ஏரிக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஊசிவால் வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து முதலான வாத்து வகைகள் நூற்றுக்கணக்கில் வலசை வருவதைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்துவருகிறோம். குறிப்பாக ஊசிவால் வாத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் ஏரியின் ஆழமில்லாத தன்மை. கோடைக்காலம் தொடங்கியவுடன் வற்றும் ஏரியில் தாவரங்கள் முளைத்துவிடும்.
பருவமழையின் போது சுவேதா ஆறு, ஏரியை நிரப்புகையில் அதில் தாவரங்களும் மூழ்கிவிடும். பிறகு குளிர்காலத்தில் வலசை வரும் வெளிநாட்டு வாத்துகள், அந்தத் தாவரங்களை விரும்பி உண்கின்றன. மேலும் நூற்றுக்கணக்கில் மண்கொத்திகளும் வந்து செல்கின்றன. இந்நிலை தொடர வேண்டுமாயின் நல்லூர் ஏரி ஆழப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும். வெளிநாட்டு வாத்துகளைப் பார்ப்பதற்கு சேலத்தில் இதைவிடச் சிறந்த ஏரி வேறில்லை.
நீதிபுரம் ஏரி: மேட்டூர் தாலுகாவில் உள்ள நீதிபுரம் ஏரி, காட்டுப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தக் காடுகளின் தொடர்ச்சி பர்கூர், தாமரைக் கரை, சத்தியமங்கலம் காடுகளுடன் இணைகிறது. நீர்ப்பறவைகள் குறைந்த அளவில் காணப்பட்டாலும் சேலத்தில் மற்ற இடங்களில் பார்ப்பதற்கு அரிய இந்தியக் கல்கௌதாரி, சாம்பல் இருவாச்சி, இராப்பாடி, வெண்புள்ளி விசிறிவாலி, மஞ்சள்கால் பச்சைப்புறா, அமூர் வல்லூறு உட்பட மொத்தம் 134 பறவையினங்கள் இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளன. பறவைகள் தவிர யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் முதலிய பல காட்டுயிர்களும் இந்தப் பகுதியில் தென்படுகின்றன.
டேனிஷ்பேட்டை பெரிய ஏரி: ஓமலூர் தாலுகாவில் உள்ள டேனிஷ்பேட்டை பெரிய ஏரியில் வெண்பிடரிப் பட்டாணிக்குருவி, சிவப்பு சில்லை, கருங்குருகு, அல்லிச் சிறகி, செந்தலை வல்லூறு, வெண்முதுகு பூனைப்பருந்து, சாம்பல்தலை மைனா போன்ற அரிய வகைப் பறவைகள் உள்பட124 வகையான பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஏரியைச் சுற்றி வேளாண் நிலங்களும், அருகே சேர்வராயன் மலைப்பகுதியும் இருப்பதால் பல வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குளிர்காலத்தில் பல வெளிநாட்டுப் பறவைகளை இங்கே பார்க்க முடியும்.
ஒவ்வோர் ஏரியின் தன்மையைப் பற்றிச் சொல்வதற்கு இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டியல் ஏரிகளின் தற்கால நிலையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதாகும். தொடர்ச்சி யான கண்காணிப்பு, மக்கள் அறிவியல் திட்டங்களில் மக்களின் பங்களிப்பு, மீட்டுருவாக்கப் பணிகள், ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அரசின் பங்கு, மக்களின் ஒத்துழைப்பு போன்றவை அதிகரித்தால் இந்தப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படலாம்.
குறைந்தபட்சம் இது போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகளையாவது ஈரநிலங்கள் சட்டம் 2017இன் கீழ் கொண்டு வருவது, மக்களின் ஒத்துழைப்போடு பல்லுயிர் அருமரபுக்களம், பறவைகள் காப்பகம், ராம்சர் அங்கீகாரம் கிடைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிக் குறியீடுகளை சேலத்தில் இது போன்ற பல ஏரிகள் பூர்த்திசெய்கின்றன. இன்னும் பல தலைமுறைகளின் பயன்பாட்டிற்கு நம்முடைய நீர்நிலைகள் உயிர்ப்போடு இருக்க அவை மக்களாலும் உறுதியான சட்டங்களாலும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர், சேலம் பறவையியல் கழகத்தின் இயக்குநர்; ganeshwar.sof@gmail.com
உலக சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5)