சென்னை தனியார் கல்லூரியில் ‘Agentic AI Campus’ திட்டம் தொடக்கம்

சென்னை தனியார் கல்லூரியில் ‘Agentic AI Campus’ திட்டம் தொடக்கம்
Updated on: 
1 min read

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை, கல்விப் பணிகளில் ஒருங்கிணைக்கும் ‘Agentic AI Campus’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் 59ஆவது ஆண்டு நிறைவையொட்டி, செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு திட்டம் கல்லூரியில் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

வழக்கமான ஏ.ஐ. கருவிகள் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நின்றுவிடும் நிலையில், ‘Agentic AI’ தொழில்நுட்பம் பல்வேறு கட்டங்களைக் கொண்ட பணிகளைத் தானாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றல், ஆய்வு, உள்ளடக்கத் தயாரிப்பு, நிர்வாகம் உள்ளிட்ட பணிகளில் மனிதர்களின் வழிகாட்டுதலுடன் ஏ.ஐ. முகவர்கள் (AI agents) செயல்படுவதே இதன் அடிப்படை.

இதனால் இத்திட்டத்தின்கீழ் மாணவியரும் ஆசிரியர்களும் ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்துவதற்கான செயல்முறைப் பயிற்சிகளைப் பெறுவர். இதற்காக கூகுள் க்ளவுட் நிறுவனத்தின் ‘Gemini Enterprise’, ‘Digital Campus on Google Cloud – Agentic Premier Tier’ தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

கற்றல் உள்ளடக்கங்களைத் தயாரித்தல், கல்வி ஆய்வுகளுக்கு உதவுதல், பாடங்களைப் புரிந்துகொள்ள உதவுதல் போன்ற பணிகளில் ஏ.ஐ.யின் பயன்பாடுகள் ஆராயப்படவுள்ளன. வழக்கமான நிர்வாகப் பணிகளிலும் ஏ.ஐ.யைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.ஐ. வழங்கும் தகவல்களை மாணவியர் விமர்சனரீதியாக மதிப்பிடுவதுடன், தங்களது கற்றலுக்கு உதவும் கருவியாக மட்டுமே அதைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை தனியார் கல்லூரியில் ‘Agentic AI Campus’ திட்டம் தொடக்கம்
‘ஃப்ரீலான்ஸர்’களின் கவனத்துக்கு...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in