

எனக்கு டிடெக்டிவ் ஆக வேண்டுமென்று ஆசை. அதனால், கிரிமினாலஜி இளநிலை படித்துள்ளேன். முதுநிலை படிக்க வேண்டும் என்று ஆசை. இத்துறையைப் பற்றிய தகவல்களைத் தெரிவியுங்கள். - லாரன்ஸ், திருநெல்வேலி
துப்பறிவாளராக வேண்டுமெனில், அதற்காக கிரிமினாலஜி படிக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுதுங்கள். பணி நியமனம் பெற்றபின் காவல் துறையிலேயே சி.பி.சி.ஐ.டி பிரிவில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். அல்லது மத்திய அரசின் போட்டித் தேர்வை எழுதி சி.பி.ஐ. (Central Bureau of Investigation), ஐ.பி. (Intelligence Bureau), அல்லது நாட்டின் உயரிய தேர்வான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வெழுதி அதிகாரி ஆகலாம். இதன் மூலம் ‘ரா’ (Research and Analysis Wing) நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு பெறலாம். தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் தோவல், பாகிஸ்தானில் பல ஆண்டு காலம் ரகசிய உளவாளியாகப் பணியாற்றியவர். எனவே, இலக்கை நிர்ணயித்துவீட்டீர்கள் எனில். அதை அடைய இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
என் மகள் பி.ஏ. அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். முதுகலைப் பட்ட மேற்படிப்பில் எம்.ஏ. அரசியல் அறிவியலைத் தேர்வு செய்யலாமா அல்லது எம்.ஏ. சர்வதேச உறவுகள் படிப்பைத் தேர்வுசெய்யலாமா என்பதையும் இவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றியும் சொல்லுங்கள். - தேவி, திண்டிவனம்
முதுகலைவரை அரசியல் அறிவியல் (Political Science) படித்துவிட்டு நெட் / ஸ்லெட் தேர்வு எழுதி கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றலாம். அரசியல் அறிவியல் / சர்வதேச உறவுகள் (International Relations) படிப்புகளுக்கு எனத் தனிப்பட்ட பதவிகளோ வேலைவாய்ப்புகளோ இல்லை. மற்ற பட்டப் படிப்புகளைப் போல இதைக் கொண்டு போட்டித் தேர்வு எழுதி (டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி) பணி வாய்ப்பு பெற முடியும். பொதுவாக அரசியல் அறிவியல் பாடப்பிரிவு, குடிமைப் பணி தேர்வு எழுத உதவும்.
சர்வதேச உறவுகள் படிப்பை முடித்துவிட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (அகதிகள் பிரச்சினை / பன்னாட்டு அகதிகள் பிரச்சினைகளைக் கையாளும் நிறுவனங்கள்) அளிக்கும் வேலைவாய்ப்பைப் பெறலாம் அல்லது உங்களுக்கு வசதி இருப்பின் மேற்கத்திய நாடுகளின் உயர் பல்கலைக்கழகங்கள் வழங்கும் (பிரிட்டன், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா) சர்வதேச உறவுகள் படிப்பைப் படித்துவிட்டு பன்னாட்டுத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் வாய்ப்பு அல்லது ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டுப் பரஸ்பர உறவுகள், அகதிகள் முகாம் குறித்த பிரிவுகளின்கீழ் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டும் என முடிவுசெய்வதற்கு முன்பு, உங்களின் நிதிநிலையை நன்கு பரிசீலனை செய்யுங்கள்.
- கட்டுரையாளர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர்