கல்வியில் புதிய பாதைகள் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 50

கல்வியில் புதிய பாதைகள் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 50
Updated on
2 min read

இந்தியாவிலும் வெளிநாடு களிலும் மறைந்திருக்கும் இதுவரை அதிகம் அறியப் படாத புதிய கல்வித் துறைகளைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும் ஆர்வத்தை இத்தொடரை எழுதியதன் மூலம் எனக்குள் வளர்த்துக்கொண்டேன்.

தமிழரின் பாரம்பரிய ஆழம்

தமிழ்ச் சமூகம் வரலாற்றுரீதியாகவே படைப்பாற்றலும் ஆராயும் மனப்பான்மையும் கொண்டது. நமது இசை, இலக்கியங்கள், கோயில்கள் என்று ஆயிரக்கணக்கான சான்றுகள் இதை நிரூபிக்கின்றன. சோழர்கள் கட்டமைத்த கல்லணையும் நீர்ப்பாசன அமைப்பும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும் அரிய பொறியியல் அற்புதங்கள்.

சங்க இலக்கியம் முதல் கல்வெட்டுகள்வரை தமிழர்களின் அறிவியல், கணித, கலைத் தேடல் ஆயிரமாண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்திருக்கிறது. வரலாற்றில் பல சக்திகள் இந்த அறிவு மரபை அழிக்க முயன்றுள்ளன. ஆனாலும் தமிழ் அறிவு மரபு ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துள்ளது. இன்றைய போட்டி நிறைந்த உலகிலும் அதே மரபு தொடர வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது

கடந்த 24 ஆண்டுகளாக மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் பணியாற்றிய அனுபவம் எனக்கு ஓர் உண்மையைத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, இயற்கையாகவே ஏதோ ஒரு திறமையுடன் பிறக்கிறது.

அந்தத் திறமையை இயல்பாக வளரவிட்டால், அது நிச்சயம் மலரும். ஆனால், ‘பொறியியலும் மருத்துவமும்தான் வழி’ என்கிற பொதுவான எண்ணத்துக்குள் அவர்களைத் திணித்தால், போட்டி நிறைந்த ஒரே பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

லட்சக்கணக்கானோர் போட்டியிடும் பொதுவான துறைகளுக்கு மாறாக, குறைந்த மாணவர்களே தேர்ந்தெடுக்கும் தனித்துவமான துறைகளில் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தொடரில் நாம் அறிமுகப்படுத்திய ஜியோபயாலஜி, ஃபோட்டானிக்ஸ், வாசனைத் தொழில்நுட்பம், மக்கள்தொகை அறிவியல், கடல்சார் சட்டம், கணக்கீட்டு நிதியியல், புவி - கோள் அறிவியல் போன்றவை அதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

இத்துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி இளைய தலைமுறையினருக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

இந்தத் தகவல் ஒரு மாணவருக்காவது சரியான நேரத்தில் சென்று, அவருக்குப் பொருத்தமான-தனித்துவமான துறையைத் தேர்ந்தெடுக்க உதவினால், இந்தப் பயணம் முழுமை பெற்றதாகக் கருதுவேன்.

இளைய தலைமுறைக்கு ஓர் அழைப்பு

திறமையான இளைஞர்களையும் கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களையும் பெற்றி ருப்பதில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.

ஆங்கிலத்தை நன்கு பேசும் தமிழ்ச் சமூகத்துக்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு. உலகம் தேடும் இளம், திறமையான மனிதவளத்தை வழங்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

ரீல்களும் பொழுதுபோக்கும் நம் கவனத்தைத் திசைதிருப்பும் இன்றைய காலக்கட்டத்தில், கல்வியிலும் அறிவுத் தேடலிலும் கவனம் செலுத்துவது அவசியம். தமிழின் அறிவு மரபைப் பாதுகாத்து, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய இளைய தலைமுறையிடம் உள்ளது.

தங்களின் ஆராயும் திறனையும் படைப்பாற்றலையும் பயன்படுத்தி, புதிய தனித்துவமான வாய்ப்புகளை இளைய தலைமுறை அடையாளம் காண வேண்டும். அதன் மூலம் தமிழ்ச் சமூகம் புதிய எழுச்சியை நோக்கி முன்னேறும்.

பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கும் நல்ல அரசுக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைச் சரியான நேரத்தில் அறிந்துகொள்வதே முக்கியம்.

இதுபோன்ற வாய்ப்புகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு எங்களது இணையதளம் (www.indiacollegefinder.org) வழியாகத் தொடர்புகொள்ளலாம். தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்வொரு மாணவரும் கல்வியின் வழியாக உயர்ந்து, உலகளவில் தனக்கான இடத்தை உருவாக்க வாழ்த்துகள்!

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

(நிறைவடைந்தது)

கல்வியில் புதிய பாதைகள் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 50
இந்தியாவில் சுரங்கவியல் பொறியியலின் எதிர்காலம்? - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 49

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in