

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு முதலாம் ஆண்டில் சேர்ந்து கல்லூரி வாழ்க்கையைத் தொடங்குவது புதிய அனுபவம். சிலருக்குக் கல்லூரி வாழ்க்கையோடு சேர்ந்து விடுதி வாழ்க்கையையும் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
புதிய நண்பர்கள், புதிய கல்லூரி, புதிய சூழல் என எல்லாமே புதிதாக இருக்கும்போது, சிலருக்கு இயல்பாக பதற்றம் உருவாகலாம். அறையைப் பகிர்ந்துகொண்டு வாழ்வது, செலவுகளை நிர்வ கிப்பது, படிப்பில் கவனம் செலுத்துவது போன்ற விஷயங்கள் தொடக்கத்தில் சவாலாகத் தோன்றலாம். அப்படி ஊரைவிட்டு வேறு ஊருக்கு வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கான சில டிப்ஸ்...
* மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை ஆவணங்கள், அடையாள அட்டைகள் (ஆதார், ரேஷன் கார்டு) போன்ற முக்கிய ஆவணங்களின் நகல்களைத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஸ்கேன் செய்து திறன் பேசியில் பதிவேற்றம் செய்து வைத்திருப்பது உதவியாக இருக்கும்.
* கல்லூரிக்கு அணிந்து செல்லவேண்டிய உடைகள், காலணி, நோட்டுப் புத்தகங்கள், பேனா, திறன்பேசி, மடிக் கணினி யின் சார்ஜர் போன்ற பொருள்களை எடுத்துச் செல்லுங்கள்.
* அவசரக் காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய குடும்பத்தினர், மருத்துவர், விடுதி அலுவலகம் போன்றோரின் கைபேசி எண்களைத் தனியே குறித்து வைத்துக் கொள்ளலாம்.
* கல்லூரி, பேருந்து நிறுத்தம், மருத்துவ மனை போன்ற முக்கிய இடங்கள் எங்கு உள்ளன என்பதையும் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது நல்லது.
விடுதியில் குடிநீர், உணவகம், மருத்துவ உதவி போன்ற வசதிகள் எங்கு கிடைக்கின்றன என்பதையும் முதல் நாளிலேயே அறிந்துகொள்ளுங்கள். வழக்கமாகப் பயன்படுத்தும் மருந்துகள் இருந்தால், அவற்றைப் போதுமான அளவில் எடுத்துச்செல்ல வேண்டும்.
* காலை உணவைத் தவிர்ப்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும். எனவே, சீரான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங் கள். போதுமான நேரம் தூங்குவதும் அவசியம்.
* விடுதி வாழ்க்கையில் தேவையற்ற செலவுகள் வரலாம். மாதந்தோறும் செலவுக்கான ஒரு வரம்பை நிர்ணயித்து, அதற்குள் செலவு செய்ய முயற்சி செய்யலாம். அவசரத் தேவைக்காக சிறிதளவு பணத்தைத் தனியாக வைத்திருப்பதும் நல்லது.
* விடுதியில் தங்கியுள்ள மற்றவரின் பொருள்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்த வேண்டாம். அது தேவை இல்லாத பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
* அறையிலிருந்து வெளியே செல்லும் போது அலமாரியையும் அறையையும் பூட்டிவிட்டுச் செல்லுங்கள். கல்லூரிக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தால் நண்பர் அல்லது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்வதுதான் பாதுகாப்பானது.
* நண்பர்கள் கூட்டம், பேச்சு, விளையாட்டு என விடுதியில் கவனச் சிதறல் ஏற்பட லாம். எனவே, படிப்புக்கு எனத் தனியே நேரம் ஒதுக்கி நாள்தோறும் படிக்கும் பழக்கத் தைப் பின்பற்றுங்கள்.
* தொடக்க நாள்களில் தனிமை உணர்வு அல்லது வீட்டின் ஞாபகம் உங்களை வாட்டலாம். அவ்வப்போது குடும்பத்தின ருடன் தொடர்பில் இருங்கள். நேரம் கிடைக் கும்போது ஊருக்குச் சென்று வரலாம்.