

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிப்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் ஆகஸ்ட் 31ஆம் தேதியை 'சர்வதேச பாதுகாப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவு நாளாக' (International Day of Safe, Secure and Trustworthy Artificial Intelligence) ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டின் முன்மொழிவை ஏற்று ஐ.நா. பொது அவை இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஏ.ஐ. நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 31 ஏன்?
1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று அமெரிக்காவின் டார்ட்மௌத் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவு வெளியிடப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுத் துறை தனித்துவமான அறிவியல் ஆராய்ச்சிப் பிரிவாக உருவெடுப்பதற்கான முக்கியமான தொடக்கமாக இது கருதப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திட்டங்கள் என்னென்ன?
ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளையொட்டி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாடு தொடர்பாகப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்கு கள், பயிலரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்த உறுப்பு நாடுகளை ஐ.நா. ஊக்குவித்துள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவுக் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச அளவிலான அமைப்புகளை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.