

“White lie’ என்று ஒரு புதினத்தில் படித்தேன். இதென்ன வேடிக்கை?' என்று வியப்படைகிறார் ஒரு வாசகர்.
பொய்களில் வண்ணங்கள் உண்டு! நமக்குக் கொஞ்சம் பாதகம் வந்தாலும் பரவாயில்லை என்று பிறருக்கு உதவுவதற்காக நாம் கூறும் பொய், ‘White lie’ வகையைச் சேரும். புரை தீர்ந்த நன்மை பயப்பதால் இந்தப் பொய் வாய்மைக்கு சமம்! பிறர் மனம் புண்படக் கூடாதே என்பதற்காக கூறும் பொய்யும் ‘white lie’தான்.
‘Gray lie’ என்றொன்று உண்டு. பெரும்பாலான பொய்கள் இந்த வகையைச் சேரும். இது ஓரளவுக்கு நமக்கு நன்மை பயக்கும். ஓரளவுக்கு பிறருக்கு உதவும். ஒரு நண்பரை சிக்கலிலிருந்து காப்பாற்ற ஒரு பொய்யைக் கூறுகிறீர்கள். வருங்காலத்தில் இதேபோன்ற சிக்கலில் நீங்கள் சிக்கும்போது அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில்! அப்போது நீங்கள் கூறுவதும் ‘grey lie’.
‘White lie’ என்று ஒன்று இருக்கும்போது ‘black lie’ என்றதும் இருந்தாக வேண்டும் அல்லவா? நமக்கு நேரும் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்காகவும் சிக்கலிலிருந்து விடுபடவும் மட்டுமே கூறப்படும் பொய் இத்தகையது. அதாவது, நமக்கு ஒரு நன்மை நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகக் கூறப்படும் பொய்.
‘Red lie’ என்பது மேலும் மோசம். ஒருவரைப் பழி தீர்த்துக்கொள்ள கூறப்படும் பொய். இதனால் மாபெரும் தீங்கு மற்றவருக்கு நேர வாய்ப்பு உண்டு. ஒருவரது ஒழுக்கத்தைப் பற்றி மற்றவரிடம் தவறாகக் குறைகூறுவதும் இந்தத் தன்மை கொண்டது.
மற்றபடி பச்சைப் பொய் என்பதற்கு சமமாக ‘green lie’ இருக்க வேண்டுமே என்று கேட்டு விடாதீர்கள்.
***
“An M.P.’ என்பது தப்பு இல்லையா? ‘A M.P.’ என்றல்லவா அந்த நாளிதழில் அச்சிட்டு இருக்க வேண்டும்?' என்ற கேள்வியோடு படபடக்கும் நண்பருக்கான விடை இது.
‘A,e,i.o, u’ ஆகிய எழுத்துகளில் (vowels) தொடங்கும் பெயர்ச் சொற்களுக்கு முன்னால் இடம்பெற வேண்டிய article ‘an' என்பதுதான். இந்த அடிப்படை மீறப்பட்டது என்பதால்தான் அந்தப் படபடப்பு.
‘Abbreviations’ஐப் பொருத்தவரை அதன் முதல் எழுத்து எப்படி ‘உச்சரிக்கப்படுகிறது' என்பதைத்தான் பார்க்க வேண்டும். M.P. என்பது Em.Pee என்றுதான் உச்சரிக்கப்படுகிறது. E என்பதற்கு முன் வரவேண்டிய article, ‘an’ என்பது தானே? இதன்படி an M.P., an MLA. அதன்படி a UNESCO World Heritage Site என்பதே சரியானது. அதாவது உச்சரிப்பில் அது ‘Yunesco’.
***
‘Rob’ செய்வது என்றாலும் ‘steal’ செய்வது என்றாலும் ஒன்றுதானா?
இல்லை. ‘Stealing’ என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரது பொருளை எடுத்துக்கொள்வது. திருட்டு.
‘Robbing’ என்பது பலவந்தமாக ஒருவரது பொருளை பிடுங்கிச் செல்வது. அல்லது அந்தப் பொருளை அளிக்காவிட்டால் தாக்கப்படுவோம் என்ற பயத்தில் அவர் தானாகவே தன் பொருளை அளிப்பது. கொள்ளை.
‘Burglary’ என்பது எதையோ திருடுவதற்காக இன்னொருவரின் வீடு போன்ற இடங்களுக்குள் சட்டமீறலாக நுழைவது.