

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து எந்த உயர்கல்வியில் சேரலாம் என மாணவர்களும் பெற்றோரும் விவாதித்து வரும் காலம். முன்பு பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள், இம்முறை கவனம் பெற்றுவரும் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான படிப்புகளைத் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன, எங்கு படிக்கலாம்? - செயற்கை நுண்ணறிவு துறையில் பி.டெக் பட்டப்படிப்பு படிக்கலாம். இந்தியத் தொழில் நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி), தேசியத் தொழில்நுட்பக் கழகங் கள் (என்.ஐ.டி) பலவற்றில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமின்றிச் சிறப்பு நுழைவுத் தேர்விலும் தகுதி பெற்றிருப்பது அவசியம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்திலும் சில தனியார் கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பி.இ, பி.டெக் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று, பொறியியல் கலந்தாய்வு வழியாகக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, எல்லாத் துறைகளிலும் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது வழங்கப்படும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கட்டிடவியல், இயந்திரவியல் தொடர்பான பொறியியல் பாடப்பிரிவுகளிலும் இது தொடர்பான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். பட்டப்படிப்புகள் மட்டுமின்றிச் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஏராளமான சிறப்புச் சான்றிதழ் படிப்புகள் இணையதளத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்பு: அச்சம் தேவையா? - செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவால் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறி போகும் என்கிற அச்சம் பரவலாக இருக்கிறது. இது குறித்து ஆய்வுசெய்த துறைசார் வல்லுநர்கள் இதன் வளர்ச்சியால் வேலை எளிதாகும், வேலையின் தன்மை மேம்படும். ஆனால், வேலை வாய்ப்பு பறிபோகாது எனத் தெரிவித்துள்ளனர்.
சில குறிப்பிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் வேலை வாய்ப்பு பறிபோனாலும் முற்றிலுமாக மனிதர்களுக்கு அது மாற்று ஆகாது எனச் சொல்லப்படுகிறது. வேலை பளு குறையும் அதே நேரத்தில் பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை விரிவுப்படுத்திச் சரியாக பயன் படுத்த ஆள் தேவை என்பதால் அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என நம்பப்படுகிறது.
நாளுக்கு நாள் ஒரு புதிய உலகை கட்டமைக்க வளர்ச்சி பெற்று வரும் இந்தச் செயற்கை நுண்ணறிவுத் துறையை ஒதுக்கிவிட முடியாது என்பதால் இதைச் சார்ந்து அறிவை வளர்த்துக்கொள்வது நல்லதே!