

விக்டோரியா மகாராணி பிறந்தநாளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் காமன்வெல்த் தினம் கொண்டாடப்படுகிறது. காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சுதந்திரம், சகிப்புத்தன்மை, நீதி போன்றவற்றின் மாற்றங்களைக் கௌரவிக்கும் தினமாக இது நிறுவப்பட்டது. பல நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் திங்கள்கிழமை காமன்வெல்த் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் மே 24ஆம் தேதி காமன்வெல்த் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் இந்தியாவிலும் பிரிட்டனின் பிற காலனிகளிலும் பிரிட்டிஷ் பேரரசு உருவானதை நினைவூட்டுவதால் பேரரசு தினம் என்று அழைக்கப்பட்டது. விக்டோரியா மகாராணி 1901இல் இறந்த பிறகு அவரைக் கௌரவிக்கும் விதமாக முதன்முதலில் பேரரசு தினமானது மே 24, 1902 அன்று விக்டோரியா மகாராணியின் பிறந்தநாளன்று கொண்டாடப்பட்டது. அதிகாரப்பூர்வமாகப் பேரரசு தினம் 1916 ஆண்டிலிருந்து வருடாந்திர நிகழ்வாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, பல நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததால் பேரரசு தினம் காமன்வெல்த் தினமாக மாற்றப்பட்டது. அமைதி, சமத்துவம், ஜனநாயகத்தைப் புரிந்துகொள்வதற்காகவும் இது கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு காமன்வெல்த் தினத்துக்கான கருப்பொருள் ‘நிலையான, அமைதியான பொது எதிர்காலத்தை உருவாக்குதல்’.
- ஸ்ருதி பாலசுப்ரமணியன், பயிற்சி இதழாளர்.