

வீதி வகுப்பறை. இது பள்ளிப் பாடங்களை நடத்தும் வழக்கமான வகுப்பறை அல்ல. தாங்கள் கற்க விரும்புவதைக் குழந்தைகளே கேட்கும் சுதந்திரமுள்ள இடம். குழந்தைகளின் விருப்பமே பாடமாகி ஆசிரியர் வீதிக்கு வந்து கற்றுத்தரும் இடமே வீதி வகுப்பறை.
கரோனோ காலம்: கரோனா காலத்தில் உலகமே அடுத்து என்ன ஆகும் என்கிற பயத்தில் மூழ்கிக் கிடந்தது. பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும்? யாருக்கும் தெரியாது. அப்போது பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் இணையவழிச் சந்திப்பில் கல்வியாளர் ச.மாடசாமி, “குழந்தைகளை நேரில் சந்திக்க முடியுமான்னு பாருங்க. சாப்பிட்டாங்களான்னு கேளுங்க” என்றார்.
இந்த வார்த்தைகள் என்னை உலுக்கின. என் கால்கள் மாணவர்களின் வீடு தேடிச் சென்றன. என் பள்ளி இருக்கும் நான்கு கிராமங்களில் உணவுப் பிரச்சினை உள்ள குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களது உணவுத்தேவையை நண்பர்கள் உதவி யோடு பூர்த்திசெய்ய முடிந்தது. மாணவியரின் நிலை மோசமாக இருந்தது. வீடு, வயல்வெளி வேலைகளால் அதிக மன உளைச்சல் அடைந்திருந்தனர். சிலர் தற்கொலைக்கு முயன்றதும் நடந்தது.
வகுப்பறை உருவானது: அந்தப் பதற்றமான சூழலிலும் வீதிகளுக்குச் சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தேன். தெருத் தெருவாக அலைந்து, அவர்களுக்கான ஒரு வெளியை ஊருக்குள் உருவாக்க முயன்றேன். அவர்கள் தொலைக்காட்சி பார்த்துப் பார்த்து நொந்துபோயிருந்தனர்.
“ஏதாவது செய்யலாம் டீச்சர்” எனக் கேட்க, முதலில் பாடல்களைத் தந்தேன். உற்சாகமாகப் பாடினர். பின் சின்னக் கதைகள் தந்தேன். உற்சாகமாக வாசித்தார்கள். எல்லாரும் சேர்ந்து அதை நாடகமாக்கினர். ‘இதைச் செய்யுங்கள்’ என நான் எதுவும் சொல்லவில்லை. அவர்களிடமிருந்த அபரிமிதமான நேரத்தை வைத்து என்ன செய்வது என வழி கேட்டனர்.
சில வழிகாட்டுதல்களுடன் நேரத்தை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அதுதான் வீதி வகுப்பறையாக மாறியது. சில மாதங்கள் கழித்து, சிலம்பம் கற்றுக்கொள்ள விரும்பினர். தெரிந்த சிலம்பம் மாஸ்டர் உதவியுடன் கற்றுத் தர முடிந்தது. இன்னும் நேரம் இருந்தது. வாசிக்கலாம் என முடிவெடுத்தோம்.
நூலக முயற்சி: கிராமத்துக்கு ஒரு நூலகம் தொடங்கி, அந்தக் கிராமத்தின் மாணவர் வீட்டில் புத்தகங்களை வைத்தேன். அந்த மாணவரே நூலகர். வீதி வகுப்பறையில் வாசித்த கதையை அவ்வப்போது சொல்வார்கள். இரண்டு மாதங்கள் போயின.
என்னுடைய மாணவிகள் கஸ்தூரி, மகா, இனியா ஆகியோர் 100 புத்தகங்களை வாசித்து, அவற்றைப் பற்றிக் குறிப்பு எழுதியிருந்தனர். எல்லாக் கிராமத்துக் குழந்தைகளும் குறைந்தபட்சம் 20 புத்தகங்கள் வாசித்திருந்தனர். இளம் பெற்றோர் சிலர் புத்தகங்கள் வாசித்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொன்ன அனுபவத்தையும் பகிர்ந்தனர்.
சில நேரம் என்னால் செல்ல முடியாதபோது ஒரு மாணவியின் பெற்றோர் ஒருங்கிணைத்தனர். ஆங்கிலத்தில் அழகாக எழுதும் கையெழுத்துப் பயிற்சி கொடுத்தனர். ஆங்கிலம் பேச வேண்டும் என்று மாணவிகள் ஆர்வமாகக் கேட்டனர். பேப்பர்- பேனா இல்லாமல் ஆங்கிலம் பேசக் கற்றுத் தந்தோம். வீதி வகுப்பறை மூலம் சில மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க முடிந்தது. குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதிலிருந்து தடுக்க முடிந்தது. குறிப்பாகப் பெற்றோரிடம் நெருங்க முடிந்தது. மாணவர்களுக்காக அவர்களிடம் உரையாடும் வெளி கிடைத்தது.
வீதி வகுப்பறை 2.0: பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளையொட்டி மாநிலம் முழுதும் ‘வீதி தோறும் வாசிப்பு’ நிகழ்ச்சியை நடத்தினோம். இதற்காகச் சிறிய குழுவைக் கொண்ட குழந்தைகளுடன் வாசிப்பது எனத் திட்டமிட்டோம்.
ஆனால், வாசிக்க புத்தகங்கள் இல்லை. அதுவும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். புத்தகங்கள் வாங்கிப் படிக்க வைக்க இணைந்த பலருக்கும் அதற்கான பொருளாதார வசதி இல்லை. இரண்டு பக்கக் கதைகளை மின்படி வடிவில் உருவாக்கி நகல் எடுக்கச் சொல்லி அனுப்பினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அன்றைய தினம் குழந்தைகள் வாசித்த படங்கள், காணொளிகள் புலனம் வழி வந்து குவிந்தன. பல இடங்களில் புத்தகத் தேர் செய்து மக்களின் கவனத்தை வாசிப்பின் மீது திருப்பினார்கள். கோலம் போட்டும், புத்தகத் தோரணம் அமைத்தும், வாசிக்க வரவேற்பு மடல் தயாரித்தும் வாசிப்பைக் கொண்டாட்டமாக மாற்றினர்.
நீலகிரியில் விடாத மழையில் மின் இணைப்பு இல்லாத நிலையிலும் குழந்தைகள் வாசித்தனர். நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளி ஆசிரியர், வாசிப்பு பற்றிக் கேள்விப்பட்டு வாசிக்க வைத்துள்ளார். வீதி வகுப்பறை மூலம் வீதிதோறும் வாசிப்பு சாத்தியமானது. சுமார் 800க்கும் அதிகமான இடங்களில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நாளில் வாசித்திருக்கிறார்கள்.
இது தொடர வேண்டும். மாதமிருமுறை இவ்வீதி வாசிப்பைச் சாத்தியமாக்க அடுத்தகட்ட திட்டமிடலில் இருக்கிறோம். குழந்தைகள் தயாராக இருக்கிறார்கள். நாம்தான் இன்னும் மெனக்கெட வேண்டும்.
கட்டுரையாளர், வீதி வகுப்பறை மாநில ஒருங்கிணைப்பாளர்.