

மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC - Staff Selection Commission) மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி, பல்லாயிரக்கணக்கான பதவிகளை நிரப்பிவருகிறது. கடந்த ஆண்டு வரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்திவந்த தேர்வாணையம், இந்த ஆண்டு முதல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, அசாமி, மணிப்புரி, ஒடியா, பெங்காலி ஆகிய மொழிகளில் ‘SSC HSCL’ தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இப்போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வு மூலம் 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், தீர்ப்பாயங்கள் போன்ற அரசு சார்ந்த அமைப்புகளில் கீழ்நிலை எழுத்தர்/இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk/Junior Secretariat Assistant) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 01-08-23 அன்று 18 வயதுக்கு மேல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இறுதி நாள் ஜூன் 6ஆம் தேதி. போட்டித் தேர்வு (அடுக்கு I) ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இப்போட்டித் தேர்வில் இரு அடுக்குகள் உள்ளன. அடுக்கு 1இல் வெற்றி பெற்றால்தான் அடுக்கு 2இல் பங்கேற்க முடியும். எனவே, அடுக்கு 1ஐப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
அடுக்கு 1: கணினிவழித் தேர்வு (Online Computer Based Test), 100 கொள்குறி வகை வினாக்கள், ஒவ்வொரு வினாவின் சரியான விடைக்கும் இரண்டு மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 200. தவறான விடை ஒவ்வொன்றுக்கும் 0.5 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு நடைபெறும் நேரம் 60 நிமிடங்கள்.
பாடத்திட்டம்: பொது நுண்ணறிவு (Reasoning), அடிப்படைக் கணித அறிவு, அடிப்படை ஆங்கில அறிவு, பொது விழிப்புணர்வு ஆகிய ஒவ்வொரு பாடத்திலிருந்தும் 25 வினாக்கள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். அடுக்கு 1 தேர்வில் தேர்ச்சிபெற்று அடுக்கு 2 தேர்வு எழுத தகுதிபெற தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களாக பொதுப் பிரிவு (Unreserved) 30%, இதர பிற்படுத்தப்பட்டோர்/பொருளாதார நலிந்தோர் (OBC/EWS) 25%, மற்ற பிரிவினர் 20% எடுக்க வேண்டும். நான்கு பாடங்களிலும் அடுக்கு 1இல் அமைந்துள்ள பாடப்பிரிவுகளைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியம்.
பொது நுண்ணறிவு: ஆங்கில எழுத்து வரிசை/தொடர், குறியீடுகளும் மறு குறியீடுகளும் (Coding and Decoding), எண் மற்றும் எழுத்து கலந்த தொடர்கள், தரம், திசைகள், இருக்கை ஏற்பாடு, புதிர்கள், அட்டவணையைப் பயன்படுத்துதல், சிலாக்கியம், ரத்த சம்பந்த உறவுகள், உள்ளீடு-வெளியீடு.
அடிப்படைக் கணித அறிவு: கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்திச் சுருக்குதல், விகிதம் மற்றும் கலவை & அலிகேஷன் விதி, சராசரி, விழுக்காடு, லாப நஷ்டம், தள்ளுபடி, தொடர் தள்ளுபடி, தனிவட்டி, கூட்டு வட்டி, காலமும் தூரமும், காலமும் வேலையும், சுற்றளவு, பரப்பளவு, கன அளவு, உருளை, கூம்பு, கோளம், தரவு விளக்கம், எண்மாணம், எண் வரிசைகள், வரிசை மாற்றம், நிகழ்தகவு (probability).
அடிப்படை ஆங்கில அறிவு: படித்துப் புரிந்துகொள்ளுதல், பொருத்தமான வார்த்தைகளை இடுதல், எழுத்துகள் மாறிய வார்த்தையிலிருந்து சரியான வார்த்தையை அறிதல், வெற்றிடம் நிரப்புதல், பிழையறிந்து திருத்துதல், பத்தியை நிறைவு செய்தல், வாக்கியத்திற்கான வார்த்தையைக் கண்டறிதல், செய்வினை, செயப்பாட்டு வினை.
பொது விழிப்புணர்வு: வரலாறு, புவியியல், கலாச்சாரம், பொருளாதாரம், அரசின் பொது கொள்கைகள், அறிவியல் ஆராய்ச்சி, விருதுகள், கௌரவங்கள், நூல்களும் நூலாசிரியர்களும். அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் எளிய முறைகள் மூலம் முறையாகப் பயிற்சி செய்து பழைய வினாத் தாள்களுக்கு உரிய நேரத்தில் விடையளித்துப் பழகினால் ‘SSC HSCL 2023’ போட்டித் தேர்வு அடுக்கு 1இல் தேர்ச்சி பெற்று, அடுக்கு 2 எழுதத் தகுதி பெறுவது உறுதியாகும்.
கட்டுரையாளர், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்