

பொறியியல் படிப்புக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. இத்துறையில் வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. பொறியியலில் புதிதாக எத்தனை படிப்புகள் வந்தாலும், வழக்கமான கட்டிடப் பொறியியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப துறைச் சார்ந்த படிப்புகளுக்கே மவுசு அதிகமாக இருக்கும். ஆனால், அண்மைக்காலமாக கடல் சார்ந்த பொறியியல் படிப்புகளின் பக்கமும் மாணவர்கள், பெற்றோரின் பார்வைத் திரும்பியிருக்கிறது.
என்ன, எங்கு படிக்கலாம்? - சர்வதேச அளவில் கடல்சார் போக்குவரத்துக்கான தேவை எப்போதும் இருப்பதால் இத்துறைச் சார்ந்த படிப்புகளைப் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அது மட்டுமல்ல இத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகளும் இருப்பதாகத் துறை வல்லுநர்கள் உறுதிபடச் சொல்கிறார்கள்.
பிளஸ் 2 படிப்பை முடித்து, உயர் கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் கடல் சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் இருந்தால் இப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இத்துறை சார்ந்து எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் வழங்கப்படுகின்றன? இதுபற்றி ஓய்வுப் பெற்ற தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் (என்.ஐ.ஓ.டி.) கடல் கண்காணிப்பு அமைப்பின் திட்ட இயக்குநர் ஆர். வெங்கடேசன் நம்மிடம் பேசினார்.
“ஒரு சில கல்வி நிறுவனங்களில் பி.டெக் படிப்பாகவும், சில கல்லூரிகளில் பி.இ படிப்பாகவும் கடல்சார் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை, கோரக்பூர் ஐ.ஐ.டி.களில் இப்படிப்பில் சேர சிறப்பு நுழைவுத் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் சேர பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இது தவிர சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சிறப்பு நுழைவுத்தேர்வின் மூலம் கடல் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. மரைன் அல்லது ஓஷன் பொறியியல், நேவல் ஆர்க்கிடெக்சர், வானிலை அறிவியல் போன்ற படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.” என்கிறார் வெங்கடேசன்.
கல்வி கட்டணம்: மற்ற பொறியியல் படிப்புகள் போல அல்லாமல், கடல் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கு ஆகும் செலவு அதிகம். இதனால், இப்படிப்பைத் தேர்வு செய்யாமல் செல்வோரும் உண்டு. ஆனால், இத்துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு இருக்கிறது என்கிறார் வெங்கடேசன். “இப்படிப்புக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் செலவாகும் என்பது உண்மைதான்.
எனினும், இது போன்ற படிப்புகளைக் கல்வி கடன் பெற்று படிக்கலாம். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகையைப் பெற்றும் படிக்கலாம். இவற்றை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். படிப்பை முடிப்பவர்களுக்கு இத்துறைச் சார்ந்த வேலைவாய்ப்புகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பது உறுதி” என்கிறார் வெங்கடேசன்.
வேலை வாய்ப்புகள்: கடல் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மேல் படிப்புகளுக்கு வாய்ப்பு உண்டா? “எம்.டெக்., ஆய்வுப் படிப்புகளைப் மேல் படிப்பாகப் படிக்கலாம். மேல் படிப்பை முடித்தவர்கள் கடல்சார் ஆய்வங்களில் பணியாற்றலாம். தென்னிந்தியாவில் சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசின்கீழ் இயங்கும் கடல்சார் ஆய்வகங்கள் செயல்படுகின்றன.
இந்த ஆய்வகங்களில் பல்வேறு துறைச் சார்ந்து வேலைவாய்ப்புகள் உள்ளன. கடல்சார் படிப்புகளைப் பொறுத்தவரை இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
ஆய்வகங்கள் தவிர்த்து அரசு, தனியார் மூலம் செயல்படும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பயிற்சி நிலையிலேயே நல்ல சம்பளம் கிடைக்கும். அடுத்த கட்ட உயர்வுகளை அடையும்போது அதிக சம்பளத்தில் பணிக்கு சேரலாம்” என்கிறார் வெங்கடேசன்.
அதே வேளையில், கடல் சார்ந்த பணிகளில் சிறந்து விளங்க கல்விப் படிப்பு மட்டுமல்ல, நடைமுறை அனுபவமும் தேவை. எனவே, படிப்பைத் தொடரும்போதே குறிப்பிட்ட துறைச் சார்ந்த அனுபவத்தைப் பெறுவதிலும் கவனம் செலுத்தினால் இத்துறையில் பல உயரங்களை எட்ட முடியும்.