

‘திருப்தி அடைவதை ‘content’ என்கிறார்கள். ஒன்றில் அடங்கிய அனைத்து விஷயங்களையும்கூட ‘content’ என்கிறார்களே!’
உண்மைதான். ஆனால், முதல் சொல்லை ‘கன்டென்ட்’ என்றும் இரண்டாவதை ‘கான்டென்ட்’ என்றும் உச்சரிக்க வேண்டும். அதேபோல பாலைவனத்தைக் குறிக்கும் ‘desert’ என்பதை ‘டெஸர்ட்’ என்றும், அதே எழுத்துக்களைக் கொண்ட வார்த்தை ‘வெறிச்சோடுதல் அல்லது கைவிடப்படுதல்’ என்ற பொருளில் பயன்படுத்தும்போது ‘டீஸெர்ட்’ என்றும் உச்சரிக்க வேண்டும்.
இப்படி ஒரே எழுத்துக்கள் கொண்ட வார்த்தை உச்சரிப்பிலோ அர்த்தத்திலோ மாறுபடும்போது அதை ‘Homograph’ என்பார்கள். அர்த்தத்தில் மாறுபடுவதற்கு எடுத்துக்காட்டு ’drop’. இதை சொட்டு என்றும் கூறலாம். கீழே போடுதலையும் குறிக்கும். ’Homo’ என்பது கிரேக்க வார்த்தை. அதே அல்லது ஒன்றே என்ற பொருள் கொண்ட ‘homos’ என்ற சொல்லிலிருந்து உருவானது.
‘Homogeneous’ என்றால் ஒரே மாதிரியான அல்லது ஒரே பிரிவை சேர்ந்த.
‘Homophobe’ - தன்பாலினத்தவர் மீது வெறுப்பு கொண்டவர். ‘Homecentric’ - ஒரே மையம் கொண்ட. ‘Homoglot’ - ஒரே மொழியைக் கொண்ட. ‘Homodemic’ - ஒரே இனத்தைச் சேர்ந்த. ‘Homodox’ - ஒரே கருத்தைக் கொண்ட. பெரும்பாலும் மரபு சார்ந்த கருத்து.
***
‘Veblen goods’ என்பது என்ன?
ஆடம்பரப் பொருட்கள். இவற்றின் விலை அதிகமாக ஆக இவற்றுக்கான டிமாண்ட் அதிகமாகும். அதாவது இவற்றை வைத்திருப்பது சமூக அந்தஸ்து! மிக அதிக விலை கொண்டிருப்பதை வைத்துக் கொண்டிருந்தால் மிக அதிக அந்தஸ்து என்ற எண்ண போக்கு! 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தோர்ஸ்டீன் வெப்ளென் என்பவர் இந்த வினோத நிலையை வர்ணிக்க, அவர் பெயரே அந்த வகைப் பொருள்களுக்கு வைக்கப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ், ரோலெக்ஸ், ஐஃபோன். ‘விக்ரம் வில்லன் சூர்யா’ கைக்கடிகாரம் ஆகியவை இந்த வகை.
***
கோடிட்ட இடத்தில் இடம்பெற வேண்டிய வார்த்தை எது?
Maybe I eat too much and that’s what makes me ________.
a) dozy
b) duzzy
c) dozzy
d) dizzy
‘Dozy’ என்றால் தூக்கம் உங்கள் கண்களை தழுவத் தொடங்கி விட்டது என்று பொருள். இதை ‘drowsy’ என்றும் கூறலாம்.
‘Duzzy’ என்பது ’முட்டாள்தனமாக’ என்ற பொருள் கொண்டது. பேச்சுவழக்கில் இடம் பெறும் சொல்.
‘Doozy’ என்பது தனித்தன்மை கொண்ட ஒன்றைக் குறிக்கிறது. இது நல்ல விதமாகவும் பயன்படுத்தப்படலாம். எதிர்மறையாகவும் பயன்படுத்தப்படலாம். ‘It’s a doozy of an artwork, she is so creative. Watch out for that first step. It’s a doozy.’
‘Dizzy’ என்பது ஒருவித தலைசுற்றல் நிலையைக் குறிக்கிறது. ரங்கராட்டினத்தில் சுற்றிவிட்டு இறங்கியவுடன் நேராகவே நின்றாலும் விழப் போகிறோம் போன்ற பிரமை தோன்றுகிறது அல்லவா? அதுதான் ‘dizzy’. உணர்வுபூர்வமாக ஒருவன் மிகவும் குழம்பியிருப்பதையும் இந்த வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துவதுண்டு.
ஆக, கோடிட்ட இடத்தில் ‘dizzy’ என்ற சொல் ஓரளவும் ‘dozy’ என்ற சொல் முழுவதுமாகவும் பொருந்துகின்றன.
| சிப்ஸ் # திருமண விளம்பரங்களில் ‘dusky coloured’ என்ற வார்த்தைகளைக் கண்டேன். அதன் பொருள்? # ‘Dusk’ என்பது அந்திவேளை. அதாவது அரையிருள். மங்கலான நிறம் கொண்ட என்பதைத்தான் ‘dusky coloured’ என்பது குறிக்கிறது. அதாவது மாநிறத்துக்கும் கறுப்பு நிறத்துக்கும் இடைப்பட்ட நிறம். ‘Grease money’ என்றால் என்ன? # சிறிய கையூட்டு. சட்டபூர்வமாக உரிமை உள்ள ஒன்றைப் பெறுவதற்கே நாம் (அது சீக்கிரம் நடைபெறுவதற்காக) அளித்துத் தொலைப்பது. Storm in a teacup என்றால்? # முக்கியமில்லாத ஒரு விஷயத்துக்காகத் தேவையற்ற கோபம் கொள்வது. அமெரிக்காவில் இதை ‘tempest in the teapot’ என்பார்கள். |
(தொடரும்)
- aruncharanya@gmail.com