

வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளைத் தேடிப் படிக்கவே மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் விரும்புவார்கள். அதிலும் வழக்கமான படிப்புகளைத் தவிர்த்து, சிறந்த புதிய படிப்புகளைத் தேடிப் படிப்போரும் உண்டு. அப்படியெனில், இதில் சுற்றுலா சார்ந்த படிப்புகளுக்கும் முன்னுரிமை கொடுக்கலாம்.
ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் அதிக லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக சுற்றுலாவும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் உள்ளன. குறிப்பாக இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணிக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கிவரும் மிகப்பெரிய சேவைத் துறை சுற்றுலாதான்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுலா சார்ந்த கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கும் சுற்றுலா சார்ந்த படிப்புகளை பிளஸ் டூவுக்குப் பிறகு மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
என்னென்ன படிப்புகள்? - இளங்கலை சார்ந்த 3 ஆண்டு சுற்றுலாப் படிப்புகள் பல கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் வழங்கப்படுகின்றன. பி.ஏ. பயணம், சுற்றுலா, சுற்றுலா ஆய்வுகள், சுற்றுலா நிர்வாகம், பயணம், சுற்றுலா மேலாண்மை; பி.காம் பயணம், சுற்றுலா மேலாண்மை; பிபிஏ சுற்றுலா, பயணம், பயண மேலாண்மை; பி.எஸ்சி. விமான நிறுவனங்கள், சுற்றுலா, விருந்தோம்பல் மேலாண்மை, சுற்றுலா மேலாண்மை; பி.எஸ்சி புவியியல் சுற்றுலா, சுற்றுலா மேலாண்மை எனச் சுற்றுலா சார்ந்த படிப்புகள் உள்ளன.
இதேபோல பட்டயப் படிப்பாகவும் சுற்றுலா பற்றிப் படிக்கலாம். இப்படிப்பு ஓராண்டு படிப்பாக வழங்கப்படுகிறது. இதில் பயணம், ஹோட்டல், சுற்றுலா மேலாண்மை, ஏவியேஷன், விமான நிலையம் நிர்வாகம் போன்ற பிரிவுகளில் ஒன்றை எடுத்துப் படிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்: சுற்றுலா சார்ந்த இளங்கலைப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் இந்தியா முழுவதுமே பல பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் வழங்குகின்றன. தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை அரசினர் பெண்கள் கல்லூரி, கோவை அரசு கலைக் கல்லூரி, சென்னை ராணி மேரி கல்லூரி உள்பட ஏராளமான தனியார் கல்லூரிகள் சுற்றுலா சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.
இதேபோல தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலையில் சுற்றுலா, பயணப் படிப்பு வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பாகச் சுற்றுலா மேலாண்மை உள்ளது.
வேலை வாய்ப்புகள்: சுற்றுலா சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளும் உண்டு. இதேபோல லாபகரமான சொந்தத் தொழில்கள் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அரசு சுற்றுலாத் துறைகள், குடியேற்றம், சுங்கச் சேவைகள், விமான நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், விடுமுறை கிளப் ஹவுஸ்கள், சர்வதேசம் மற்றும் தேசிய அளவிலான பயண முகமைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சொந்தமாக வேலை செய்ய விரும்புவோர் சிறிய அளவில் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களை அமைக்கலாம்.