ஆங்கிலம் அறிவோமே 4.0 - 31: ஹிட்லரோடு தொடர்புடைய வார்த்தை

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 31: ஹிட்லரோடு தொடர்புடைய வார்த்தை
Updated on
2 min read

“Holocaust’ என்கிற வார்த்தையை ஹிட்லரின் அராஜகம் குறித்துப் படிக்கும்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வார்த்தையின் சரியான பொருள் என்ன?’

‘Holokauston’ என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானதுதான் இந்தச் சொல். இதற்குப் பொருள் தீயில் எரித்து ஒன்றை இறைவனுக்குப் படைப்பது! என்றாலும் படுகொலை என்கிற அர்த்தத்தில் இச்சொல் இப்போது பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பலரை ஒரே நேரத்தில் படுகொலை செய்வதைக் குறிப்பதற்கு பயன்படுகிறது. ‘Nuclear holocaust’ என்பது அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

‘Catastrophe’, ‘devastation’, ‘genocide’, ‘mass murder’, ‘massacre’, ‘slaughter’ ஆகியவற்றை ‘holocaust’ என்பதன் சம வார்த்தைகளாகக் குறிப்பிடலாம்.

***

‘Homage’என்கிற வார்த்தையை இறந்தவர்கள் தொடர்பாகத்தான் பயன்படுத்த வேண்டுமா?

அப்படிக் கட்டாயம் ஒன்றுமில்லை. நம் மரியாதையையும் மதிப்பையும் பாராட்டையும் வெளிப்படுத்தத்தான் இந்த வார்த்தை பயன்பட்டது. இறைவனுக்குக்கூட ‘homage’ செலுத்துவதுண்டு. வயதான இசைக்கலைஞர்கள் (அவர்களால் முன்பு போல இப்போது தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும்) அவர்களுடைய அக்கால சாதனைகளை எண்ணி ’homage’ செலுத்துவது உண்டு. என்றாலும் தமிழில் அஞ்சலி என்கிற வார்த்தையைப் போல இதுவும் இறந்தவர்களோடு அதிகம் தொடர்புபடுத்தப்படுகிறது. ‘Tribute’ என்பதும் ‘homage’தான்.

இந்த வார்த்தையை பிரிட்டிஷார் ‘ஹொமேஜ்’ என்றும் அமெரிக்கர்கள் ‘ஹமேஜ்’ என்றும் உச்சரிக்கிறார்கள்.

***

கிண்டல் செய்வதைக் குறிக்க ‘to make fun of ’என்கிற பதம் மட்டும்தான் உள்ளதா?

‘Gibe’, ‘Scoff’, ‘Jeer’, ‘Tease’ என்று பல வார்த்தைகள் உள்ளன. இவற்றில் அவமரியாதையாகச் சிரித்தபடியோ நாகரிகம் இல்லாத சொற்களைப் பயன்படுத்தியோ கிண்டல் செய்வதை ‘jeer’என்கிற சொல்லின் மூலம் குறிப்பிடுவார்கள்.

ஒருவரை இகழ்ச்சியாக ஏளனம் செய்வதை ‘to scoff at’ என்பார்கள். ‘Tease’ என்பது தெரிந்த ஒருவரை நட்புணர்வுடன் காலை வாருவது.

Tease

‘எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உனது 100 சதவீதத்தை அதில் கொடு’.

‘அப்படியா? ரத்ததானம் கொடுக்கும்போது?’

***

‘Tease’ என்றால் கிண்டல் செய்வது என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டது. இப்போது கோடிட்ட இடத்தில் வரவேண்டிய சொல் எது?

Most people tease me because I am a little _______.

(a) daft

(b) draft

(c) deft

(d) drift

‘Draft’ என்றால் வரைவோலை. ‘Bank Draft’ என்று கேள்விப்பட்டிருப்போம். இறுதியாக ஓர் ஆவணத்தை உருவாக்குவதற்கு முன்னால் மாதிரியான ஒன்றை (rough copy) உருவாக்கி, அதில் உள்ள தவறுகளைச் சரிசெய்வோம். இதையும் ‘draft’ என்பார்கள். கோடிட்ட இடத்தில் இந்த சொல்லைப் பயன்படுத்தினால் அர்த்தம் வருவதில்லை.

‘Deft’ என்றால் ‘செயல்திறன் மிக்க’ என்று பொருள். அப்படிப்பட்ட யாரையும் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். ‘Drift’ என்ற சொல் நகர்தலை குறிக்கிறது. ஆக, முட்டாள்தனமாக அல்லது அற்பதனமாக இருப்பதைக் குறிக்கும் ‘daft’ என்ற வார்த்தைதான் கோடிட்ட இடத்தில் பொருந்துகிறது,

சிப்ஸ்

l Cell என்பது உடலில்தானே இருக்கும்?

சிறைச்சாலையிலும் இருக்கும். சிறிய சிறை அறையையும் ’cell’ என்பார்கள்.

l Cookie என்பது என்ன?

பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் பிஸ்கெட். அமெரிக்க ஆங்கிலத்தில் குக்கீ.

l டீ ஷர்ட் என்பதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது?

T-shirt அல்லது Tee shirt

(தொடரும்)

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in