

வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் மாணவர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், பல்கலைக்கழகங்கள், தனியார் தொண்டு அமைப்புகள் போன்றவை கல்வி உதவித் தொகையை வழங்கிவருகின்றன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுபோன்ற உதவித்தொகை பெற்று ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற முன்னேறிய நாடுகளில் மேற்படிப்பைப் படிக்கின்றனர்.
இந்தக் கல்வி உதவித்தொகை அனைத்தும் படிப்பில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து வழங்கப்படுவதில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற, மொழி, கலாச்சார பன்முகத்தன்மையையும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க எனப் பலதரப்பட்ட நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன. எந்தெந்த கல்வி உதவித்தொகைகள் என்னென்ன நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து, அதற்கேற்ப விண்ணப்பித்தால் அத்தகைய உதவித்தொகைகளைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாகும்.
உதாரணமாக, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பிரிட்டனில் படிக்க காமன்வெல்த் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற உண்மையாகவே பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதைத் தகுந்த ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
பிரிட்டனில் படிக்கக் குறிப்பிட்டப் படிப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள், அது எப்படி வேலைவாய்ப்புக்கு உதவும் என்பது போன்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும். ஒருவர் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றாலும், மதிப்பெண்களை மட்டுமே மையமாக வைத்து இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள ஸ்காட்லாந்து ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம், நாட்டிங்காம் பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழங்கள் விளையாட்டு வீரர்களுக்கென்று பிரத்யேகமாகக் கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள், இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற உதவும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்கள் உள்கட்டமைப்பு வசதி, எந்தெந்த விளையாட்டுகளுக்குப் பயிற்சியாளர்களைக் கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அவர்கள் ஆதரவளிக்கும் விளையாட்டுகளும் மாறுபடும். உதாரணமாக, கால்பந்து வீரரானால், கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு எந்தப் பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது என்பதை அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த உதவித்தொகைகளைப் பெற குறிப்பிட்ட பல்கலைக்கழகம் வழங்கும் ஏதேனும் இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பில் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற வேண்டும். அதன் பிறகு விளையாட்டு வீரர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையைப் பெற படிப்பில் பெற்ற மதிப்பெண்களைவிட விளையாட்டில் இருக்கும் திறமையே மதிப்பீடு செய்யப்படும்.
இதேபோல கலாச்சாரப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க பலதரப்பட்ட கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்தக் கல்வி உதவித்தொகைகளை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்குகின்றன. கலாச்சாரம் சார்ந்த முன்னெடுப்புகளில் உள்ள ஈடுபாடு இக்கல்வி உதவித்தொகைகளைப் பெற உதவும்.
பள்ளி, கல்லூரிகளில் கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளில் (clubs) இணைந்து பங்காற்றியிருந்தாலோ அல்லது கலாச்சாரம் சார்ந்த தன்னார்வ அமைப்புகளில் இணைந்து பணியாற்றியிருந்தாலோ அதை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு இத்தகைய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும்.
இத்துடன், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுமே வழங்குகின்றன. இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற கடுமையான போட்டி இருக்கும். இதற்காகச் சராசரி புள்ளிகளை (CGPA) பத்துக்கு ஒன்பதுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பீட்டு முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ‘GRE’, ‘TOEFL’, ‘IELTS’ போன்ற ஆங்கிலத் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ளும். பல்கலைக்கழக அளவிலான தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற கல்வி உதவித்தொகைகளைப் பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும்போது எப்போதும் முழு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்று கூற முடியாது. முழு கல்வி உதவித்தொகை கிடைத்தால் அது படிப்புக்கான செலவு, தங்கும் செலவு, விமானப் பயணச் செலவு உள்பட அனைத்துச் செலவுகளையும் ஈடுசெய்ய போதுமானதாக இருக்கும்.
சில நேரம் பாதி கல்வி உதவித்தொகையும் கிடைக்கலாம். அப்போது செலவுகளை வேறு வழிகளில் சமாளிக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளைப் பெற்று செலவை ஈடுகட்டலாம். எனவே, எந்தெந்த பல்கலைக்கழகங்கள் கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன, அந்த உதவித்தொகைக்கான நோக்கம் போன்றவற்றை அறிந்து, விண்ணப்பத்தைத் தயார் செய்ய வேண்டும்.