

‘India pips China’ என்று ஒரு நாளிதழில் பார்த்தேன். ‘Pips’ என்கிற சொல்லுக்குப் பொருள் என்ன எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.
மக்கள் தொகையில் இந்தியா சீனாவையே தாண்டிவிட்டது என்கிற செய்தி தொடர்பாக இந்த வாக்கியம் இடம்பெற்றிருக்க வேண்டும். ‘Pip’ என்றால் ஒருவரைத் (அல்லது ஒன்றைத்) தாண்டிச் செல்வது என்று பொருள். அதுவும் மிகக் குறைந்த அளவில்.
தடகளப் போட்டியில் அசோக் என்பவர் வெற்றிக்கோட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது சக போட்டியாளர் ஆனந்த் கடைசி சில நொடிகளில் அவரைத் தாண்டிச் சென்று வெற்றிபெறுகிறார் என்றால் ‘Anand pipped Ashok for the gold medal’ எனலாம். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் உள்ள சிறிய விதைகளையும்கூட ‘pip’ என்பார்கள்.
***
‘இரு மனிதர்களுமே வந்து சேரவில்லை’ என்பதை உணர்த்தும் சரியான வெளிப்பாடு எது?
1. Both men have not arrived.
2. Neither men has arrived
3. Neither men have arrived
4. Both men has not arrived.
‘Both’ என்பது மறுதலிக்கப்படும்போது (negate) அது ‘neither’ என்றாகிவிடும்.
He has, It has, they have என்பவை இயல்பானவை. ‘Both’ என்பதைத் தொடர்வது ‘have’ என்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ‘has’ அல்ல. எனவே, நான்காவது வாக்கியம் தவறானது.
அதே நேரம் ‘neither’ என்பது ’they’ அல்ல என்பதால், அதைத் தொடர்ந்து ‘have’ வராது. ‘Has’ தான் வரும். எனவே, மூன்றாவது வாக்கியமும் தவறு.
இரண்டாவது வாக்கியமே சரி.
முதலாவது வாக்கியமான ‘Both men have not arrived’ என்பது எப்படித் தவறானது என்பதை மேலும் விளங்கிக்கொள்ள கீழே உள்ள கேள்வியைப் படியுங்கள்.
‘Have you read these two books?’ என்று ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது. நீங்கள் அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றைக்கூடப் படித்ததில்லை. அப்படியிருக்க உங்கள் பதில், ‘I have read neither’ என்பதாக இருக்க வேண்டும் (அல்லது I haven’t read either of them என்று இருக்கலாம்).
ஆனால், உங்கள் பதில் ‘I have not read both’ என்று இருக்கக் கூடாது. ‘நான் இரண்டையும் படித்ததில்லை’ எனும்போது ‘நான் ஒன்றைப் படித்திருக்கிறேன்’ என்ற தவறான பதிலையும் இது உணர்த்துகிறது.
***
‘Appreciation’ என்பது பாராட்டு. ‘Currencies appreciate’ என்று ஒரு செய்தியில் பார்த்தேனே என வியக்கிறார் ஒரு வாசகர்.
ரூபாய் நோட்டுகளோ டாலர் நோட்டுகளோ கைதட்டிப் பாராட்டுவதில்லை! ஒரு சொத்தின் மதிப்பு அதிகமாவதையும் ‘appreciation’ என்கிற சொல்லின் மூலம் உணர்த்துவார்கள். அதன் மதிப்பு குறையும்போது அதை உணர்த்த ‘depreciation’ என்கிற வார்த்தை பயன்படும்.
‘Deprecation’ என்கிற சொல்லோடு இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஒன்றை நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதை வார்த்தை மூலமோ செயல் மூலமோ உணர்த்துவதை ‘deprecation’ என்பார்கள். ‘He shook his head in deprecation’.
(தொடரும்)
- aruncharanya@gmail.com