

ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளைக் கல்வி தொடர்பான வாசிப்புடன் கொண்டாடுவோம். 2023இல் வெளியான முக்கியமான நூல்கள் கல்வி தொடர்பான உங்களின் பார்வையையும் புரிதலையும் விசாலப்படுத்த உதவும்.
எழுத்தாளர் பெருமாள்முருகன் பள்ளி ஆசிரியராக நீண்ட அனுபவம் பெற்றவர். பள்ளிகளிலும் கல்வித் துறையிலும் நிலவும் பிரச்சினைகள் குறித்த உள்முகப் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பாடத்திட்டம், கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் அணுகுமுறை, அரசுத் திட்டங்கள் ஆகியவை மாணவர்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. தலைப்புக் கட்டுரை இன்றைய மாணவர்கள் சிலர், பல வகையான புதுப் பாணியில் தங்கள் தலைமுடியை வைத்துக்கொள்வதை ஆசிரியர்கள் எதிர்ப்பது குறித்து நுட்பமான கருத்துகளை முன்வைக்கிறது.
மயிர்தான் பிரச்சினையா (கல்விசார் கட்டுரைகள்)
l பெருமாள்முருகன், காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.200/-, தொடர்புக்கு: 4652-278525
எண்ணறிவு என்பதைக் கல்வியுடன் தொடர்புடைய பலரும் அறிந்திருப்பார்கள். எண்ணுணர்வு என்பது பெரும்பாலோருக்குத் தெரியாத விஷயமாகவே இருக்கும். அது என்ன என்பதை விளக்குவதுடன் மாணவர்களின் கணித அறிவை வளர்க்க, எண்ணறிவோடு எண்ணுணர்வும் எப்படிப் பங்காற்றுகிறது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.
ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டு இந்தக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். எண்களை எண்ணுதல் என்னும் செயலில் உள்ள நுணுக்கங்களை விளக்கியுள்ளார்.
எண்ணுணர்வும் எண்ணறிவும்
l இரா.கோமதி, பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.140, தொடர்புக்கு: 044-2433 2924
கல்வி தொடர்பாகத் தொடர்ந்து எழுதிவருபவர் அரசுப் பள்ளி ஆசிரியரான மு.சிவகுருநாதன். 2019-2022 காலகட்டத்தில் அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரைகள் விமர்சனபூர்வமாக அணுகுகின்றன. இவர் எழுதிய கட்டுரைகள், ‘கல்வி அறம்’, ‘கல்வி அபத்தங்கள்’, ‘பாடநூல்களில் வெறுப்பு அரசியல்’ ஆகியவை ஏற்கெனவே நூல்களாக வெளியாகியுள்ளன.
கல்விக்கொள்கையா? காவிக்கொள்கையா?
l மு.சிவகுருநாதன், நன்னூல் பதிப்பகம்
விலை: ரூ.150,தொடர்புக்கு: 9943624956
அரசுப் பள்ளி ஆசிரியரும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி சார்ந்த பிரச்சினைகளைக் கவனப்படுத்தும் கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களில் எழுதிவருகிறவருமான சு. உமா மகேஸ்வரி எழுதிய 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 47,000 குழந்தைகள் தமிழ்த் தேர்வில் தோல்வியடைந்தார்கள், ஆசிரியர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட கல்வித் துறையின் சமகால அவலங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. தண்டனைகளின் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியுமா என்பதுபோன்ற நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார்.
தமிழக கல்விச் சூழல்
l சு. உமா மகேஸ்வரி, சுவடு வெளியீடு,
விலை: ரூ.130, தொடர்புக்கு: 9551065500, 9791916936