

‘Bank rate’, ’Interest rate’ தெரியும். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் ‘Quit rate’ என்பதன் பொருள் தெரியுமா?
ஒருவர் வேலையில்லாமல் இருந்தால், ‘அவருக்கு வேலை கிடைக்கவில்லை அல்லது வேலையிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுவிட்டார்’ என்பது பொதுவான அனுமானம். ஆனால், வேலை நீக்கம் போன்ற எந்த நிலையும் ஏற்படாமல் மக்களில் எவ்வளவு சதவீதம் பேர் தங்களது தற்போதைய வேலையை விட்டு நீங்குகிறார்கள் என்பதுதான் ‘quit rate’. இந்த விகிதம் அதிகரிக்கிறது என்றால் புதிய, மேலும் சிறப்பான வேலை தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். அதாவது, நாட்டின் பொருளாதாரம் முன்னேறுகிறது என்பதற்கான ஓர் அறிகுறியே ‘quit rate’.
‘Quit’ என்றால் வெளியேறுதல். Quit India = (வெள்ளையனே) இந்தியாவை விட்டு வெளியேறு.
***
என்னைவிட அவன் மோசமானவன் என்பதை வெளிப்படுத்தும் சரியான வாக்கியம் எது?
1) He is worst than I.
2) He is worse than I.
3) He is worst than me.
4) He is worse than my.
இரண்டுக்கும் அதிகமானவற்றை அல்லது இரண்டுக்கும் அதிகமானவர்களை ஒப்பிடும்போது மட்டும்தான் ‘worst’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியும். எனவே, முதல் மற்றும் மூன்றாவது வாக்கியங்கள் தவறானவை.
‘Bad’ என்பதன் comparative form worse. Superlative form worst. He is worse than my என்பதும் தவறு. எனவே, மீதமிருக்கும் இரண்டாவது வாக்கியமே சரி.
அதே நேரம் ‘He is worse than me’ என்கிற வாக்கியமும் கொடுக்கப்பட்டிருந்தால் எது சரி? ‘Worse than I’ அல்லது ‘worse than me’ ஆகியவற்றில் எது சரியான பயன்பாடு? தரமான உரைகல் மூலங்களே இதில் பிரிந்திருக்கின்றன.
‘Better than me’, ‘worse than me’ போன்றவற்றை நாம் இயல்பாகப் பயன்படுத்துகிறோம். அவை பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. அவன் என்னைவிட மோசமானவன் எனும்போது ‘என்னை’ என்கிற சொல்லுக்கு ‘me’ என்பதுதானே ‘I’ என்பதைவிடப் பொருத்தமானது என்கிற வாதத்தை ஒதுக்க முடியாது.
ஆனால், நான், அவன் என்று இருவரை ஒப்பிடும்போது He, I ஆகிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும் அல்லவா? எனவே, கொஞ்சம் பழங்கால இலக்கணம் என்றாலும் ‘He is worse than I’ என்பதே தேர்வு மற்றும் formal ஆங்கிலத்தைப் பொறுத்தவரை சரியானது. (சிலர் சங்கடத்தைத் தவிர்க்க He is worse than I am என்று விரிவாக்கி விடலாமே என்று கூறுவதுண்டு). உரையாடல் மற்றும் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் என்பது ‘He is worse than me’.
***
‘Ancient times’, ‘Modern times’ புரிகிறது. அதென்ன ‘medieval times’? என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
இரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டம்தான்! முந்தைய 500லிருந்து 1,500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என்று கூறலாம். ‘Ancient’ என்றால் தொன்மையான. அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய. ‘Ancient history’, ‘ancient civilization’, ‘ancient city’, ‘ancient world’ என்பதுபோல.
மிகப் பழைய அல்லது மிக வயதான என்பதைக் குறிக்கவும் ‘ancient’ பயன்படுகிறது. ‘Is he just 25? ‘He looks ancient!’
(தொடரும்)
- aruncharanya@gmail.com