

விவசாயம், மருத்துவம், போக்குவரத்து, தொழிற்சாலை, விண்வெளி ஆய்வு, சேவைத் துறைகள் என ரோபாட்களின் பயன்பாடு இல்லாத துறைகளே இல்லை. வருங்காலம் ரோபாக்களின் காலம் எனக் கருதப்படும் நிலையில், ரோபாட்டிக்ஸ் சார்ந்த படிப்புகள் மீதும் கவனம் குவியத் தொடங்கியுள்ளது.
என்றாலும், மலைக்க வைக்கும் கல்விக் கட்டணத்தால் அனைவருக்கும் ஏற்றதாக ரோபாட்டிக்ஸ் கல்வி இருப்பதில்லை. இந்நிலையை மாற்ற கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ரோபாட்டிக்ஸ் பயிற்சியை வழங்கிவருகிறார் விழுப்புரம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ‘வில்லேஜ் விஞ்ஞானி’ என்றழைக்கப்படும் பாலாஜி.
சிறு வயதிலிருந்தே பொருள்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட பாலாஜி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாய ரோபாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அது ஏற்படுத்திய தாக்கத்தால் இளநிலையில் பொறியியல் பட்டம் படித்த அவர், முதுநிலையில் ரோபாட் அறிவியலைப் படித்தார். படிப்பை முடித்த கையோடு ரோபாட்கள் பற்றி ஆய்வுகளைக் மேற்கொண்டு புதிய ரோபாட்களையும் உருவாக்கத் தொடங்கினார்.
பல வெளிநாடுகளில் நடைபெறும் ரோபாட் தொடர்பான கருத்தரங்குகள், ஆய்வுகளில் பங்கேற்றும்வருகிறார். ரோபாட்டிக்ஸ் படிப்பின் மீதான காதலால் ‘வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல்’ எனும் அமைப்பையும் நிறுவினார். இப்பள்ளியில் ஆர்வமுள்ளவர்களுக்குச் சாதாரண கட்டணத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி வழங்கிவருகிறார்.
ரோபாட் டிசைன், ரோபாட் உருவாக்கம் பற்றி இப்பள்ளியில் கற்றுத்தரப்படுகின்றன. எளிய முறையில் மாணவர்களுக்கு ரோபாட் அறிவியலைக் கற்றுத்தரக்கூடிய டாலர் ரோபாட், கிரேன் ரோபாட், ஜி-பாட், ஜி-மேன், இசட்-பாட் போன்ற ரோபாட்களை உருவாக்கவும் கற்றுத்தரப்படுகிறது.
ரோபாட், ஆட்டோமேஷன் போன்ற படிப்புகள் ஆங்கிலவழிக் கல்வியில் மட்டுமே சாத்தியம் என்கிற பிம்பத்தையும் உடைத்திருக்கிறார் பாலாஜி. ஆங்கிலம் மட்டுமல்லாது மாணவர்களுக்குத் தமிழ் மொழியிலும் கற்பிக்கப்படுகிறது.
தற்போது பல்வேறு நாடுகளில் தானியங்கியாகச் செயல்படும் இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் இத்துறைச் சார்ந்த படிப்புகளில் ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரோபாட்டிக்ஸ் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்கிற கேள்வியை பாலாஜியிடம் முன்வைத்தோம்.
“ரோபாட் அறிவியல் பயிற்சியை இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு வழங்கி இருக்கிறோம். பள்ளிக்கல்வி அளவிலேயே ரோபாட் அறிவியல் தொடர்பான அறிமுகம் மாணவர்களுக்குக் கிடைக்கும்போது கல்லூரிப் படிப்பை அவர்கள் உறுதியாகத் தேர்வுசெய்ய உதவும்.
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களுக்கும் உதவக்கூடிய நானோ ரோபாட்களைத் தயாரிக்கலாம். ஆனால், அவற்றைச் சந்தைப்படுத்துவதுதான் சவாலானது. இந்தக் காலகட்டத்தில் டிரோன் பயன்பாடு அதிகரித்துவருகிறது. எனவே, தொழில்முறையில் டிரோன் இயக்குபவர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் டிரோன்களும் வந்துவிடும். வேகமாக வளரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, ஆராய்ச்சியில் ஈடுபட ரோபாட்டிக்ஸ் தெரிந்த ஏராளமானோர் நிச்சயம் தேவைப்படுவார்கள்.
எனவே, ரோபாட்டிக்ஸ் அறிவியல் படிப்பையும் தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம். தொழில்நுட்பம் சார்ந்த ஏனைய துறையில் இயங்குபவர்களும் நேரம் இருப்பின் ரோபாட்டிக்ஸ் சார்ந்த படிப்புகளைப் படித்தால் நிச்சயம் பயன்பெறலாம்” என்கிறார் பாலாஜி.