

“ஆங்கிலப் பாடத்தில் ‘prose’, ‘poetry’ ஆகிய இரண்டு பிரிவுகளில் ‘Prose’ என்றால் உண்மையில் என்ன?”
‘prose’ என்பது இயல்பான எழுத்து அல்லது பேச்சு வடிவம். கதைகள் அல்லது கட்டுரைகள் பொதுவாகக் காணப்படும் வடிவம். ‘Prose’ என்பது லத்தீன் வார்த்தை. ‘prosa oratio’ என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் ‘நேரடியான’.
அப்புறம், ‘Poetry’க்கும் ‘poem’க்கும் வேறுபாடு உண்டு. ‘Poetry’ என்பது கவிதை வகை. ‘poem’ என்பது கவிதை. சமையல் கலை, சமையற் கலைஞர், உணவு ஆகிய மூன்றுக்கும் உள்ள அதே தொடர்புதான் முறையே ‘poetry’, ‘poet’, ’poem’ ஆகியவற்றுக்கு இடையே உள்ளது.
***
’The making and unmaking of environmental laws’ என்று படித்தேன். இதில் ’making and unmaking’ எதைக் குறிக்கிறது?
’Make’ என்றால் உருவாக்குதல். ‘Unmake’ என்றால் அழித்தல் அல்லது பழைய நிலைக்கு ஒன்றைக் கொண்டு செல்லுதல். ஒருவரைப் பதவியிலிருந்து கீழ் இறக்குவதைக்கூட ‘Unmaking’ என்று சொல்வார்கள். ‘Making and unmaking’ என்று ஒன்றைக் குறிப் பிட்டால், அது உருவானதையும் பின் அழிக்கப் பட்டதையும் (அல்லது தொலைந்து போனதையும்) கூறுவது.
***
“சமணர்கள்தான் உண்மையான ‘vegans’ (வீகன்) என்று நினைக்கிறேன், சரியா?’ எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.
சைவ உணவுக்காரர்களைவிட ‘vegan’ பிரிவைச் சேர்ந்தவர் உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் கொண்டவர். அவர் எல்லா சைவ உணவையும் சாப்பிடுபவர் அல்ல. விலங்குகளிலிருந்து கிடைக்கும் எதையும் சாப்பிட மாட்டார். முட்டை, பால், தயிர், மோர் போன்றவற்றைக்கூட ஒதுக்குபவர்.
ஜெயின் உணவு மேலும் கண்டிப்பானது. அதில் வெங்காயம், பூண்டுக்கூட இடம்பெறாது. மசாலாப் பொருட்களுக்கும் தடா. உருளைக்கிழங்கு, கேரட், நிறைய விதைகள் உள்ள பழங்களைக்கூட சாப்பிட மாட்டார்கள். இவர்கள் என்ன சாப்பிடலாம் என்பதைவிட என்ன சாப்பிடக்கூடாது எனும் பட்டியல் நீளம்.
‘Pescatarian’ என்றொரு பிரிவினர் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். என்றாலும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மட்டும் விதிவிலக்கு. I mean they eat மீன்s.
***
கீழே உள்ள நான்கு வாக்கியங்களில் எது சரியானது என்று கூறுங்கள்.
(a) I came on my car
(b) I came into my car
(c) I came in my car
(d) I came over my car.
முதல் வாக்கியம் (I came on my car) உணர்த்துவது ‘நான் என் காரின் மேல் உட்கார்ந்துகொண்டு வந்தேன்’. (காருக்குள் அல்ல, காரின் மேல்!)
இரண்டாவது, ‘into’ என்ற சொல் இருக்கிறது. இது ஒரு செயலைக் குறிக்கும் சொல். I enter into my car என்பது, ‘நான் என் காருக்குள் நுழைந்து கொண்டிருக்கிறேன்’ என்பதைக் குறிக்கிறது.
உங்கள் கார் கீழே இருக்க, நீங்கள் ஹெலிகாப்டரில் அந்தக் காரின் மேல் பகுதியில் பறந்தபடி வந்திருந்தால் நான்காவது வாக்கியத்தைக் (I came over my car) குறிப்பிடலாம்!
ஆக, நான் என் காரில் வந்தேன் என்பதைக் குறிப்பிடும் மூன்றாவது வாக்கியம்தான் சரியானது.
(தொடரும்)
- aruncharanya@gmail.com