

‘Blog’, ‘Website’ ஆகிய இரண்டும் ஒன்றைக் குறிக்கின்றனவா அல்லது வெவ்வேறு பொருள்களைக் கொண்டவையா? இது ஒரு வாசகரின் சந்தேகம். ‘பிளாக்’ என்பது ஒருவிதத்தில் ‘வெப்சைட்’தான்.
ஆனால், அதற்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. அது தனிநபராலோ, சிறிய குழுவினாலோ உருவாக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள விவரங்கள் இயல்பாகப் பேச்சு வழக்கு போல இருக்கும். ஒருவிதத்தில் ‘பிளாக்’ என்பது டைரி போல. ‘பிளாக்’கின் இறுதியில் உள்ள பெட்டியில் அதைப் படிப்பவர்கள் கருத்துகளைப் பதிவிடலாம்.
‘வெப்சைட்’ என்பது மாறாததாக இருக்க வாய்ப்பு அதிகம். குறிப்பிட்ட பொருள் அல்லது சேவை தொடர்பான தகவல்களை அது அளிக்கும். படிப்பவர்கள் அது தொடர்பான ஐயங்களை அதில் எழுப்ப முடியாது. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலமே தொடர்புகொள்ள வேண்டியிருக்கும்.
கிட்டத்தட்ட எல்லா வணிக நிறுவனங்களுமே தங்களுக்கென ஒரு வலைத்தளத்தை வைத்திருக்கும். மருத்துவர்கள், கட்டிடக்கலைஞர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள்கூட வலைத்தளங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆக, ‘பிளாக்’கை ஒருவகை ‘வெப்சைட்’ என்றாலும், எல்லா ‘வெப்சைட்’களும் ‘பிளாக்’ அல்ல.
பொதுவாக, ‘to call someone’ என்பது ஒருவரைத் தொலைபேசியில் அழைப்பதைக் குறிக்கும். ‘To call on someone’ என்பது அவர் இடத்துக்கு நேரடியாகச் செல்வதைக் குறிக்கும்.
‘We went to the hospital to call on a sick friend’
‘He wants to make a call to his relative staying abroad’ - ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதையும் ‘call on’ எனக் குறிக்கும். ‘He called on fellow Indians to be more tolerant of each other. ‘Nature’s call’ என்பது சிறுநீர், மலம் கழிக்கும் உணர்வைக் குறிக்கிறது.
நீண்ட நாள்கள் செல்லாமல் இருந்த உறவினர் அல்லது நண்பரின் வீட்டுக்கு எக்காரணமும் இன்றி சென்று வருவதை ‘courtesy call’ என குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள்.
‘Courtesy call’ என்பது வணிகம் தொடர்பானது. இது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் யுக்தி. ‘எங்கள் தயாரிப்பை வாங்கியதற்கு நன்றி’ எனக் கூறவோ ‘எங்கள் பொருளை வாங்கினீர்களே அது உங்களுக்குத் திருப்திகரமாக இருக்கிறதா?’ என்று கேட்க அணுகுவதையோ ‘courtesy call’ என்பார்கள்.
‘Courtesy visit’ என்பது முக்கியமான நபர்களுக்கிடையே நடக்கும் ஒன்று. அது நல்லெண்ணத்துக்கான அடையாளம். இதில் முக்கியமான விஷயம் விவாதிக்கப்படாது. ‘Courtesy’ என்பது கண்ணியமான நடவடிக்கையைக் குறிக்கும். பெரியவர்கள் வரும்போது எழுந்து நிற்பது, தவறு செய்தால் மன்னிப்பு கேட்பது போன்றவை அதில் அடங்கும்.
அனைத்தும், எங்கும் நிறைந்துள்ள, அத்தனையும் உடனடியாக - இது எதை உணர்த்துகிறது? ‘அங்கு இங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை’ என்று பக்திபூர்வமாக நீங்கள் கூறக்கூடும். ஆங்கிலத் திரைப்பட ரசிகர் என்றால் சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ‘Everything Everywhere All at once’ என்கிற திரைப்படத்தின் மொழிபெயர்ப்பு அது என்று கூறலாம்.
‘Everywhere’ என்பதை ‘omnipresent ’என்று குறிப்பிடலாம். ‘Omni’ என்றால் அனைத்தும், எங்கும். ‘Omnipotent’ என்றால் சர்வசக்தி வாய்ந்த. ‘Everywhen’ என்றுகூட ஒரு சொல் உண்டு. அதற்கு எப்போதும் என்று பொருள்.
(தொடரும்)
- aruncharanya@gmail.com