

வரலாற்றுக் காலத் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட கட்டமைப்புகளை அறிந்துகொள்ள பேருதவியாக இருப்பவை தொல்லியல் தரவுகளே. வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களைத் துல்லியமான காலக்கணிப்போடு வரலாற்றை மறுகட்டமைக்கப் பயன்படுவதே தொல்லியல். தொல்லியல் என்பது தனிப்பட்ட ஒரு துறை அல்ல; அது பல்வேறு துறைகளின் உதவியோடு ஆய்வு நோக்கில், அறிவியல் முறைப்படி செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளம்.
தொல்லியல் தரவுகளைக் காலக்கணிப்பு செய்யும்போது ஒரு பகுதியின், இனத்தின் வரலாற்றைத் துல்லியமாக எடுத்துச்சொல்வது இயலாத காரியம். அந்த இடத்தில் அறிவியல் முறை சார்ந்த ஆய்வுகள் துல்லியமான காலக்கணிப்பை வழங்குகின்றன. தொல்லியல் கள ஆய்வு, அகழாய்வு உள்ளிட்டவற்றில் வளர்ச்சி அடைந்த தொழில்நுட்பங்கள் இன்று உலகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தொல்லியல் ஆய்வுகள் தொடங்கிய காலத்தில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் ஆவணப்படுத்தி, பிறகு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அறிவியல் பின்னணி: இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தொல்லியல் கள ஆய்வுகள் மிக எளிமையாகிவிட்டன. விரைவாகவும் தெளிவான ஆய்வுக் குறியீடுகளின் அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் கால விரயம், பொருள் செலவு, ஆள்பற்றாக்குறை போன்றவை குறைந்துள்ளன. உலகளவில் தற்போது ஆய்வுகளில் ஆளில்லா விமானங்களின் துணையோடு, பல்வேறு அதிநவீன சென்சார்களுடன்கூடிய ஒளிப்படக் கருவிகள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு, தொல்லியல் ஆய்வுக்குரிய இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
அதன்பின் ‘டோட்டல் ஸ்டேஷன்’ என்கிற தொழில்நுட்பத்தின் வாயிலாகவே அகழாய்வுக்கான வரைவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. பூமிக்கடியில் ஊடுருவிப் பார்த்து, தென்படுகிற தரவுகளைப் பாதிக்கப்படாமல் எடுக்கக்கூடிய வாய்ப்பை ‘GPR’ (Ground Penetrating Radar) என்கிற தொழில்நுட்பம் வழங்குகிறது.
அகழாய்வில் கிடைக்கக்கூடிய பொருள்களில் உள்ள காந்தத்தன்மையையும் சுற்றுச்சூழலின் தன்மையையும் அறிய ‘Magnetometer’ என்கிற அறிவியல் நுட்பமும் ‘Thermography’ என்கிற தொழில்நுட்பமும் உதவுகின்றன. ‘X-ray fluoresce analysis’ என்கிற தொழில்நுட்பம் தொல்பொருள்கள் பாதிக்கப்படாமலும் உள்கூறுகளை அறியவும் பயன்படுத்தப்படுகிறது.
தொல்லியல் அகழாய்வுக்குப் பிறகான ஆவணப்படுத்தும் முறைகளிலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தொல்பொருள்களின் காலத்தை மிகத் துல்லியமாக வரையறுக்கின்றன. குறிப்பாக அணுக்கரு கதிர்வீச்சு அடிப்படையில் பகுத்தாய்கிற தொழில்நுட்பங்களான நியூட்ரான் தூண்டுதல் தொழில்நுட்பமும், தொல்லியல் தரவுகளில் உள்ள வேதிப்பொருள்கள், உள்கூறுகள் ஆகியவற்றை ‘ராமன் ஸ்பெக்ட்ராஸ்கோபி’யும், பண்டைய தொல்பொருள்களைப் பாதுகாக்க ‘ஆப்டிகல் கோஹன்ஸ் டொமோகிராபி’யும் பயன்படுகின்றன.
ஒலியின் சத்தத்தால் தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ‘Acoustic Emission technique’க்கும் இரும்புத் தூண் பகுத்தாயும் முறையும் உதவுகின்றன. பண்டைய கால மனிதர்கள் இறந்த பிறகு அவர்களை அடக்கம் செய்ததிலிருந்து, அந்த உடல் மக்கிப்போகிறவரை நடக்கிற செயல்பாடுகளை அறிய டேபோனாமி (Taphonomy) தொழில்நுட்பம் உள்ளது.
கணினிப் பயன்பாடு மிகுந்து காணப்படுகிற இந்தக் காலத்தில், அவை தொல்லியல் ஆய்வுகளின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பண்டைய வரலாற்றுத் தரவுகளைத் தொடர்புப்படுத்திக்கொள்ள மெய்நிகர் (virtual) தொழில்நுட்பமும் உதவுகிறது. அந்த வகையில் வருங்காலத்தில் உலகை ஆளப்போகிற செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் தொல்லியல் ஆராய்ச்சி சார்ந்த பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம்.
அறிவியலுக்குக் கூடுதல் பங்கு: இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் கல்வி இந்தியாவில் கலைப்புலத்தில் கற்பிக்கப்பட்டுவருகிறது. மேலும், பல்வேறு நாடுகளில் கலையியல் புலத்தில் கற்பிக்கப்பட்டாலும், பாடத்திட்டங்களில் அறிவியல் சார்ந்த தகவல்களை அதிகம் சேர்த்துத் தொல்லியல் கல்வியைக் கற்கிற மாணவர்கள் பன்முக ஆற்றலோடு பண்டைய சமூகத்தின் சமூகக் கட்டமைப்பை, வாழ்வியல் கூறுகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு பகுதியின் வரலாறு, பெருமை, தொன்மையின் தொடர்ச்சி ஆகியவற்றை அறிய தொல்லியல் கல்வி கலையியல் புலத்தில் கற்பிக்கப்பட்டால் மட்டும் போதாது; அவை அறிவியல் புலத்திலும் கற்பிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இன்று அனைத்து விதமான அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளும் தொழில்நுட்பங்களும் தொல்லியல் துறையில் கற்பிக்கப்பட்டுவருகின்றன.
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தொல்லியல் கல்வி அறிவியல் புலத்தில் கற்பிக்கப்பட்டுவருகிறது. அப்படிக் கற்பிக்கப்படும் போதுதான் மாணவர்கள் தங்கள் பகுதியினுடைய வரலாற்றுத் தொன்மையையும் பண்பாட்டுத் தொடர்ச்சியின் செழுமையையும் துல்லியமாக அறிய முடியும்.
- இனியன்