

‘Intermission’, ‘Interlude’ ஆகியவை ஒரே பொருள் கொண்ட சொற்கள்தானா?
‘Intermission’ என்பது நாடகம், திரைப்படம் போன்றவற்றின் நடுவே விடப்படும் இடைவேளை. நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் விளையாட்டுகளின் நடுவே விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுக்கவும் பார்வையாளர்கள் சற்றே வெளியே சென்று வரவும் அளிக்கப்படும் நேரத்தையும் ‘Intermission’ என்பார்கள்.
‘Interlude’ என்பதை ‘Intermission’ என்கிற பொருளில் பயன்படுத்துவதுண்டு. என்றாலும், ஒன்றுபோலவே அமைந்த இரு நிகழ்ச்சிகளுக்கு நடுவே வேறுபட்டு அமைந்த காலகட்டத்தைக் குறிக்கவே ‘Interlude’ பயன்படுகிறது. ‘ஒரு சிறிய ‘interlude’ விட்டுவிட்டால் அவர்கள் இருவரும் வெளிநாடுகளில்தான் வாசம் செய்கிறார்கள்’ என்பது, அந்தச் சிறிய காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்கள் என்பதைக் குறிக்கிறது. ‘Apart from a brief interlude of peace, the war lasted for many years.’
‘Inter’ என்கிற முன்னொட்டை ‘between’ என்றும் ‘from one another’ என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
அந்த முன்னொட்டைக் கொண்ட சில சொற்கள்:
Interact செய்தல் - தொடர்பு கொள்ளுதல்
Interim - இடைப்பட்ட, இடைக்கால
‘Interfere’ என்கிற சொல் தலையிடுதல், குறுக்கீடு செய்தல் எனப் பொருள்படும். பெரும்பாலும் தொடர்பில்லாதவற்றில் மூக்கை நுழைப்பது என்பது போன்ற எதிர்மறை அர்த்தத்தை அளிப்பது. பொதுவாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தையோ விவாதமோ நடக்கும்போது வேறொருவர் ‘Interfere’ செய்வதை அந்த இருவரும் விரும்புவது அரிது.
‘Intercede’ என்பதும் இருவர் கருத்து வேறுபட்டு நிற்கும்போது குறுக்கிடுவதுதான். ஆனால், அது அந்த வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சியாக இருக்கும். இதைப் பெரும்பாலும் அந்த இருவரும் வெறுக்க மாட்டார்கள்.
***
‘Lose’, ‘loose’ ஆகிய சொற்களில் சிலருக்குக் குழப்பம் உண்டாகிறது. ‘Lose’ என்றால் இழத்தல். ‘Lost time’ என்பது இழந்த நேரத்தைக் குறிக்கிறது. ‘Lose belief’ என்பது நம்பிக்கை இழப்பைக் குறிக்கிறது.
‘Loose’ என்பது இறுக்கமான தன்மை இல்லாததைக் குறிக்கிறது. ‘tight’ என்பதன் எதிர்ச்சொல். சட்டை லூசாக இருக்கிறது என்றால், இந்த வார்த்தைக்கு இரண்டு ‘o’ போட வேண்டும்.
‘To lose one’s grip’ என்றால் ஒரு பொருளோ ஒருவரோ கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். ‘To lose one’s cool’ என்பது ஒருவர் கோபமடைவதையோ பதற்றப்படுவதையோ குறிக்கிறது. அதாவது, அவர் ‘upset’ ஆகிவிட்டார்.
‘To lose one’s head’ என்றாலும் இதே பொருள்தான். ‘To lose one’s heart’ என்றால் ஒரு நோயாளியின் இதயம் தொலைந்துவிட்டது என்பதல்ல. காதலில் விழுவதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்.
(தொடரும்)
- aruncharanya@gmail.com