

சில கவலைகள் நன்மை பயக்கும்; எதிர்காலத்தில் கடினமான சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் சுயமரியாதையை அதிகரிக்கவும் செய்யும். தவறுகளைக் கடந்து செயல்படவும், கடினமான உணர்ச்சிகளைச் சமாளிப்பதற்கும் நேரம், வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், மாணவர்களின் சிக்கலைத் தீர்ப்பது, விமர்சனச் சிந்தனை, கூட்டுத் திறன்களை மேம்படுத்துவது போன்ற உதவிகளை ஆசிரியர்களால் செய்ய முடியும்.
மாணவர்கள் தங்கள் முழுத் திறனைப் பயன்படுத்தும் வகையிலும், கடினமான காரியங்களை முயற்சிக்கத் தூண்டும் வகையிலும் பாடத்திட்டங்களை வடிவமைப்பது முக்கியம். அதே நேரத்தில், சவாலான பணிகளுக்கு அவர்களுக்கு உதவும் ஆதரவான கற்றல் சூழலையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
சுருக்கமாக, பயனுள்ள கல்விக்கு சவாலான நிலை, ஆதரவளித்தல் ஆகிய இரண்டின் சமநிலை தேவைப்படுகிறது. சவால்களை எதிர்கொள்ளுதல், விடாமுயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பான, ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம், மாணவர்கள் வகுப்பறையிலும் அதற்கு வெளியிலும் வெற்றிபெறத் தேவையான விமர்சன சிந்தனைத்திறன்களை வளர்க்க உதவ முடியும். பயனுள்ள கற்பித்தல் உத்திகள் கற்றலை ஊக்குவிக்கும். இதைச் சாத்தியமாக்கக்கூடிய சில உத்திகள்.
முதலில் மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்ட வேண்டும். ஆசிரியரின் அக்கறையை உணரும் மாணவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் படிப்பார்கள். மாணவர்கள் தங்கள் தவறுகளுக்காக வாதிடுவது கற்றல் செயல்முறையின் இயல்பான பகுதி. தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், பிழைகளைக் கண்டறிந்து திருத்திக்கொள்ளவும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கலாம். பயிற்சிகளை அதிகமாக்கித் தேர்வுகளைக் குறைப்பதன் மூலம் மாணவர்களுக்கு மதிப்பீட்டின் மீது உள்ள பயமும் அழுத்தமும் குறையும்.
’ஸ்கேஃபோல்டிங்’ (Scaffolding) முறை என்பது சிக்கலான பணிகளைச் சிறிய, நிர்வகிக்கக்கூடிய படிகளாக உடைப்பதை உள்ளடக்கியது. ஒரு கடினமான பணியைப் பளுவாக உணரக்கூடிய மாணவர்கள், அதை மிகவும் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு இந்த முறை உதவும். சுய மதிப்பீட்டை ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் சொந்தக் கற்றலின் மீது உரிமை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக முன்னேற முடியும்.
மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, கடினமான பிரச்சினைகளைப் பல கண்ணோட்டங்களில் அணுகவும், யோசனைகள், உத்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் மாணவர்களுக்கு உதவும். வகுப்பறையில் சிக்கலான பணிகளை ஒருங்கிணைப்பதற்கான பயிற்சியும் அவசியம். மாணவர்கள் பல்வேறு சூழல்களில் தங்கள் கற்றலைப் பயன்படுத்துவதற்கும் அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றிய கருத்துகளைப் பெறுவதற்கும் நேரம் தேவை.
வழிகாட்டுதல்கள் அல்லது வழிமுறைகளை வழங்குவதற்கு முன், மாணவர் தலைமையிலான விவாதங்களை ஊக்குவிப்பது ஒரு சக்திவாய்ந்த கற்பித்தல் உத்தியாகும். இது மாணவர்களை ஆழ்ந்த கற்றல் மற்றும் ஈடுபாட்டுக்குத் தயார்படுத்த உதவும். இந்த நுட்பம் ’ஹூக்’ (Hook) அல்லது ’எதிர்பார்ப்புத் தொகுப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது.
விவாதங்களில் ஈடுபடுவது மாணவர்களின் விமர்சனச் சிந்தனை, ஒத்துழைப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, அவர்களின் நிறுவன மற்றும் விளக்கக்காட்சித் திறன்களை மேம்படுத்தவும் உதவும். வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், ஆதார அடிப்படையிலான வாதங்களை உருவாக்குவதற்கும் தங்கள் நண்பர்களுடன் மரியாதைக்குரிய உரையாடலில் ஈடுபடுவதற்கும் அவர்களின் திறனை வளர்க்க உதவும்.
ஒட்டுமொத்தமாக, ஆசிரியரிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு முன் விவாதங்களை நடத்த மாணவர்களை அனுமதிப்பது ஒரு சக்திவாய்ந்த கற்பித்தல் உத்தியாகும். இது ஆழ்ந்த ஈடுபாடு, விமர்சனச் சிந்தனை, கூட்டுத் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும். முன்னர் பெற்ற அறிவைச் செயல்படுத்துவதற்கும் மாணவர் ஊக்கத்தை ஊக்குவிப்பதற்கும், கற்றலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.
- எம்.எஸ்.சரவணன் | ‘சிருஷ்டி’ பள்ளிக் குழுமத் தைலவர்