

‘Marginalized sector’ என்று எந்தப் பிரிவினரைக் குறிப்பிடுகிறார்கள்? பிரிட்டிஷ் மக்கள் ‘marginalised’ என்றும் அமெரிக்கர்கள் ‘marginalized’ என்றும் இதைக் குறிப்பிடுவார்கள்.
கோடு போட்ட நோட்டுப் புத்தகங்களில் ‘margin’ இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இடது ஓரமாக நெடுக்குவாட்டில் போடப்படும் கோடு இது. ‘Marginalised sector’ என்று கூறப்படுபவர்கள் மையத்தில் இல்லாமல் ஓரங்கட்டப்படும் பிரிவினர். பெரும்பான்மையினர் அல்லாதவர்கள் என்றும் கருதலாம்.
ஒருவரை அல்லது ஒன்றை முக்கியத்துவம் இல்லாததுபோல் கருதி நடத்துவதை ‘marginalise’ என்று குறிப்பிடுவதுண்டு. ஆங்கிலத்தை முக்கியமாகக் கொண்டதால் பல உள்ளூர் மொழிகள் ‘marginalise’ ஆகிவிட்டன என்பது ஓர் எடுத்துக்காட்டு. இந்தச் சொல் லத்தீன் மொழியில் உள்ள ‘margo’ என்கிற வார்த்தையிலிலிருந்து பிறந்தது. இதற்குப் பொருள் ஓரம். அதாவது ‘edge, border’.
***
‘Tactical voting’ விளக்கத்தைத் தொடர்ந்து அரசியல் தொடர்பான மற்றொரு கேள்வியை வேறொரு வாசகர் கேட்டிருக்கிறார். ‘கொறடா என்பவரை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?’
‘Whip’. சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற வாக்களிப்புகளில் தனது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வந்துசேர்வதையும், கட்சியின் நிலைப்பாட்டுக்குத் தகுந்த மாதிரி அவர்கள் வாக்களிப்பதையும் இவர் உறுதி செய்துகொள்ள வேண்டும். ‘Whip’ என்கிற சொல் சவுக்கைக் குறிக்கவும் பயன்படுகிறது. சவுக்கால் அடிப்பவர் ‘whipper’.
***
‘சமீபத்தில் ஒரு சாக்லேட் தயாரிப்புத் தொழிற்சாலையில் இருந்த ‘vat’ ஒன்றில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தி வந்திருந்தது. ‘Vat’ என்றால் என்ன?
‘vat’ என்பது தொழிற்சாலைகளில் திரவங்களைச் சேமித்து வைக்கவும் கலக்கவும் பயன்படுத்தப்படும் பெரிய கொள்கலம். அதாவது அண்டா. அண்டா என்றதும் சமையலறையும் நினைவுக்கு வருகிறது. அந்தக் காலத்தில் விறகு அடுப்பில் வெந்நீர் போட அண்டாவைப் பயன்படுத்துவார்கள். சமையலறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில பொருள்களின் பெயர்களுக்கு ஆங்கிலச் சொல் எது என்பதைக் கூறுங்கள் பார்க்கலாம்.
1. குவளை 2. கிண்ணம் 3. பிசைந்த மாவு 4. கரண்டி 5. அரைக்கப்பட்ட மாவு 6. பெரிய கத்திரிக்கோல்
இப்போது சமையலறை தொடர்பான கீழே உள்ள ஆங்கிலச் சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன என்று கூறுங்கள்.
1. Cutlery 2. Griddle 3. Masher 4. Skillet 5. Tongs
மேலே உள்ளவற்றுக்கான விடைகள் இதோ.
1. குவளை – Mug 2. கிண்ணம் - Bowl 3. பிசைந்த மாவு - Dough 4. கரண்டி - Ladle 5. அரைக்கப்பட்ட மாவு - Batter 6. பெரிய கத்திரிக்கோல் - Shears
1. Cutlery – வெட்டும் கருவிகள் 2. Griddle – கைப்பிடி கொண்ட அப்பம் சுடும் பாத்திரம் 3.Masher - உணவுப் பொருளைப் பிசையும் பாத்திரம், 4 Skillet – கைப்பிடி அல்லது கைப்பிடிகள் கொண்ட வாணலி, 5. Tongs - இடுக்கி
***
‘By George!’ என்று ஒரு ஆங்கில நாவலில் அடிக்கடி இடம்பெற்றது. இதன் பொருள் என்ன? வியப்பு, அதிர்ச்சி, சோகம் போன்றவற்றில் எது அதிக அளவில் உண்டானாலும் நாம், ‘O my God’ என்று கூறுகிறோம் அல்லவா? அதுபோலத்தான் இதுவும். ஆனால், வியப்பு மற்றும் பாராட்டு ஆகியவற்றை மட்டுமே ‘By George’ குறிக்கிறது. பிரிட்டிஷ் மன்னராட்சியின் தாக்கம்.
(தொடரும்)
- aruncharanya@gmail.com