ஆங்கிலம் அறிவோமே 4.0 - 23: அங்கே ‘ஹலபலூ’வா இருக்கா?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 23: அங்கே ‘ஹலபலூ’வா இருக்கா?
Updated on
2 min read

‘Hello’ என்கிற சொல்லை ஓரிடத்தில் ‘hallo’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். எது சரி? தினமும் பயன்படுத்தும் இந்த வார்த்தைக்கு என்ன பொருள்?'

‘Hello’ என்பது ஒரு கவன ஈர்ப்பு வார்த்தை. இதற்கென்று தனி அர்த்தம் கிடையாது. ஜெர்மனியில் படகோட்டிகள் ஒருவரது கவனத்தை மற்றொருவர் ஈர்க்க ‘ஹலாலா’ அல்லது ‘ஹோலா’ என்று அழைக்க, அதுவே பிரபலமாகிவிட்டது. ‘ஹலோ’ என்று நாம் அழைக்கும் வார்த்தையை ‘hallo’, ‘hello’, ‘hollo’ என்று எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், ஒரே கட்டுரை அல்லது உரையில் பல இடங்களில் இந்தச் சொல் இடம்பெறும்போது ஒரேவிதமாக எழுதுவது நல்லது.

‘Hallow’ என்பது வெற்றிடத்தைக் குறிக்கும். ‘Empty’, ‘vacant’.

‘Halo’ என்பது ஒளிவட்டம். ஞானிகளின் தலையைச் சுற்றித் தெரியக்கூடும்!

‘ஹலோ’ என்பதன் சுருக்கமே ‘Hi’ என்பது தெரியும் அல்லவா? ‘Hi Prem, how are you?’

‘Hey’ என்பதும் இப்படிப்பட்ட வார்த்தையே. (Hay என்பது வைக்கோலைக் குறிக்கும்).

‘Hullaballoo’ என்றும் ஒரு சொல் இருக்கிறது. இதை ‘ஹலபலூ’ என்று உச்சரிப்பார்கள். கொஞ்சம் களேபரம், கொஞ்சம் பரபரப்பு, திகைப்பின் காரணமாக உண்டாகும் அமைதியின்மை போன்றவற்றைக் குறிக்க இந்த வார்த்தைப் பயன்படுகிறது. ‘The Chief Minister can expect a real hullabaloo when these rules are announced’.

‘Populist’ என்பவர் யார்?

‘Populism’ என்பது ஒருவகை ‘அரசியல்’ செயல்பாடு அல்லது இயக்கம். இதைச் சேர்ந்தவர்களை ‘populists’ என்பார்கள்.

‘Populism’ என்பதைச் சாதாரண மக்களின் ஆசைகளைப் பிரபலித்து வாக்கு அறுவடை செய்யும் உத்தி என்றுகூடச் சொல்லலாம். பல ‘இலவச’த் தேர்தல் வாக்குறுதிகளை இந்தக் கணக்கில் சேர்க்கலாம். மேலும் வரிச்சலுகை, அசாத்தியமான ஊதிய உயர்வு போன்றவைகூட ‘populism’தான். (யாருக்குதான் இவையெல்லாம் பிடிக்காது?).

‘Populist’ என்பவர் அரசுக்கு எதிராகப் பேசும் அரசியல்வாதியாக இருக்க வாய்ப்பு அதிகம். சாதாரணர்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துச் சொல்பவர் என்றும் கூறலாம். லத்தீன் மொழியில் ‘populus’ என்கிற சொல் மக்கள் என்பதைக் குறிக்கிறது. அதிலிருந்து உருவான சொல்தான் ‘populism’. ‘Populous’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மக்கள்தொகை அதிகம் உள்ள என்று பொருள். சீனா, இந்தியா ஆகியவை ‘populous countries’.

சமீபத்திய இடைத்தேர்தல் தொடர்பாக ‘tactical voting’ என்கிற சொற்றொடர் ஆங்கில நாளிதழ்களில் இடம்பெற்றது. ‘Tactical’ என்றால் சாமர்த்தியமாக அல்லது தந்திரமாக என்று பொருள்.

உங்களுக்கு பலா சின்னம் வைத்திருக்கும் கட்சியைத்தான் பிடிக்கும் என்றால், அதற்கு வாக்களிக்கவே நினைப்பீர்கள். ஆனால், ஆப்பிள், வாழை ஆகிய சின்னங்களைக் கொண்ட இரு கட்சிகளில், ஆப்பிள் கட்சியை உங்களுக்குப் பிடிக்காது. அதேவேளையில் உங்களுக்கு விருப்பமான பலா கட்சிக்கு, நீங்கள் வாக்களித்தாலும் அது ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. அப்படியெனில், நீங்கள் வாழைக் கட்சிக்கு வாக்களிப்பது ‘tactical voting’. அதாவது, ஆப்பிள் கட்சி வென்றுவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் வெளிப்பாடு இது.

(தொடரும்)

- ஜி.எஸ்.எஸ் | aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in