ஆங்கிலம் அறிவோமே 4.0 - 22: சீரியலில் சிட்காம்!

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 22: சீரியலில் சிட்காம்!
Updated on
2 min read

“Intercom’ என்பது தெரியும். ‘Sitcom’? இதற்கும் இதிலுள்ள’sit’ என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன?’ - இது ஒரு வாசகரின் கேள்வி.

‘Sitcom’ என்பது சில குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் குறிக்கிறது. அந்தத் தன்மைகள் என்ன? ஒவ்வொரு பகுதியிலும் நகைச்சுவையான சூழல்கள் இருக்கும். அந்தந்தப் பகுதிக்கான கதை நிகழ்வு அந்த ஒளிபரப்போடு முடிந்துவிடும். ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். அவற்றை அதே குறிப்பிட்ட நடிகர்கள்தான் ஏற்று நடிப்பார்கள்.

‘sitcom’ நிகழ்ச்சிகளுக்கான சில எடுத்துக்காட்டுகளைக் கூறினால் எளிதாக விளங்கிவிடும். ‘Mr.Bean’, ‘I love Lucy’, ‘ரமணி வெர்சஸ் ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. உட்காருவதைக் குறிக்கும் ‘sit’ என்ற வார்த்தைக்கும் ‘sitcom’ என்பதற்கும் தொடர்பு இல்லை.

‘Situation comedy’ என்ற இரு வார்த்தைகளின் சுருக்கமே ‘sitcom’.

***

‘தான் கலந்துகொள்ளவேண்டிய போட்டியைக்கூட இந்த டேவிட் வார்னால் நினைவு வைத்திருக்க முடியாதா?’ என்று அங்கலாய்த்தார் நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்த ஒரு நண்பர்.

அவரிடம் விளக்கம் கேட்டபோது அவருடைய குழப்பம் புரிந்தது. ‘David Warner to miss remainder of second Test’ என்ற செய்தித் தலைப்பில் உள்ள ‘remainder’ என்பதை நினைவூட்டல் என்று அவர் எண்ணிக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு அது!

‘Reminder’ வேறு. ‘Remainder’ வேறு. ’Remind’ என்றால் நினைவுபடுத்துவது. ‘Reminder’ என்றால் நினைவுபடுத்துவதற்கான ​தூண்டுதல். காலண்டரில் நினைவுக்காகத் தேதியைச் சுழித்து வைத்தால் அது ‘reminder’. காப்பீ​டுக்கான ப்ரிமீயம் தொகையை கட்டவில்லையென்றால் உங்களுக்கு ‘reminder notice’ வரக்கூடும்.

இதில், ‘remainder’ என்பது ‘remain’ என்பதிலிருந்து பிறந்த சொல். ‘Remain’ என்பதற்கு ஓரிடத்தில் தங்கி இருத்தல் (அதாவது நிலை மாறாது இருத்தல்) என்ற பொருள் உண்டு. அதே நேரம் எஞ்சியிருப்பது என்ற மற்றொரு பொருளும் உண்டு.

‘The fact remains’ என்ற மரபு வழக்குத் தொடருக்கு (idiom) ‘ஆனாலும் அதுதானே உண்மை’ என்று பொருள். ‘I know you’re sad now’, ‘but the fact remains that you hurt your sister’. ‘The share value of the company has come down’, ‘but the fact remains that the company still earns profits’.

எஞ்சியிருப்பது என்ற பொருளும் ‘remain’ என்ற சொல்லுக்கு உண்டு என்றோம் அல்லவா? அந்தப் பொருளை அடிப்படையாகக் கொண்டுதான் ‘remainder’ என்ற சொல் உருவாகி இருக்கிறது.

‘David Warner to miss remainder of second Test’ என்பதன் பொருள். இரண்டாவது டெஸ்ட்டின் எஞ்சிய பகுதியில் டேவிட் வார்னர் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார் என்பதுதான்.

***

‘Chill’ என்றால் குளிர்ச்சி. ஆனால், ‘I suddenly realized, with a chill, the danger ahead’ என்று ஒரு நாவலில் படித்தேன். அபாயத்தை அறிந்ததும் உடல் சில்லென்று குளிர்ச்சியானது என்பதை இது குறிக்கிறதா?’ என்று வினவுகிறார் ஒரு வாசக நண்பர்.

ஒரு பொருளைக் குளிர்விப்பதை ‘chill’ என்ற வார்த்தையின் மூலம் குறிக்கிறோம். ‘Be chill’ என்று ஒருவருக்கு அறிவுறுத்தினால் பதற்றப்படாமல் கூலாக இரு என்று பொருள்.

வரவிருக்கும் அபாயத்தை சட்டென்று உணர்ந்தபோது உடல் சில்லிட்டது என்பதைத்தான் அந்த நாவல் வாக்கியம் உணர்த்துகிறது.

(தொடரும்)

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in