பட்டப் படிப்பு தகுதி மட்டும் போதுமா?

பட்டப் படிப்பு தகுதி மட்டும் போதுமா?

Published on

கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் முன்பே வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு தரும் படிப்புகளைத் தேடிப் பட்டம் பெற்றது முந்தைய தலைமுறை. போட்டி மிகுந்த இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலையில் சேர பட்டப் படிப்பு மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலையில் சேர, படிப்பைத் தாண்டி பல தகுதிகளையும் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிவிட்டது.

உணர்த்தும் இந்தியர்கள்: இதையொட்டி ஓர் ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, மெக்சிகோ எனச் சர்வதேச அளவில் 11 நாடுகளில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பணியாளர்களிடம் ‘கோர்சரா’ என்கிற தனியார் ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. வேலைவாய்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவில், பல தகவல்கள் இன்றைய தலைமுறையினர் வேலைக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த 92 சதவீதம் பேர் கல்வித் தகுதிக்கு அப்பால் சிறப்புச் சான்றிதழ் வகுப்புகளில் தேர்ச்சிபெறுவது நல்ல வேலைக்குத் தேவையான ஒரு தகுதி எனத் தெரிவித்துள்ளனர். வேலையில் சேர, கிடைத்த வேலையைத் தக்கவைத்துக்கொள்ள, பதவி உயர்வுபெற என அலுவல் சம்பந்தமான எந்த முன்னேற்றத்துக்கும் பட்டப் படிப்பைத் தாண்டி சில சிறப்புப் படிப்புகளையும் படித்து, அதிலும் தேர்ச்சி பெற்றிருப்பது மிக உதவியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

என்ன படிக்கலாம்? - கலை, அறிவியல், பொறியியல் என எந்தத் துறையாக இருந்தாலும் மதிப்புக்கூட்டும் சான்றிதழ் படிப்புகளைப் படித்தவருக்கு வேலைவாய்ப்பின்போது நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதாக ஆய்வுத் தரவுகள் சொல்கின்றன. பொதுவாக வேலைவாய்ப்பு விளம்பரங்களில்கூட சிறப்புப் படிப்புகளின் தேவையைப் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகின்றன.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் நேரடியாக அல்லது இணைய வழியில் சிறப்புப் படிப்புகள் கற்பிக்கப்படுவதும் இன்று அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்தில் தொடங்கி ஆறு மாதங்கள் வரை நேரடியாக அல்லது இணைய வழியில் இந்தப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

கல்வித் தகுதியுடன் கூடுதல் தகுதிகள் இருக்க வேண்டும் என்கிற ஆர்வமும் நேரமும் இருக்கும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்துப் படிக்கலாம். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இணையவழிக் கல்வி, குறைந்த செலவில் வீட்டிலிருந்தபடியே தனித்திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பொறியியல், மேலாண்மை, தகவல் தொடர்பியல், கணினி ஆராய்ச்சி சம்பந்தமான துறைகளில் சிறப்புப் படிப்புகள் குவிந்து கிடக்கின்றன.

புதுப்பித்துக்கொள்ள வேண்டும் - அது மட்டுமல்ல, ஒரே துறையில் நீண்ட காலம் வேலையில் இருப்பவர்கள், தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவும், துறை சார்ந்து வேறு விருப்பத் துறையையும் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதற்குச் சான்றிதழ், பட்டயப் படிப்புகள் உதவுகின்றன. இதில் பெறும் தகுதி, பகுதி நேரமாக வேலை தேட வாய்ப்புகளை அளிக்கிறது. அது மட்டுமன்றி தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்க, அனுபவம் பெற, அதிகரிக்கும் புதிய போட்டியாளர்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிய பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் கூடுதலாகச் சிறப்புப் படிப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in