

“ஷேக்ஸ்பியர் நகைச்சுவை நூல்களை எழுதி இருக்கிறாரா?” என்று கேட்டார் நண்பர் ஒருவர். ஷேக்ஸ்பியருக்கு நகைச்சுவை உணர்வு நிறைய உண்டு. அங்கதமாகப் பல வாக்கியங்களைக் கூர்பட எழுதியிருக்கிறார். என்றாலும் நண்பர் எந்தக் கோணத்தில் கேட்கிறார் என்பதை அறிய மேலும் விசாரித்தேன்.
ஒரு புத்தக அரங்கில் ‘Shakespeare’s comedies' என்கிற தலைப்பில் அவரது சில நூல்களின் தொகுப்பு காணப்பட்டதாம். அவற்றில் நண்பர் அறிந்த ‘Merchant of Venice’ என்கிற நூலும் ஒன்று. வெடித்துச் சிரிக்கும்படி அந்த நூல் இல்லை என்பது நண்பரின் கருத்து. அதில் ஷைலக் என்கிற கதாபாத்திரத்தின் குரூரத்தனம் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும். அப்படி இருக்க, அந்த நூல் காமெடி பிரிவில் ஏன் வகைப்படுத்தப்பட்டது என்றும் நண்பர் கேட்டார்.
‘மகாநதி’கூட ஒரு காமெடித் திரைப்படம்தான்’ என்று நான் கூறியதும், ‘இந்தியர்கள் கண்டுபிடித்த எண்’ அளவுக்கு என் அறிவாற்றல் இறங்கிவிட்டதோ என்று சந்தேகித்தார் நண்பர். காமெடி என்பது நகைச்சுவை என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்தவரை காமெடி என்றால் (நாடகம், திரைப்படம் போன்றவை) அதன் முடிவு இன்பமாக இருந்தால் போதுமானது. ‘Tragedy’ என்றால் நாடகம் அல்லது படம் முழுவதும் சிரிக்கும்படியான காட்சிகள் இருந்தால்கூட இறுதியில் சோகத்தில் முடிவது.
‘மகாநதி’ திரைப்படம் முழுக்க முழுக்க சோகத்தில் பின்னப்பட்டிருந்தாலும் இறுதிக் காட்சியில் தன் குடும்பத்தினரோடு துள்ளலான பொங்கல் பாட்டு பாடுகிறார் கமல். அவர் குடும்ப நபர்கள் சிரித்து மகிழ்கிறார்கள். சுபம். எனவே ‘மகாநதி’ ஒரு காமெடி!
RBI lifts loan costs to tame inflation என்கிற செய்தி வாக்கியத்தில் RBI என்பது இந்திய ரிசர்வ் வங்கியைக் குறிக்கிறது என்பது புரிந்திருக்கும்.
Lifts? ‘Lift’ என்றதும் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தில் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல உதவும் மின்தூக்கி நினைவு வந்திருக்கும். ஆனால், இங்கே அந்தச் சொல் ‘verb’ ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு பொருளை ‘lift’ செய்வது என்றால் அதைத் தூக்குவது என்று பொருள். வேறு நிலைக்கோ வேறு இடத்துக்கோ நகர்த்துவதற்காகத் தூக்குவது.
‘The story is a little dull - Do something to lift it’. இப்படிக் குறிப்பிட்டால் அந்தக் கதையை மேலும் சுவைபட அல்லது மேலும் சிறப்பாக்க ஏதாவது செய்யவேண்டும் என்று பொருள். சோகமாகவோ சலிப்புடனோ உள்ள ஒருவரை உற்சாகமடைய வைக்க நீங்கள் எதையாவது செய்தால், ‘you are doing something to lift someone's spirits’ எனலாம். ஒருவரது கருத்தை அப்படியே காப்பி அடித்தால், அதை ‘lift’ என்கிற வார்த்தை மூலம் குறிப்பிடுவதுண்டு.
‘He had lifted the passages from a website.’ ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருவது எனும் பொருளிலும் ‘lift’ என்கிற வார்த்தை பயன்படுகிறது. ‘The rules were lifted. Tax restrictions were lifted.’ மற்றபடி சாலையில் வாகனத்தில் செல்வோரிடம் கட்டை விரலை உயர்த்திக் காட்டினால், நீங்கள் ‘lift’ கேட்கிறீர்கள் என்று பொருள். அந்த காரில் சற்று தூரம்வரை இலவசப் பயணம் செய்ய கோரிக்கைவிடுக்கிறீர்கள். ஒருவர் தானாகவே முன்வந்து ‘I'll give you a lift to the airport’ என்றும் கூறலாம்.
செய்தி வாக்கியம் உணர்த்துவது இதைத்தான். பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் அளிக்கிறது. அந்தக் கடனுக்கான தன் வட்டி விகிதத்தை அதிகரிப்பதைத்தான் ‘RBI lifts loan costs’ என்று உணர்த்துகிறது.
(தொடரும்)
- ஜி.எஸ்.எஸ்; aruncharanya@gmail.com