ஆங்கிலம் அறிவோமே 4.0 - 20: LOL முதல் OMG வரை

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 20: LOL முதல் OMG வரை
Updated on
2 min read

‘எனது அதிகாரி ஒருவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் ‘typo the’ என்று இருக்கிறது. வேறு எந்தத் தகவலும் இல்லை. இதற்கு என்ன பொருள்? கொஞ்சம் விளக்குங்களேன்’. இப்படிக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

‘Typo the’ என்பது தனிப்பட்ட ஒரு குறுந்தகவல் அல்ல. ‘Type’ செய்தவர் தவறான எழுத்தை உட்செலுத்தியதால் உண்டாகும் தவறை ‘typographical error’ என்பார்கள். இதன் சுருக்கமே ‘typo’.

வாசகரின் அதிகாரி ‘the’ என்பதற்குப் பதில் ‘teh’ என்பது போல் தவறாகப் பதிவிட்டிருக்கலாம். இதை உணர்ந்தவுடன் அந்த சரியான சொல்லை அறிவிக்கும் வகையில் ‘Typo the’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘Teh’ என்பதை ‘the’ என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், சில ‘typos’ விபரீதமான அல்லது மிகவும் நகைச்சுவையான அர்த்தத்தை அளித்துவிடக்கூடும். (எனவே தகவலை உட்செலுத்தியவுடன் அதை ஒருமுறை நன்கு படித்துவிட்டு பிறகு அனுப்புவது நல்லது)

‘My house is next to the stationary shop’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘typo’வை பலரும் பொருட்படுத்தாமல் அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள். இதில் என்ன ‘typo’ என்று கேட்பவர்களுக்கு, ‘stationary’ என்றால் அசையாத. ‘stationery’ என்றால் எழுதுபொருள் தொடர்பான (பேனா, பென்சில், ஸ்கேல், நோட்டு புத்தகம் போன்றவை).

குறுந்தகவல்களில் பயன்படுத்தப்படும் சில சுருக்கங்கள் குறித்து தெளிவு பெறுவோம்.

‘DM me for more info’ என்று ஒருவர் பதிவிட்டிருந்தால் மூன்று விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘Info’ என்பது ‘information’ என்பதன் சுருக்கம். ‘DM’ என்பது ’Direct message’ என்பதன் சுருக்கம். குழுவாக அமைந்துள்ள ஒரு சமூக ஊடகத்தில் ஒரு தகவலை கூறிவிட்டு ‘இது தொடர்பான அதிகப்படி தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமானால் (இந்தக் குழு தகவல் பரிமாற்றத்தில் அதை வெளிப்படுத்தாமல்) தனிப்பட்ட முறையில் என்னை அணுகுங்கள்’ என்று உணர்த்தப்படுகிறது.

‘IDK’ என்பது ‘I don’t know’ என்பதன் சுருக்கம். இதிலும் ஒரு டைபோ நிகழ்ந்து IDC என்பதாக மாறிவிட்டால் எதிராளியின் மனம் புண்படலாம் (அது I don’t care என்பதன் சுருக்கம்).

ஒருவர் நகைச்சுவையாக எதையோ குறிப்பிட்டு அது உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தால் ‘LOL’ என்று பதில் அளிக்கலாம். அதாவது, அந்தப் பதிவு உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்தது என்று பொருள். ‘Laughing out load’- விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு ஒருவரின் பதிவு இருந்தால்.

‘ROFL’ என்று குறிப்பிட்டு அவரை பெருமைப்படுத்தலாம்! ’Rolling on floor laughing’.

‘TMI’ என்பது ‘Too much information’. தேவைக்கதிகமான (முக்கியமாக அந்தரங்கமான) தகவல்களை ஒருவர் பகிர்ந்துகொள்ளும்போது இந்த சுருக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

‘OMG’ என்றால் ‘O My God’ என்பதும், ‘NVM’ என்றால் ‘Never Mind’ என்பதும் தெரிந்தவர்கள் ‘OMG, மேலே குறிப்பிட்ட விளக்கங்கள்கூட தெரியாதவர்கள் உண்டா!’ என்று சிலர் அலட்டிக் கொள்ளும்போது

‘NVM’ என்று கூறிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

(தொடரும் - தொடரின் முழு வடிவத்தை ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் வாசிக்கலாம்.)

- ஜி.எஸ்.எஸ்; aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in