

2023இல் வெளியான முக்கியமான இயர்புக்குகள் குறித்த அறிமுகத்தைப் பார்ப்போம்.
இந்து தமிழ் திசை இயர்புக் 2023
பக்கங்கள் - 800; விலை - ரூ.275/-
தொடர்புக்கு - 74012 96562
வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று ஐந்தாம் ஆண்டைத் தொட்டிருக்கும் ‘இந்து தமிழ் திசை இயர்புக்’ இந்த முறை இன்னும் சிறப்பான வடிவமைப்பில் மேம்பட்ட உள்ளடக்கத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்திய ஆட்சிப் பணி, டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் கமலாலயன் எழுதியுள்ள ’வரலாற்றை மாற்றிய 30 ஆளுமைகள்’ என்னும் சிறப்புப் பகுதி, அயோத்திதாசர், உ.வே.சா, ப.ஜீவானந்தம். பார்வதி கிருஷ்ணன், காகா காலேல்கர், பச்சேந்திரி பால், மேரி கியூரி, ரோசா பார்க்ஸ் உள்ளிட்ட தமிழ்நாடு, இந்திய, உலக அளவில் முக்கியமான ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது.
போட்டித் தேர்வுப் பயிற்சியாளர் ஜி.கோபாலகிருஷ்ணன் வெவ்வேறு தலைப்புகளின்கீழ் மொத்தம் 800 பொது அறிவு கேள்வி பதில்களைத் தொகுத்து அளித்துள்ளார். ’ஆங்கிலம் எளிது’ என்னும் சிறப்புப் பகுதி, ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்கான கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறது. அறிவியல், மருத்துவம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்குத் தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2023இல் சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற உள்ளதையொட்டி 1975 தொடங்கி 2019வரை நடந்துள்ள உலகக் கோப்பைத் தொடர்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுளன. ‘5 புதிய துறைகள் 10 புதிய வேலைகள்’ என்கிற தலைப்பில் புதிய துறைகள், புதிய வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன், மருத்துவர் கு.கணேசன், ஜி.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் ‘இயர்புக் 2023’இல் சிறப்புக் கட்டுரைகள், பகுதிகளுக்குப் பங்களித்திருக்கிறார்கள். போட்டித் தேர்வுக்கு தயாராகிறவர்கள் மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள நூல் இது.
மனோரமா இயர்புக் 2023
பக்கங்கள் - 736; விலை - ரூ.200/-;
தொடர்புக்கு - 044-6691 8530/31
தேசிய அளவில் புகழ்பெற்ற மனோரமா நிறுவனத்தின் தமிழ் இயர்புக்குக்கு இது 33ஆம் ஆண்டு. இதில் திபெத்தைச் சேர்ந்த ஆன்மிக குரு தலாய் லாமா ‘தற்காலத்துக்கும் பொருந்தும் தொன்மையான இந்திய ஞானம்’ என்னும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் சாமானிய மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்யும் சட்டங்களின் தொகுப்பு இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.
பாக்டீரியாக்கள் தொடர்பான விரிவான கட்டுரை அறிவியல் துறைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனத்தை நினைவுறுத்துகிறது. ‘கிக்’ தொழில் முறை பற்றிய கட்டுரை உலகின் புதிய தொழில்முகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. நூல் முழுவதும் பெட்டிச் செய்திகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பொது அறிவு ஆர்வலர்களுக்கான விருந்து.
விகடன் இயர்புக் 2023
பக்கங்கள் - 768; விலை - ரூ.350; தொடர்புக்கு - 95000 68144
விகடன் நிறுவனம் 11ஆம் ஆண்டாக இயர்புக்கை வெளியிட்டிருக்கிறது. ‘இயற்பியல் நோபல் பரிசு 2022 இரண்டாம் குவான்டம் புரட்சி’ என்னும் தலைப்பில் ஜோசப் பிரபாகர் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். ‘எதிர்காலத்தை மாற்றப் போகும் 2022-ன் முக்கியக் கண்டுபிடிப்புகள்’ என்னும் தொகுப்பு, கடந்த ஆண்டு உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகள் குறித்த அறிமுகத்தைத் தருகிறது.
நூலில் ஆங்காங்கே அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்களை வினா-விடை வடிவத்தில் கொடுத்திருப்பது போட்டித் தேர்வர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., த.உதயச்சந்திரன் இ.ஆ.ப, டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆனந்த் குமார் இ.ஆ.ப, டாக்டர் சுப திருப்பதி, செல்வ புவியரசன் ஆகியோர் எழுதியிருக்கும் சிறப்புக் கட்டுரைகள் இயர்புக்குக்கு வளம்சேர்க்கின்றன.
நக்கீரன் இயர்புக் 2023
பக்கங்கள் - 1120; விலை - ரூ.250;தொடர்புக்கு - 044 43993029, 43993000
நக்கீரன் நிறுவனம் 17ஆம் ஆண்டாக வெளியிட்டுள்ள இயர்புக் இது. ‘பொருளாதாரம்’ என்னும் பகுதியின் கீழ் 2022-23மத்திய பட்ஜெட், பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாடு பட்ஜெட், தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் ஆகியவை தொடர்பான விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. திட்டங்கள் பகுதியில் 2022இல் அறிவிக்கப்பட்ட மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்கள் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ‘பொது அறிவு’ பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவும். ‘தமிழ்நாடு’ பகுதியின் கீழ் சங்க இலக்கிய நூல்களின் பட்டியலும் அவை தொடர்பான தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ‘முக்கிய தினங்கள்’, ‘சர்வதேச ஆண்டுகள்’, ‘சர்வதேச வாரங்கள்’, ‘சர்வதேச பத்தாண்டுகள்’ ஆகியவற்றின் பட்டியலோடு இந்த இயர்புக் நிறைவுறுகிறது.