ஆங்கிலம் அறிவோமே 4.0 - 19: Flea market-ஐ எப்படி அழைப்பது?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 19: Flea market-ஐ எப்படி அழைப்பது?
Updated on
2 min read

Shops, business establishments and the weekly flea market were closed as part of the security exercise for the flag unfurling. இச்செய்தி வாக்கியத்தைக் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகர், ‘flea market’ என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியின்போது அரங்குகளில் புத்தகங்கள் விற்கப்பட, வெளியே சாலையின் நடைபாதைகளில் பழைய புத்தகங்கள் விற்பனை களை கட்டியது. இப்படிப்பட்ட, பழைய, பயன்படுத்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் சந்தையை ‘flea market என்று குறிப்பிடுவார்கள். ‘Weekly flea market’ என்றால் வாரந்தோறும் கூடும் இதுபோன்ற சந்தை.

‘Flea’ என்பது உண்ணி அல்லது ​தெள்ளுப்பூச்​சியைக் குறிக்கிறது (Fly என்றால் ஈ). மேலே குறிப்பிட்ட வகை அங்காடியை ‘ஃப்ளீ மார்க்கெட்’ என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்பதற்காகத் திருப்திகரமான விளக்கம் எதுவும் காணோம்.

செய்தி வாக்கியத்தில் உள்ள வேறு ஒரு வார்த்தைக் குறித்து வாசகர் கேட்கவில்லை என்றாலும் அதை விளக்கலாம். ‘Unfurl’ என்றால் அவிழ்ப்பது அல்லது விரிவடையச் செய்வது என்று பொருள். தேசியக் கொடியைக் கொடிக் கம்பத்தில் ஏற்றுவது ‘flag hoisting’.

கொடி ஏற்கெனவே உயரத்தில் ஏற்றப்பட்டு மடித்த நிலையில் கட்டப்பட்டிருக்கும். கீழிருந்து கயிறை இழுக்க அந்த மடிப்பு நீங்கி கொடி விரிந்து பறக்கும். (அப்போது அதில் இருக்கும் பூக்கள் கீழே விழும்). இது ‘flag unfurling’.

‘'Physical' என்பதை நீங்கள் விளக்கும்போது எனக்கு 'Physics' என்கிற பௌதிக அறிவியல் பாடம் விட்டுப் போய் விட்டது என என் மனம் உறுத்துகிறது. எனவே, இதுகுறித்து விளக்குங்களேன்’ என்கிறார் ஒரு வாசகர்.

‘Physical’ என்பதை உடல் தொடர்பான என்று குறிப்பிட்டிருந்தோம். இதன்தொடர்ச்சியாக ‘physique’ என்பதை மனித உடலை (அதன் வடிவத்தை) விவரிக்கும் ஒரு சொல் எனலாம். ‘​Powerful physique or muscular physique' என்பது கட்டுமஸ்தான உடற்கட்டைக் குறிக்கிறது.

'Physics' என்பது பன்மை போல தோற்றமளிக்கும் ஒருமைச் சொல். 'Physics' (இயற்பியல்–இதை முன்பு பெளதிகம் என்று குறிப்பிட்டனர்) என்பது 'physical science' என்பதன் நான்கு பிரிவுகளில் ஒன்று. மற்ற ​மூன்று வானியல்( astronomy), வேதியல்(chemistry), புவி சார்ந்த அறிவியல் (Earth Sciences-மண்ணியல் போன்றவை).
'Physical science' என்பது உயிர்ப்பில்லாத (தொட்டு உணரக்கூடிய) பொருள்கள் தொடர்பான அறிவியல். எனவே, இதில் விலங்கியல் (zoology), தாவரவியல் (botany), உயிரியல் (biology) போன்றவை அடங்காது.
​‘Physic’ என்ற வார்த்தையைத் தனியாகப் பயன்படுத்துவதில்லை. ‘physic garden’ என்பது மருத்துவத் தாவரங்கள் வளர்க்கப்படும் தோட்டத்தைக் குறிக்கும்.

The party is imploding’ என்ற செய்தி வாக்கியத்தின் இறுதிச் சொல்லான ‘imploding’ என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர். (அந்தச் செய்தி வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ள கட்சியின் பெயர் வேண்டாமே)

எக்கச்சக்கமான அழுத்தத்தின் காரணமாக ஒரு பொருள் நொறுங்குவதை அல்லது உள்ளுக்குள் சிதறுவதைக் குறிக்கிறது அந்த வார்த்தை. ‘All that stress made him implode’ என்றால் சூழ்நிலையின் கொதிநிலை காரணமாக அவர் மனம் உடைந்து விட்டார் என்று பொருள்.

‘Explode’ என்றால் வெளியே வெடித்து சிதறுவது என்று தெரியும் (Atomic explosion). ‘Implode’ என்பது அதற்கு எதிர்ச்சொல், அவ்வளவே.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in